texas Super kings  texas Super kings
T20

MLCPlayoffs | சேலஞ்சரில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்ற சூப்பர் கிங்ஸ்..!

19வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை சேஸ் செய்தது MI நியூ யார்க்.

Viyan

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் சேலஞ்சர் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது MI நியூ யார்க். தொடரின் முதலிரு போட்டிகளில் தோற்றிருந்த அந்த அணி அதற்கடுத்து மிகச் சிறந்த கம்பேக் கொடுத்து இப்போது இறுதிப் போட்டி வரை முன்னேறியிருக்கிறது!

MLC முதல் சீசன் ஜூலை 13ம் தேதி டெக்சாஸ் கிராண்ட் பிராய்ரி மைதானத்தில் தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் தவித்து மற்ற 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. முதலிரு இடங்கள் பெற்ற சியாட்டில் ஓர்காஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் குவாலிஃபயர் போட்டியில் மோதின. சூப்பர் கிங்ஸை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது சியாட்டில்.

எலிமினேட்டர் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வீழ்த்திய MI நியூ யார்க் சேலஞ்சர் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 2 என்று அழைக்கப்படும் போட்டி, அமெரிக்காவில் சேலஞ்சர் என்று அழைக்கப்படுகிறது. குவாலிஃபயரில் தோற்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை எதிர்த்து சனிக்கிழமை அதிகாலை மோதியது நியூ யார்க்.

டாஸ் வென்ற MI நியூ யார்க் கேப்டன் நிகோலஸ் பூரண் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ரெகுலர் கேப்டன் கரண் பொல்லார்ட் கடைசி லீக் போடிட்யில் காயமடைந்ததால், பூரண் பிளே ஆஃப் சுற்றில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

MI அணிக்கு ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் வழக்கம்போல் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே டெக்சாஸ் கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸியை வெளியேற்றினார் அவர். தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கும் ஃபாஃப் வெறும் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் ஆடியிருக்கும் அவர், 46 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இரண்டு போட்டிகளில் டக் அவுட் வேறு ஆகியிருக்கிறார். வழக்கம்போல் அதன்பிறகு அவர்கள் பேட்டிங் ஆர்டரும் சற்று தடுமாறத் தொடங்கியது.

Texas Super Kings

டெவன் கான்வே சற்று நிதானமாக விளையாடினார். அவருக்கு மிலிந்த் குமார் மட்டும் சற்று பார்ட்னர்ஷிப் கொடுத்தார். கான்வே 38 ரன்களிலும், மிலிந்த் 37 ரன்களிலும் வெளியேறினர். மற்றபடி வேறு எந்த வீரரும் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. ஃபாஃப் போல் தொடர்ந்து தடுமாறிவரும் டேவிட் மில்லரும் 17 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்களில் ஆல் அவுட் ஆனது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ். டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து மூன்றாவது போட்டியாக அவர் 4 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

Trent Boult

இந்த MLC தொடரில் இதுவரை 7 போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டியிருக்கிறார். வழக்கமாக பவர்பிளேவில் மட்டும் மிரட்டும் அவர், இந்தத் தொடரில் டெத் ஓவர்களிலும் நிறைய விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

அடுத்து MI நியூ யார்க் பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஒரு ஓப்பனர் ஷயான் ஜெஹாங்கிர் அதிரடியாக அடித்து ஆட, மற்றொரு ஓப்பனர் ஸ்லேட் வேன் ஸ்டேடன் சற்று தடுமாறினார். இறுதியில் 12 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் எடுத்து ரஸ்டி தெரான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஸ்டேடன். அடுத்து களமிறங்கிய கேப்டன் பூரண் நிதானமாக விளையாடினார். ஜெஹாங்கிர் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சவாஜ் பந்துவீச்சில் வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய டிவால்ட் பிரெவிஸ் பொறுமையாக ஆட்டத்தைக் கையாண்டார்.

பூரண் அவுட் ஆகி வெளியேறிய பின் களம் புகுந்த டிம் டேவிட் பிரெவிஸோடு இணைந்து ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார். ஓரளவு செட் ஆன பின் இருவரும் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து ரன் சேர்த்தனர். 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து டேவிட் வெளியேறினர். கடைசி கட்டத்தில் டேவிட் வீஸா, பிரெவிஸ் இருவரும் விக்கெட் விழாமல் அணியை பாதுகாப்பாக கரைசேர்த்தனர். 19வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை சேஸ் செய்தது MI நியூ யார்க்.

திங்கள் கிழமை அதிகாலை நடக்கும் இறுதிப் போட்டியில் MI நியூ யார்க் அணி சியாட்டில் ஓர்காஸ் அணியை சந்திக்கிறது.