Umesh Yadav Twitter page
T20

“யோசிக்காதீங்க.. அடிச்சு ஆடுங்க..னு உமேஷ் அண்ணா சொன்னார்” ரிங்கு சிங் நெகிழ்ச்சி!

ரிங்கு சிங் இரண்டாவது சிக்ஸரை அடித்தபோது எனது ​​நம்பிக்கை அதிகரித்தது என்கிறார் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா.

Justindurai S

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல்லின் 16வது சீசன் கடந்த 31ஆம் தேதி தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 13வது லீக் போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள்!

இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதில், கடைசி 5 பந்துகளை சிக்ஸருக்கு தூக்கி அமர்க்களப்படுத்தினார் ரிங்கு சிங். கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், யாஷ் டயலின் முதல் பந்தில் உமேஷ் யாதவ் 1 ரன் எடுத்தார். அதன்பிறகு, தொடர்ச்சியாய் 5 பந்துகளை சிக்ஸருக்கு தூக்கி அதகளப்படுத்தியதுடன், ஒரேநாளில் சில சாதனைகளையும் படைத்தார் ரிங்கு சிங்.

ஐபிஎல் கடைசி ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்

அதன்படி, ஐபிஎல் தொடரின் கடைசி ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக நேற்றைய போட்டி அமைந்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரை வீசிய யாஷ் டயல், 6 பந்துகளில் 29 ரன்களை வாரி வழங்கி இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கொல்கத்தா அணி 205 ரன்கள் இலக்கை கடந்து 207 ரன்கள் குவித்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ரிங்கு சிங் 21 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததால், ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Rinku Singh

போட்டிக்குப்பின் ரிங்கு சிங் பேசுகையில் “என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ‘நம்பிக்கை வைத்து கடைசி வரை விளையாடுங்கள், பிறகு என்ன நடக்கிறது’ என்று பார்ப்போம் என்று ராணா கூறினார். கடைசி ஓவருக்கு முன்பாக நான் சிங்கிள் எடுக்க முயற்சி செய்யவில்லை. அப்போது என்னிடம் ‘சிக்ஸர் அடிக்கவே முயற்சி செய்தேன். எதைப் பற்றியும் அதிகம் யோசிக்க வேண்டாம், பந்துக்கு தகுந்தவாறு விளையாடுங்கள்’ என்று உமேஷ் அண்ணா என்னிடம் கூறினார். நானும் எதைப் பற்றியும் பெரிதாக யோசிக்கவில்லை. வீசப்படும் பந்துக்கு ஏற்ப ரியாக்ட் செய்தேன். எனக்கு நம்பிக்கை இருந்தது; கடைசியாக அது நடந்தது” என்றார்.

கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில், ''எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் கடைசி ஓவரின் கடைசி பந்தில் கூட மாற்றங்கள் நடக்கும், நமக்கு சாதகமான நிலை கிடைக்கும் என்பதை ஒரு கேப்டன் நம்ப வேண்டும். ரிங்கு இரண்டாவது சிக்ஸரை அடித்தபோது எனது ​​நம்பிக்கை அதிகரித்தது. அவர் அதை செய்து முடித்தார்.

Rinku SIngh

அதேநேரம் நிதர்சனத்தில், நூற்றில் ஒரு போட்டியில்தான் இதுபோன்ற ஒரு அதிசய வெற்றியை நாம் காணலாம். அப்படியொரு போட்டியாக இது அமைந்தது'' என்றார்.