இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல்லின் 16வது சீசன் கடந்த 31ஆம் தேதி தொடங்கி, தற்போது விறுவிறுப்பாய் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 13வது லீக் போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதில், கடைசி 5 பந்துகளை சிக்ஸருக்கு தூக்கி அமர்க்களப்படுத்தினார் ரிங்கு சிங். கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், யாஷ் டயலின் முதல் பந்தில் உமேஷ் யாதவ் 1 ரன் எடுத்தார். அதன்பிறகு, தொடர்ச்சியாய் 5 பந்துகளை சிக்ஸருக்குத் தூக்கி அதகளப்படுத்தியதுடன் ஒரேநாளில் சில சாதனைகளையும் படைத்தார்.
அதன்படி, ஐபிஎல் தொடரின் கடைசி ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இன்றைய போட்டி அமைந்தது. இன்றைய போட்டியில் கடைசி ஓவரை வீசிய யாஷ் டயல், 6 பந்துகளில் 29 ரன்களை வாரி வழங்கி இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஏற்கெனவே இந்தப் பட்டியலில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணி உள்ளது.
அந்த அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2016ஆம் ஆண்டு கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் 3வதாக குஜராத் டைட்டன்ஸ் உள்ளது. அது, கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது குஜராத் அணிக்கு எதிராகவே கொல்கத்தா அணி சாதனை படைத்துள்ளது.
அதுபோல் ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர்கள் குறித்துப் பார்ப்போம். முதலில் இந்தப் பட்டியலில் சன் ரைசர்ஸ் அணியின் வீரர் பாசில் தம்பி உள்ளார். அவர் கடந்த 2018ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். தொடர்ந்து 2வது இடத்தில் இன்றைய போட்டியில் வாரி வழங்கிய யாஷ் டயல் உள்ளார். அவர் 69 ரன்களை வழங்கியுள்ளார்.
3வது இடத்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா உள்ளார். அவர் கடந்த 2013ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தபோது, சென்னை அணிக்கு எதிராக 66 ரன்களை வழங்கியுள்ளார். 4வது இடத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த முஷிபீர் ரகுமான், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 66 ரன்களை வழங்கியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து கடைசி இடத்தில் மற்றொரு இந்திய பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அங்கம் வகிக்கிறார். அவர் கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லி அணியில் இடம்பிடித்திருந்தபோது ராயல் சேலஞ்ர்ஸ் அணிக்கு எதிராக 65 ரன்களை வழங்கியுள்ளார்.
அடுத்து ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5 பந்துகளில் சிக்ஸர்கள் அடித்த பேட்டர்களைப் பார்ப்போம். கடந்த 2012ஆம் ஆண்டு ராயல் சேலஞ்ர்ஸ் அணியில் இடம்பிடித்திருத்த கிறிஸ் கெய்ல், புனே வாரியர்ஸுக்கு அணிக்கு எதிராக ராகுல் சர்மாவின் ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை அடித்தார். ஐபிஎல்லில் அன்று அவர் தொடர்ச்சியாக 5 சிக்ஸர் அடித்து ஆரம்பித்துவைத்த நேரம், இன்று ரிங்கு சிங் வரை தொடர்கிறது.
இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ராகுல் திவேதியா உள்ளார். அவர், கடந்த 2020ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஷெல்டன் காட்ரெல் ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்தார். 3வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான ரவீந்திர ஜடேஜா, கடந்த 2021ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக ஹர்சல் படேல் ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.
அதாவது லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த மார்கஸ் ஸ்டோனிஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரான ஷிவம் மவி ஓவரில் முதல் 3 பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பினார். 4வது பந்தில் அவர் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் கடைசி 2 பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பினார்.
இந்த ஆட்டத்தில் மட்டும் இடையில் ஒரு பந்தில் விக்கெட் விழுந்தது. என்றாலும் ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் இந்த சாதனையும் இணைந்தது. இறுதியில், இன்றைய போட்டியில் 5 சிக்ஸர்கள் விளாசிய ரிங்கு சிங் இடம்பிடித்தார். அவர், குஜராத் அணிக்கு எதிராக யாஷ் டயல் வீசிய கடைசி ஓவரின் 5 பந்துகளிலும் சிக்ஸர் அடித்து மிரளவைத்தார்.