`தீயினால் சுட்ட புண் உள்ளாறும். ஆறாதே ரிங்கு சிங் அடித்த அடி' என குஜராத் அணி அவ்வப்போது அதை நினைத்து அழுதுகொண்டுதான் இருக்கிறது. இதை சரி செய்யும் விதமாக, ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தாவை எதிர்த்து களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ். டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.
ஒருவழியாக முந்தைய போட்டியில்தான் கொல்கத்தா அணியின் ஓபனிங் ஜோடி செட்டாகி இருந்தது. இந்நிலையில் ஜேசன் ராய்க்கு காயம் ஏற்பட, ஜெகதீசன் - குர்பாஸ் என இன்னொரு ஒபனிங் காம்பினேஷனை இறக்கிவிட்டது கொல்கத்தா. குஜராத் அணியோ வழக்கப்படி முகமது ஷமியை வைத்தே முதல் ஒவரைத் தொடங்கியது.
ஷமி வீசிய முதல் ஓவரின் முதல் 4 பந்துகளை, அழகாக டாட் பந்துகளாக்கினார் ஜெகதீசன். குர்பாஸ் அருகே வந்து, `கோட்டைசாமி எழுந்திரு' என எழுப்பிவிட்டதும் ஒரு சிங்கிளைத் தட்டினார். 2வது ஓவரை வீசவந்தார் ஹர்திக். மீண்டும் ஜெகதீசனா என கொல்கத்தா ரசிகர்களே பீதியானார்கள். 2வது பந்து, எட்ஜில் பட்டு பவுண்டரிக்கு பறந்தது. ஒருவழியாக, 4வது பந்தில் நறுக்கென ஒரு பவுண்டரி அடித்தார் ஜக்கி. கடைசி பந்திலும் ஒரு பவுண்டரி அடிக்க, கொல்கத்தா ரசிகர்கள் சாந்தமானார்கள்.
3வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த ஜக்கி, அதே ஓவரில் அவுட்டும் ஆனார். ஷமியிடம் எல்.பி.டபிள்யு முறையில் விக்கெட்டையும், ஒரு ரிவ்யூவையும் பறிகொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். அடுத்து களமிறங்கினார் ஷர்தூல்! `என்ன அதுக்குள்ளே லார்டு வந்துட்டார்' என எல்லோருக்கும் அதிர்ச்சி! ஹர்திக்கின் 4வது ஓவரில், இரண்டு சிக்ஸர்களைத் தூக்கி கடாசினார் குர்பாஸ். ஷமியின் 5வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அட்டகாசமாக துவங்கினார் குர்பாஸ். ஆனால், ஷர்தூல் கடைசிப்பந்தில் அவுட்டாகி சோகமாய் முடித்தார். தூக்கி அடிக்கப்பட்ட பந்தின் பின்னாலேயே ஓடிச்சென்று அற்புதமான கேட்ச் பிடித்தார் மோகித். 6வது ஓவரை வீசவந்தார் ரஷீத். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பறக்கவிட்டார். பவர்ப்ளேயின் முடிவில் 61/2 என சிறப்பாக தொடங்கியிருந்தது நைட் ரைடர்ஸ்.
ஜோஸ் லிட்டிலின் 7வது ஓவரில், ஒரு பவுண்டரியுடன் சேர்த்து 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ரஷீத்தின் 8வது ஓவரில், 9 ரன்கள். லிட்டில் வீசிய 9வது ஓவரில், 27 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் குர்பாஸ்.
10வது ஓவரை நூர் அகமதிடம் கொடுத்தார் பாண்டியா. சிறப்பாக பந்து வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பத்து ஓவர் முடிவில் 84/2 என கொல்கத்தாவை இறுக்கி பிடித்திருந்தது குஜராத். லிட்டிலின் 11வது ஓவரின் முதல் பந்திலேயே வெங்கி காலி! மீண்டும் எல்.பி.டபிள்யு. மீண்டும் ரிவ்யூ வீணாக்கினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ராணா, 3வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் அவுட் ஆனார். பேக்வார்டு பாயின்ட்டில் நின்றுகொண்டிருந்த திவாட்டியாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு அமைதியாக நடையைக் கட்டினார். நூர் அகமதின் 12வது ஓவரில், குர்பாஸ் ஒரு சிக்ஸர் அடித்தார். அவர் அமைதியாவது போல் தெரியவில்லை. டைட்டன்ஸ், அவரை விட்டுவிட்டு மற்றவர்களின் விக்கெட்களை கழட்டிவிடலாம் என முடிவு செய்தது. ஹர்திக்கின் 13வது ஓவரை சிக்ஸருடன் துவங்கினர குர்பாஸ். பசு மூலையில் பந்து பறந்தது. மோகித்தின் 14வது ஓவரை சிக்ஸருடன் வரவேற்றது ரிங்கு!
