லிவிங்ஸ்டன் - சாம் கரன் cricinfo
T20

PBKS vs DC |அதிரடியில் மிரட்டிய சாம்கரன், லிவிங்ஸ்டன்; தோல்வியில் முடிந்த பண்ட் கம்பேக்! PBKS வெற்றி

2024 ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

Rishan Vengai

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2024 ஐபிஎல் தொடரானது மார்ச் 22ம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், ஆர்சிபி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ஒரு அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியானது டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சண்டிகரில் நடைபெற்றுவருகிறது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுவந்து கிரிக்கெட் களத்திற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

விறுவிறுப்பான இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான், முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.

174 ரன்கள் குவித்த டெல்லி அணி!

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஸ் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். டாப் ஆர்டர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் மற்றும் சாய் ஹோப் 3 பேரும் இரண்டு இரண்டு சிக்சர்களாக பறக்கவிட்டு கெத்துகாட்ட 8 ஓவர்களில் 74 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

warner

ஆனால் கிடைத்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்திக்கொள்ளாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி வீரர்கள், அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளினர். ரிஷப் பண்ட் மீண்டும் களத்திற்கு வந்து இரண்டு பவுண்டரிகளை விரட்டினாலும் 18 ரன்களில் அவரும் வெளியேற, அடுத்தடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி சொதப்பினர்.

abishek porel

எப்படியும் டெல்லி அணி 150 ரன்கள்தான் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சை எதிர்கொண்ட இளம் வீரர் அபிஷேக் போரல் ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு 25 ரன்கள் அடித்து கலக்கிப்போட்டார். அபிஷேக் போரலின் கடைசி நேர அதிரடியால் 174 ரன்களை எடுத்தது டெல்லி அணி.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன்!

175 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விரட்டி நல்ல தொடக்கத்தை கொடுத்தார். 3 ஓவர்களுக்கு 30 ரன்களை கடந்து பஞ்சாப் நல்ல நிலைமையில் இருக்க ஷிகர் தவானை போல்டாக்கி வெளியேற்றிய இஷாந்த் சர்மா, ஜானி பேர்ஸ்டோவை ரன் அவுட் மூலம் வெளியேற்றி அசத்தினார்.

sam curran

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் மற்றும் சாம் க்ரன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த ஐபிஎல்லில் சிறப்பான ஃபார்மில் ஜொலித்த பிரப்சிம்ரன் 5 பவுண்டரிகளை பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன் வெளியேற, தொடர்ந்து களத்திற்கு வந்த ஜிதேஷ் சர்மாவும் 9 ரன்களில் வெளியேறி அதிர்ச்சிகொடுத்தார்.

sam curran - Liam Livingstone

என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற சாம் கரன் பஞ்சாப் கிங்ஸ் அணி தன்னை தக்கவைத்ததற்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்த சாம்கரன் 63 ரன்கள் அடித்து வெளியேற, கடைசிவரை களத்திலிருந்த லிவிங்ஸ்டன் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

19.2 ஓவரில் இலக்கை எட்டிய பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ரிஷப் பண்ட்டின் கம்பேக் போட்டியானது தோல்வியுடன் முடிந்துள்ளது. ஆட்டநாயகனாக சாம் கரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.