Dhawan PTI
T20

SRHvPBKS | தவானின் ஆட்டம் வீண்... முதல் வெற்றியைப் பதிவு செய்த சன் ரைசர்ஸ்..!

ஷாலின் சாக்கர் குடும்பம் மீண்டெழுவதைப் போல, சன்ரைசர்ஸ் அணியின் பவுலிங் யூனிட் மீண்டெழுவதைக் கண்டு ஐதராபாத் ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். மற்ற அணி ரசிகர்களோ, இவனுங்க எதுக்குடா இப்போ ஃபார்முக்கு வந்தானுங்க என பயந்துபோனார்கள்.

ப.சூரியராஜ்

எப்படி விதவிதமாக தோற்பது என செய்துகாட்டி வரும் சன்ரைசர்ஸ் அணியும், எப்படி விதவிதமாக ஜெயிப்பது என செய்துகாட்டி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்றிரவு ஐதராபாத் மைதானத்தில் பலபரீட்சை நடத்தினார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை, பெரிதாக வேறு வேலை இல்லை என்பதால்தான் ஐதராபாத் ரசிகர்கள் இந்த மேட்சைப் பார்க்க அமர்ந்தார்கள். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ், பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. `ஆமா, அப்படியே விக்கெட்களை அறுவடை பண்ணிட்டாளும். நாங்க அசந்துதான் போயிடுவோம்' என ஐதராபாத் ரசிகர்கள் கடுப்பானார்கள். ப்ரப்சிம்ரனும் தவனும் பஞ்சாப்பின் இன்னிங்ஸை துவங்க, முதல் ஓவரை வீசினார் புவி. முதல் பந்தே, எல்.பி.டபிள்.யு. ரிவ்யூ கூட எடுக்காமல் நடையைக் கட்டினார் ப்ரப்சிம்ரன். `முதல் பந்து விக்கெட்லாம் பார்த்து, எவ்ளோ நாளாச்சு பங்காளி' என சன்ரைசர்ஸ் ரசிகர்கள் மலரும் நினைவுகளுக்குள் மூழ்கினார்கள். ஓவரின், 5வது பந்தில் தவன் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார்.

Prabhsimran Singh

2வது ஓவரை வீசினார் யான்சன். 2வது பந்திலேயே மேத்யூ ஷார்ட்டின் விக்கெட் காலி. ப்ரப்சிம்ரனுக்கு நடந்ததை அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்தது போலிருந்தது. `இதெல்லாம் அனுபவிக்கலாமா, வேண்டாமா' என குழம்பினார்கள் ஐதராபாத் ரசிகர்கள். ஜித்தேஷ் சர்மா, தேர்டு மேன் திசையில் ஒரு பவுண்டரியைத் தட்டினார். புவி வீசிய 3வது ஓவரில், மிட் ஆஃப் திசையில் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் கேப்டன் தவான். மீண்டும் வந்தார் யான்சன். இம்முறை காலியானது ஜித்தேஷ் சர்மா. மார்க்ரமிடம் ஈஸி கேட்ச் ஒன்றைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். ஷாலின் சாக்கர் குடும்பம் மீண்டெழுவதைப் போல, சன்ரைசர்ஸ் அணியின் பவுலிங் யூனிட் மீண்டெழுவதைக் கண்டு ஐதராபாத் ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். மற்ற அணி ரசிகர்களோ, இவனுங்க எதுக்குடா இப்போ ஃபார்முக்கு வந்தானுங்க என பயந்துபோனார்கள். யான்சன் வீசிய 6வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என சிறு நம்பிக்கைத் தந்தார், பெரிய தொகைக்கு வாங்கபட்ட சாம் கரண். ஸ்ரூவ்வ்வ்..! அந்த ஓவரில் ஒரு ரன் அவுட்டும் மிஸ் ஆனது, தவான் நூழிலையில் தப்பினார். பவர்ப்ளேயின் முடிவில் 41/3 என பரிதாபகரமான நிலையில் இருந்தது பஞ்சாப் கிங்ஸ்.

