Cameron Green  PTI
T20

MIvSRH |ராஜஸ்தான் அவுட்... ஆனால் மும்பை பிளே ஆஃப் சென்றதா... காத்திருப்போம்..!

மும்பையின் இந்த வெற்றி ராஜஸ்தானை தொடரிலிருந்து வெளியேற்றியிருக்கிறது. இப்போது எல்லாரின் கவனமும் பெங்களூர் எப்படி ஆடப்போகிறது என்பதில்தான்.

Nithish

இந்த 16 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மிகப் பரபரப்பான வீக்கெண்ட் இதுவாகவே இருக்கமுடியும். மொத்தம் நான்கு போட்டிகள். அந்த நான்கு போட்டிகளே ப்ளே ஆப்பிற்குள் நுழையும் மூன்று அணிகளைத் தீர்மானிக்கும் என்கிற நிலை இதற்கு முன் இருந்ததே இல்லை. சனிக்கிழமை நடந்த இரு போட்டிகளும் இரு ப்ளே ஆப் அணிகளை கொடுத்துவிட்ட நிலையில் ஞாயிறு நடக்கும் இரண்டு போட்டிகளுமே எஞ்சிய ஓரிடத்திற்கான அணியை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த போட்டிகள். அதில் முதலாவதில் மோதின மும்பையும் ஹைதராபாத்தும்.

Rohit

மும்பைக்கான கணக்கு சென்னை, லக்னோவைப் போல எளிதானதில்லை. கட்டாயம் இந்தப் போட்டியில் வென்றாக வேண்டும். பெங்களூர் தோற்றுவிட்டால் எந்தப் பிரச்னையுமில்லை. இல்லாவிட்டால் ரன்ரேட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மும்பையின் ரன்ரேட் 13 போட்டிகள் முடிவில் -0.128. பெங்களூருவுடைய ரன்ரேட் +0.180. இந்த ரன்ரேட்டை தாண்ட, ஹைதராபாத்துடனான போட்டியில் மும்பை முதலில் பேட் செய்தால் குறைந்தது 81 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும். சேஸிங் என்றால் இலக்கை 70 பந்துகள் மிச்சமிருக்கும் நிலையில் வெல்ல வேண்டும். ஒருவேளை இதில் ஏதாவது ஒன்று நடந்தாலும் அடுத்த போட்டியில் ஆர்.சி.பி வெல்லும்பட்சத்தில் மும்பை பெற்ற வெற்றி பயனில்லாமல் போய்விடும். இப்படியான இடியாப்பச் சிக்கல் கணக்குகள் மண்டையில் ஓட களமிறங்கியது மும்பை அணி.

வான்கடே சேஸிங்கிற்கு சாதகமான மைதானம். 200+ ரன்களாய் இருந்தாலும் எளிதாய் சேஸ் செய்துவிடலாம். மும்பையே இந்த சீசனில் பலமுறை அதை செய்து காட்டியிருக்கிறது. அதை மனதில் வைத்து டாஸ் வென்றதும் பீல்டிங்கை தேர்வு செய்தார் ரோஹித். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம். ஹ்ரித்திக் ஷோகீனுக்கு பதில் குமார் கார்த்திகேயா. ஹைதராபாத் அணியில் நான்கு மாற்றங்கள். அபிஷேக் சர்மா, ராகுல் த்ரிபாதி, அப்துல் சமத், கார்த்திக் தியாகி வெளியே. அவர்களுக்கு பதில் விவ்ராந்த் சர்மா, மயாங்க் அகர்வால், சன்வீர் சிங் மற்றும் கடந்த போட்டியில் சர்ச்சை பேசுபொருளான உம்ரான் மாலிக்.

Vivrant Sharma and Mayank Agarwal

பெஹ்ரண்டாப் வீசிய முதல் ஓவரிலும் க்ரீன் வீசிய இரண்டாவது ஓவரிலும் தலா ஐந்து ரன்கள். மெதுவான தொடக்கம் என்பதால் மூன்றாவது ஓவரிலிருந்து அடித்து ஆடத்தொடங்கினார்கள் ஓபனர்கள் விவ்ராந்தும் மயாங்க்கும். ஓவருக்கு இரண்டு பவுண்டரிகள் போய்க்கொண்டே இருந்தன. ஒருபக்கம் விவ்ராந்த் முதல் போட்டி என்பதால் மிக நிதானமாய் ஆட, அவருக்கும் சேர்த்து ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்தி விளையாடினார் மயாங்க். ஆறு ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 53/0.

