நடந்து முடிந்த இந்தியா vs ஆப்கானிஸ்தான் T20 தொடரின் மூன்றாவது போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டி டையில் முடிய, முடிவை எட்ட நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டை ஆனது. அதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட, அதை வென்று ஆப்கானிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி. ஆனால், இந்த பரபரப்பையெல்லாம் விட சூப்பர் ஓவரின் போது ரோஹித் ஷர்மா இரண்டாவது முறையாக பேட்டிங் செய்ய வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சூப்பர் ஓவர் விதிப்படி, ஏற்கெனவே அவுட் ஆன பேட்ஸ்மேன் மீண்டும் பேட்டிங் செய்யக்கூடாது. ஏற்கெனவே பந்துவீசிய பௌலர் மீண்டும் பந்துவீசக் கூடாது. அப்படியிருக்கையில், இரண்டாவது சூப்பர் ஓவர் தொடங்கியபோது இந்திய வீரர் ரிங்கு சிங் உடன் களமிறங்கினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. அப்போது ஒட்டுமொத்த அரங்குமே அதிர்ச்சியடைந்தது. ஏனெனில், முதல் சூப்பர் ஓவரில் ரோஹித் ஷர்மா அவுட் ஆகியிருந்தார். அவர் அவுட் என்று தான் ஒவ்வொருத்தருமே நினைத்திருந்தார்கள்!
முதல் சூப்பர் ஓவரில் இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தது. 17 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய, 5 பந்துகள் முடிவில் 15 ரன்கள் எடுத்திருந்தது. கடைசிப் பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஸ்டிரைக்கில் இருந்தார். ரோஹித் ஷர்மா மறுமுணையில் இருந்தார். அப்போது நடுவரிடம் தொடர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார் ரோஹித். சில நொடிகள் கழித்து பெவிலியன் நோக்கி நகர ஆரம்பித்த அவர், ஏதோ சைகை காட்ட, வேகமாக களத்துக்குள் நுழைந்தார் ரிங்கு சிங். 2 ரன்கள் ஓடவேண்டும் என்பதால், அதற்கு சரியான ஆள் ரிங்குவாக இருப்பார் என்று கருதி இந்த முடிவை எடுத்தார் இந்திய கேப்டன். அவர் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறுகிறார் என்று கூறப்பட்டது. அப்போது ரோஹித்தின் அந்த முடிவு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
கடைசிப் பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் மட்டுமே எடுக்க, சூப்பர் ஓவர் டை ஆனது. அதனால் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்கியது இந்திய அணி. ரிங்கு சிங் உடன் ரோஹித்தை பார்த்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் கூட குழப்பமடைந்திருந்தனர். அனைவரும் குழம்பியிருந்த நிலையில், ரோஹித் ரிட்டையர்ட் அவுட் ஆகவில்லை, ரிட்டையர்ட் ஹர்ட் ஆகியிருக்கிறார் என்று கூறப்பட்டது. இது மிகப் பெரிய தவறு என்று பலரும் விமர்சித்தனர். ஒரு வீரர், அவரால் அந்த சூழ்நிலையில் ஆட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டால் மட்டுமே ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற முடியும். அந்த வீரர்கள் தான் அதன்பின் களமிறங்க முடியும். தவிர்க்க முடியாத காரணங்கள் எதுவும் இல்லாமல்வெளியேறும் வீரர்கள் ரிட்டையர்ட் அவுட் ஆனதாகவே கணக்கில் கொள்ளப்படும். ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் வெளியேறியது அந்த முறை தான். அப்படி வீரர்கள் வெளியேறுவது விக்கெட் போனதாகவே கணக்கில் எடுக்கப்படும்.
இப்படியிருக்கும்பட்சத்தில் ரோஹித் ஷர்மா முதல் சூப்பர் ஓவரில் அவுட். ஆனால் நடுவர்கள் அவரை ரிட்டையர்ட் அவுட் என்று கருதாமல், ரிட்டையர்ட் ஹர்ட் என்று கருதியிருக்கிறார்கள். இது மாபெரும் தவறு. இந்தப் போட்டியை முழுமையாகப் பார்க்கும்பட்சத்தில், எந்த அளவுக்கு நடுவர்களின் முடிவில் ரோஹித் ஷர்மாவின் தாக்கம் இருந்தது என்பது புரியும்.
ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்தில் ஃபைன் லெக் திசையில் ஒரு பௌண்டரி சென்றது. அதை நடுவர் லெக் பை என்று அறிவித்தார். அந்த ஓவர் முடிந்தபோது நடுவரிடம் 'அது இவ்ளோ பெரிய பேட்டில் பட்டு போகிறது. அதற்குப் போய் லெக் பை கொடுத்திருக்கிறீர்களே' என்றார் ரோஹித். அதன்பிறகு 14வது ஓவரில் ஒரு பந்து இடுப்பு உயரத்துக்கு மேல் வந்தது. ஆனால் அதற்கு நடுவர் நோ பால் கொடுக்கவில்லை. ஓவர் முடிந்ததும் அதற்காகப் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ரோஹித். அதற்குப் பலனாக சில பந்துகள் கழித்து நோ பாலே இல்லாத ஒரு பந்துக்கு நோ பால் கொடுத்தார் நடுவர். நட்சத்திர வீரர்கள் இதுபோல் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது ஒரு சில நடுவர்கள் நெருக்கடிக்கு ஆளாகிவிடுகிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே சூப்பர் ஓவரிலும் ரோஹித்தின் வாக்குவாதத்தால் நடுவர்கள் நெருக்கடிக்குள்ளாகி அவருக்கு சாதகமான முடிவைக் கொடுத்திருக்கவேண்டும்.