7வது ஓவரை வீசிய வாஷிங்டன், முதல் பந்தில் பவுண்டரி கொடுத்தும் 6 ரன்களில் ஓவரை முடித்தார். நடராஜனின் 8வது ஓவரில், இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் கேப்டன் தவான். ஷிகரும், கரணும் அமைதியாக அடித்தளம் போடும் வேலையை, கண்டு உணர்ந்துவிட்ட மார்க்ரம், மார்கண்டேவிடம் பந்தைக் கொடுத்தார். மார்கண்டே வீசிய 3வது பந்தில் ஒரு பவுண்டரியைத் தட்டிய சாம், ஐந்தாவது பந்தில் அவுட் ஆனார். ஷார்ட் தேர்டு மேனில் இருந்த புவியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ப்ரப்சிம்ரனுக்கு பதிலாக சிக்கந்தர் ரஸாவை இம்பாக்ட் வீரராக இறக்கினார் தவான். 10வது ஓவர் வீசிய காஷ்மீர் எக்ஸ்ப்ரஸின் வேகத்தை தாக்குப்பிடிக்க இயலாமல், விக்கெட்டைப் பறிகொடுத்தார் ரஸா. 10 ஓவர் முடிவில், 73/5 என பாதி மூழ்கியிருந்தது பஞ்சாப்.

Shikhar Dhawan

11வது ஓவரை வீச மீண்டும் வந்தார் மார்கண்டே. முரட்டு கூக்ளி ஒன்றை வீசி, ஷாரூக்கானின் விக்கெட்டை சாய்த்தார். எல்.பி.டபிள்யு! 12வது ஓவரில், 148 கி.மீ வேகத்தில் ஒரு பந்தை வீசினார் உம்ரான் மாலிக். ஹர்ப்ரீத் ப்ராரின் விக்கெட்டை வேரோடு சாய்த்தது. அடுத்த பந்து, 149 கி.மீ வேகத்தில், கேட்சை கோட்டை விட்டார் கீப்பர். அடுத்த ஓவரில், ராகுல் சாஹரின் விக்கெட்டை சாய்த்தார் மார்கண்டே. மீண்டும் எல்.பி.டபிள்யு. உம்ரான் வீசிய 14வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் தவான். மார்கண்டேவின் 15வது ஓவரில், எல்லீஸின் விக்கெட்டும் காலி. 15 ஓவர் முடிவில் 88/9 என முழுதும் மூழ்கிவிட்டது பஞ்சாப். அணியின் ஸ்கோர், 100 ரன்களையாவது எட்டுமா என ஏக்கம் கொண்டார்கள் பஞ்சாப் ரசிகர்கள். கையிலிருப்பது ஒரு விக்கெட். அதுவும், ஒரு பவுலரின் விக்கெட். இன்னும் 30 பந்துகள் கையிலிருக்கிறது. தவான் ஒரு ஆட்டம் ஆடினார். ரிங்கு சிங்கின் கடைசி ஓவர் சாகசம் சரவெடி என்றால், தவானின் ஆட்டம் கம்பி மத்தாப்பு. நின்று நிதானமாக, அழகாக ஆட்டம் காட்டியது.

நடராஜன் வீசிய 16வது ஓவரில், மிட் விக்கெட்டில் ஒன்று, ஃபைன் லெக்கில் மற்றொன்று என இரண்டு சிக்ஸர்களை விளாசினார் தவான். 42 பந்துகளில் தனது அரைசதத்தையும் கடந்தார். மீண்டும் வந்தார் புவி, ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரி. ஆரஞ்ச் கேப்பை மீண்டும் தனதாக்கினார் தவான். 18வது ஓவரை வீசினார் உம்ரான். 2வது பந்து, புவியின் கைகளுக்குள் சிக்க வேண்டியது. சிக்ஸராக விழுந்தது. அடுத்த பந்து, லாங் ஆஃபில் பவுண்டரிக்கு விரைந்தது. 5வது பந்தில், ஃபைன் லெக்கில் இன்னொரு சிக்ஸரை விளாசினார் தவான். இந்த ஒரு ஓவரில் மட்டும் 17 ரன்கள். 19வது ஓவரை வீசவந்தார் தவான். ஓவரின் 2வது பந்தில் பவுலருக்கே கேட்ச் கொடுத்தார் தவான். இந்த இன்னிங்ஸில் மட்டும் மூன்றாவது முறையாக, தவானின் கேட்சைத் தவறவிட்டார் புவனேஷ். அடுத்த 2 பந்துகள், பவுண்டரிக்கு பறந்தன. விதவிதமான ஷாட்களை எல்லாம் டெஸ்ட் செய்துக்கொண்டிருந்தார். 60 பந்துகளுக்கு 91 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார் கேப்டன் தவான். கடைசி ஓவரை வீசவந்தார் நடராஜன். அற்புதமாக வீசபட்ட ஓவரில், கடைசிப்பந்தில் சிக்ஸ் அடித்தும் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார் தவான். 88/9 என்றிருந்த ஸ்கோரை, தனி மனிதனாக போராடி 143/9 என இன்னிங்ஸை நிறைவு செய்தார் தவான். அற்புதமான இன்னிங்ஸ்! ஈட்டி பாய்ந்த உடம்போடு சண்டையிட்ட ஒரு மாமன்னன், தன் உடம்பில் பாய்ந்த ஈட்டியை எடுத்து எதிரிகள் மீது எறிந்ததில் உள்ள தீரம், தவானின் இன்னிஸில் தெரிந்தது.