இந்த சீசனில் மும்பைக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்தியிருக்கும் பியூஷ் சாவ்லாவை பவர்ப்ளே முடிவில் அழைத்துவந்தார் ரோஹித். வந்தவரை சிக்ஸ் அடித்து வரவேற்பு கொடுத்தார் விவ்ராந்த். அதன்பின்னர் பல ஓவர்களுக்கு ரன்ரேட் ஒன்பதுக்கு குறையாமல் இருந்தது. ரோஹித்தும் ஜோர்டன், குமார் கார்த்திகேயா, பியூஷ் என மூவரையும் மாற்றிப் மாற்றிப் பயன்படுத்திப் பார்த்தார். எந்தப் பயனுமில்லை. ஜோர்டன் வீசிய பத்தாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார் விவ்ராந்த். அறிமுகமாகும் போட்டியிலேயே அரைசதம் கடந்த முதல் சன்ரைஸர்ஸ் வீரரானார் விவ்ராந்த். அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள். ஸ்கோர் பத்து ஓவர்கள் முடிவில் 93/0.

Vivrant sharma

சன்ரைஸர்ஸ் புயல் அதன்பின்னும் ஓயவில்லை. சிக்கிய பந்துகளில் எல்லாம் பவுண்டரி தட்டினார்கள். பெஹ்ரண்டாஃப் வீசிய 13வது ஓவரில் தொடர்ந்து ஒரு பவுண்டரியும் சிக்ஸும் அடித்து தன் பங்கிற்கு அரைசதம் தொட்டார் மயாங்க். ஹெல்மெட்டைக் கழற்றி அதை அவர் கொண்டாடியவிதமே சொன்னது அவருக்கு இந்த அரைசதம் எவ்வளவு முக்கியமென்பதை. அந்த ஓவரில் அதிகபட்சமாய் 19 ரன்கள். ஸ்கோர் 130/0, 13 ஓவர்கள் முடிவில். ஒருபக்கம் ரோஹித் சர்மா விரக்தியின் உச்சத்திற்கே சென்றுகொண்டிருந்தார். அவருக்கு ஆசுவாசம் அளித்தது 14வது ஓவரை வீசிய ஆகாஷ் மத்வால்தான். ஏற்கனவே டயர்டாகி இருந்த விவ்ராந்துக்கு ஷார்ட் பால் போட்டு ஆசை காட்ட தூக்கியடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார் விவ்ராந்த். 47 பந்துகளில் 69 ரன்கள். அறிமுகப் போட்டியில் ஒரு இந்திய வீரர் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

ஆனால் மயாங்க் ஓயவேயில்லை. க்ளாசனுக்கு வேலையை வைக்காமல் சிக்ஸரும் பவுண்டரியுமாக அடித்துக்கொண்டிருந்தார். 16 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 168/1. இன்னும் நான்கு ஓவர்கள் மிச்சமிருக்கும் நிலையில் 220-ஐ கடந்துவிடும் ஸ்கோர் என்றுதான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் கடைசி நான்கு ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தியது மும்பை. 17வது ஓவரை வீசிய மத்வால் மயாங்க்கை பெவிலியன் அனுப்பினார். ஐ.பி.எல்லில் ரன்கள் வாரி வழங்கும் ஜோர்டனும் அதிசயமாய் 18வது ஓவரை அழகாய்ப் போட அதில் ஆறே ரன்கள். மத்வால் வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்து க்ளாசனும் ஹாரி ப்ரூக்கும் அவுட்டாக ஸ்கோர் தேங்கி நின்றது. மத்வாலுக்கு மொத்தமாய் நான்கு விக்கெட்கள். கடைசி ஓவரில் ஜோர்டன் லெக் ஸ்டம்ப்பில் வீசிய டாஸ் பாலை சன்வீர் தொட, 18 பந்துகளுக்குப் பின் வந்தது ஒரு பவுண்டரி. கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து சம்பிரதாயத்தை முடித்துவைத்தார் மார்க்ரம். ஸ்கோர் 200/5. மிடில் ஓவர்களில் சன்ரைஸர்ஸ் எடுத்த 115 ரன்களே அந்த அணி ஐ.பி.எல் மிடில் ஓவர்களில் சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ரன்கள்.

