2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது இன்று நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறவிருக்கிறது. தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் பங்கேற்றதற்குபிறகு சையத் முஷ்டாக் அலி டிரோபிக்கு திரும்பியிருக்கும் இளம் வீரர் திலக் வர்மா ஹைதராபாத் அணியை கேப்டனாக வழிநடத்துகிறார்.
இன்று தொடங்கிய சையத் முஷ்டாக் அலி தொடரின் முதல் டி20 போட்டியில் ஹைதராபாத் மற்றும் மேகாலயா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற மேகாலயா அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், மூன்றாவது வீரராக களமிறங்கிய கேப்டன் திலக் வர்மா 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் என வாணவேடிக்கை காட்டினார். திலக் வர்மா 67 பந்தில் 151 ரன்களை குவித்து அசத்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 248 ரன்கள் குவித்தது.
மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய மேகாலயா அணி ஹைதராபாத் பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 69 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. 179 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் +12.400 NRR உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
முதல் உலக வீரர்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்கள் அடித்த திலக் வர்மா, சையத் முஸ்டாக் அலி டிரோபியின் முதல் போட்டியிலும் சதமடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்த முதல் உலக வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
முதல் இந்திய வீரர்: ஹைதராபாத் அணிக்காக டி20 போட்டியில் 151 ரன்கள் குவித்திருக்கும் திலக் வர்மா, டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரராக மாறியுள்ளார். இதற்கு முன் சுப்மன் கில் அடித்த 126 ரன்களே ஒரு இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
அதுமட்டுமில்லாமல் சையத் முஸ்டாக் அலி டிரோபியிலும் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரராக திலக் வர்மா மாறியுள்ளார்.