Texas Super Kings twitter
T20

மீண்டும் வரும் மஞ்சள் படை! கான்வே, சான்ட்னர், ராயுடு, பிராவோ.. 4 பேரும் ஒரே அணியில்! எங்கு தெரியுமா?

அமெரிக்காவில் தொடங்கப்படவிருக்கும் புதிய டி20 லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் ஒரு சிஎஸ்கே கூட்டணி இணைந்து விளையாட உள்ளது.

Rishan Vengai

அமெரிக்காவில் முதல்முறையாக நடத்தப்படவிருக்கும் “மேஜர் லீக் கிரிக்கெட் டி20” என்ற டி20 லீக் போட்டியில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன. அதில் ஒரு அணியாக இருக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (TSK) அணிக்கு தலைமை பயிற்சியாளராக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 முறை கோப்பைக்கு அழைத்துச் சென்ற ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். சப்போர்ட்டிங்க் ஸ்டாப் முதற்கொண்டு ஒரு குட்டி சிஎஸ்கே அணியையே கட்டமைத்துள்ளது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்.

நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃப்ளெமிங் தலைமை பயிற்சியாளராகவும், எரிக் சிம்மன்ஸ் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஆல்பி மோர்கல் போன்றோர் துணை பயிற்சியாளர்களாக இணைகின்றனர். கிரிகோரி சூப்பர் கிங்ஸ் உரிமையின் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராகவும், பல வருடங்களாக சிஎஸ்கே அணியில் இருந்த லக்ஷ்மி நாராயணன் உயர் செயல்திறன் ஆய்வாளராகவும், டாமி சிம்செக் அணியின் பிசியோதெரபிஸ்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கான்வே, சான்ட்னர், ராயுடுவுடன் 'எல்லோ' ஆர்மியில் இணையும் டேவிட் மில்லர்!

பயிற்சியாளர்கள் மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியில் இருந்த டெவான் கான்வே, மிட்சல் சாண்ட்னர் மற்றும் அம்பத்தி ராயுடு 3 பேரும் இணைந்து விளையாடவிருக்கின்றனர். இவர்களுடன் தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரரான டேவிட் மில்லர், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் மற்றும் சவுத்ஆப்ரிக்கா டி20 லீக்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இளம் பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியும் சேர்ந்து விளையாடவிருக்கின்றனர்.

Conway-Santner

அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பத்தி ராயுடு, தற்போது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் ராயுடு, “அதே மஞ்சள் ..வேறு களம்... உற்சாகம்..” என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் “மேஜர் லீக் கிரிக்கெட் டி20” தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 31 வரை நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான டிவெய்ன் பிராவோ வீரராக பங்குபெறுகிறார்.

"டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், MI நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், சியாட்டில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம்" முதலிய 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன. சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கேப்டனாக வழிநடத்தவிருக்கிறார்.