Akash Madhwal

இதற்கு முன்னரும் இப்படியான ஸ்கோரை சேஸ் செய்திருப்பதால் அலட்டிக்கொள்ளாமல் களமிறங்கினார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். மொத்த கனமும் இப்போது அனுபவம் குறைந்த ஹைதராபாத் பவுலர்கள் தலையில். இம்பேக்ட் பிளேயராய் உள்ளே வந்த கார்த்திக் தியாகிதான் முதல் ஓவர். அதில் ஏழே ரன்கள். நிதிஷ் குமார் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் சர்ரென ஒரு சிக்ஸ் அடித்தார் கிஷன். அடுத்த பந்து பவுண்டரிக்கு. ஆனால் அடுத்த ஓவர் வீசிய புவியின் அனுபவத்திற்கு முன்னால் அவரால் தாக்குபிடிக்க முடியவில்லை. ஷார்ட் பாலை நோக்கி பேட்டை வீச, மிட்விக்கெட் பக்கம் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் ப்ரூக்.

களத்தில் இப்போது க்ரீனும் ரோஹித்தும். இருவரும் ஜாலியாய் ஆடினார்கள். டாகரின் ஓவரில் ஆளுக்கொரு பவுண்டரி அடித்தார்கள். நிதிஷ் குமார் வீசிய அடுத்த ஓவரில் க்ரீன் கொடுத்த கேட்ச்சை சன்வீர் தவறவிட அடுத்த பந்தே இறங்கி வந்து சிக்ஸ். இது போதாதென நோ பாலில் சிக்ஸர் வேறு கொடுத்தார் அடுத்த ஓவர் வீசிய கார்த்திக் தியாகி. அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள். ஸ்கோர் பவர்ப்ளே முடிவில் 60/1. அதுவரை தட்டிக்கொண்டிருந்த ரோஹித்தும் அதன்பின் இறங்கிவந்து ஆட ஆரம்பித்தார்.

Rohit Sharma

டாகர் வீசிய 7வது ஓவரில் க்ரீன் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட, விவ்ராந்த் வீசிய ஒன்பதாவது ஓவரில் ரோஹித் சிக்ஸ் பறக்கவிட்டார். உடனே அதே ஓவரில் க்ரீன் இன்னொரு சிக்ஸர் அடிக்க, அதற்கடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார் ரோஹித். இப்படி போட்டி போட்டுக்கொண்டு இவர்கள் பறக்கவிட்டதில் பாடாய்ப் பட்டது பந்து. பத்து ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 114/1. மார்க்ரமும் என்னென்னமோ செய்து பார்த்தார். ம்ஹும். ரன்ரேட் கட்டுப்படவே இல்லை. அடுத்த மூன்று ஓவர்கள் 34 ரன்கள்.

ஒருவழியாய் 14வது ஓவரில் டாகர் பந்தில் ஓய்ந்தார் ரோஹித். ஆனால் விதி சிரித்தபடி ஸ்க்ரீனில் சூர்யகுமார் யாதவ் இறங்குவதைக் காட்ட கண்ணைக் கட்டியது ஹைதராபாத் ரசிகர்களுக்கும் பெங்களூர் ரசிகர்களுக்கும். உம்ரான் மாலிக் வீசிய 16வது ஓவரில் க்ரீனும் சூர்யாவும் இழுத்த இழுப்பில் 20 ரன்கள். சடுதியில் எண்பத்தி சொச்ச ரன்களுக்கு வந்துவிட்டார் க்ரீன். 17வது ஓவரில் மேலும் 13 ரன்கள். க்ரீன் இப்போது 90களில். ஒருபக்கம் இலக்கு நெருங்கிக்கொண்டே வர மறுபக்கம் க்ரீனின் சதமும் நெருங்கியது. சுதாரித்த சூர்யா பவுண்டரி தட்டாமல் பொறுமை காத்தார். 18வது ஓவரின் கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவை. க்ரீனுக்கும் சதமடிக்க ஒரு ரன் தேவை. இந்தப் பந்தை விட்டால் அடுத்த ஓவர் சூர்யா ஸ்ட்ரைக்கில். அவர் ரன்னே எடுக்காமல் ஒரு ஓவர் முழுக்க ஒப்பேற்ற வேண்டும். அது விமர்சனத்திற்குள்ளாகவும் வாய்ப்புண்டு, இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் சிங்கிள் தட்ட வந்தது சதமும் வெற்றியும். ஆட்ட நாயகனும் சந்தேகமே இல்லாமல் அவர்தான்.

Cameron Green

மும்பையின் இந்த வெற்றி ராஜஸ்தானை தொடரிலிருந்து வெளியேற்றியிருக்கிறது. இப்போது எல்லாரின் கவனமும் பெங்களூர் எப்படி ஆடப்போகிறது என்பதில்தான். வென்றாலே போதும் என்கிற நிலையில் பெங்களூர் இருப்பதால் பல்லைக் கடித்தபடி காத்திருக்கத்தான் வேண்டும் மும்பை ரசிகர்கள்.