Shikhar Dhawan

144 எனும் இலக்கைத் துரத்திப் பிடிக்க களமிறங்கினர் ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால் ஜோடி. முதல் ஓவரை வீசிய சாம் கரண், முதல் பந்தில் ஒரு பவுண்டரி மட்டும் கொடுத்தார். 2வது ஓவரை வீசவந்தார் அர்ஷ்தீப் சிங். கவர் திசையில் ஒன்று, ஃபைன் லெக்கில் ஒன்று என இரன்டு பவுண்டரிகளை விரட்டினார் மயங்க் அகர்வால். ப்ரார் வீசிய 3வது ஓவரில், எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரியைப் பறக்கவிட்டார் மயங்க். அர்ஷ்தீப் வீசிய 4வது ஓவரில், முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு சிதறடித்தார் ப்ரூக். 117 கி.மீ வேகத்தில் வந்த ஒரு க்னக்கல் பந்தில் விக்கெட்டையும் பறிகொடுத்தார். வாங்கிய 13 கோடிக்கு 13 ரன்கள் அடித்துவிட்டு, `வரட்டா மாமேய்' என கிளம்பினார் ப்ரூக். எல்லீஸ் வீசிய 5வது ஓவரில், 3 ரன்கள் மட்டுமே. சாம் கரணின் 6வது ஓவரில் வெறும் 4 ரன்கள். பவர்ப்ளேயின் முடிவில், 34/1 என ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தது ஐதராபாத் அணி.

ராகுல் சஹார் வீசிய 7வது ஓவரில், ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் த்ரிபாதி. ஆனால், அந்த ஓவரில் வந்த ஸ்கோர் இது மட்டும்தான். 8வது ஓவரை வீசிய ப்ராரும், 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 9வது ஓவரை வீசிய பாம்பு சஹார், அகர்வாலின் மீது விஷத்தைக் கக்கினார். `திருந்தமாட்டீங்கள்ல, வருந்தமாட்டீங்கள்ல' என சன்ரைசர்ஸ் டீமைப் பார்த்து ரசிகர்கள் வெறியானார்கள். கேப்டன் மார்க்ரம் உள்ளே வந்தார். ஓவரின், கடைசி 2 பந்தில் 2 பவுண்டரிகளை பறக்கவிட்டார் த்ரிப்பாதி. அதன் பிறகு, த்ரிப்பாதி `பீஸ்ட் மோடு'க்கு சென்றுவிட்டார். ஹர்ப்ரீத் ப்ராரின் ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரிகள். 10 ஓவர் முடிவில் 67/2 என மெல்ல தலையைத் தூக்கிப் பார்த்தது சன்ரைசர்ஸ்.

ராகுல் சாஹரின் 11வது ஓவரில், மீண்டும் 2 பவுண்டரிகளை வெளுத்தார் த்ரிப்பாதி. இன்னொரு பக்கம், எல்லீஸின் ஓவரில் ஒரு பவுண்டரியைப் பறக்கவிட்டார் கேப்டன் மார்க்ரம். மோகித் ரதீ, ஐ.பி.எல் தொடரின் தனது முதல் ஓவரை விசவந்தார். த்ரிப்பாதி ஒரு சிக்ஸர் அடித்து, தனது அரை சதத்தை நிறைவு செய்தார். 42 பந்துகளில் 50 ரன்கள் தேவை. த்ரிப்பாதி - மார்க்ரமின் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் வந்தது. ரதீயின் 15வது ஓவர் களைக்கட்டியது. மாக்ரம், எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டினார். த்ரிப்பாதியோ, மிட் விக்கெட்டில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸரும், ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரியும், ஸ்கொயரில் இன்னொரு பவுண்டரியும் அடித்து நொறுக்கினார். 21 ரன்கள் இந்த ஓவரில் மட்டும்.

Rahul Tripathi

சாம் கரண் வீசிய 16வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே. எல்லீஸின் 17வது ஓவரில், மார்க்ரம் 4 பவுண்டரிகள் அடித்து துவம்சம் செய்தார். 18 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவை. ப்ரார் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தை த்ரிப்பாதி பவுண்டரிக்கு அடிக்க, மேட்சும் முடிந்தது. த்ரிப்பாதி - மார்க்ரம் இணையின் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் வந்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி. ஐதராபாத் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். அணியாக தோற்றாலும், அணி தலைவனாக, ஒரு வீரனாக வென்ற தவானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.