15வது ஓவரை வீசவந்தார் ரஷீத். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பறக்கவிட்டர் குர்பாஸ். 15 ஓவர் முடிவில் 134/4 என பிடியைத் தளர்த்தி மீண்டும் எழுந்தது கொல்கத்தா அணி. நூர் அகம்தின் 16வது ஓவரில், ஒரு வழியாக குர்பாஸின் விக்கெட் சாய்ந்தது. ரஷீத் கானிடம் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். ரஷீத் கானின் 17வது ஓவரில், ரஸல் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். 4-0-54-0 என ரஷீத் கானை வெச்சி செய்தது கொல்கத்தா. நூரின் 18வது ஓவரில் ஒரு பவுண்டரி தட்டினார் ரஸல். 3வது பந்தில் ரிங்கு அவுட். லிட்டிலிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். கேட்ச் பிடித்த கையோடு லிட்டிலே அடுத்த ஓவரை வீச, வீசா ஒரு சிக்ஸரை வீசினார். ஷமி வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என கொளுந்துவிட்ட ரஸலை, கடைசிப்பந்தில் விக்கெட் எடுத்து அணைத்தார் ஷமி! 179/7 என எட்டிவிடக்கூடிய இலக்கை நிர்ணயித்து இன்னிங்ஸை நிறைவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
மோகித் சர்மாவுக்கு பதில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சுப்மன் கில்லும், சாஹாவும் குஜராத்தின் இன்னிங்ஸைத் துவங்கினார்கள். ஹர்ஷித் ராணா முதல் ஓவரை வீசினார். வெறும் 3 ரன்கள் மட்டுமே. ரஸலின் 2வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார் கில். முதல் ஓவரை சிறப்பாக வீசிய தெம்போடு 3வது ஓவரை வீசவந்த ராணாவை, ஹாட்ரிக் பவுண்டரியும் ஒரு கேப் விட்டு இன்னொரு பவுண்டரியும் அடித்து அமைதியாக்கினார் கில். 4வது ஓவரை வருண் சக்ரவர்த்தியிடம் கொடுத்தார் கேப்டன் நிதீஷ் ராணா. முதல் பந்து, சாஹாவின் பேட்டிலிருந்து பவுண்டரிக்கு பறந்தது. 5வது ஓவரை வீசிய ரஸல், முதல் பந்திலேயே சாஹாவின் விக்கெட்டைக் கழட்டினார். ஹர்ஷித் ராணாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார் சாஹா. அடுத்து களமிறங்கிய ஹர்திக், அதே ஓவரில் ஒரு பவுண்டரியும் விளாசினார். வருணின் 6வது ஓவரில், கில் ஒரு பவுண்டரி அடித்தும் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பவர்ப்ளேயின் முடிவில் 52/1 என ஓரளவுக்கு நன்றாக தொடங்கியிருந்தது குஜராத்.
7வது ஓவரை வீசவந்தார் சுயாஷ். முதல் பந்து லெக் பைஸில் பவுண்டரி. 5வது பந்து, கில் ஒரு பவுண்டரி அடித்தார். நரைன் வீசிய 8வது ஓவரில், பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சுயாஷின் 9வது ஓவரில் ஹர்திக் ஒரு பவுண்டரி விரட்டினார். மீண்டும் நரைன் வர, ஒரு சிக்ஸ்ரை பரிசாக கொடுத்தார் ஹர்திக். 10 ஓவர் முடிவில் 89/1 என விரட்டிவந்தது குஜராத். இன்னும் 60 பந்துகளில் 91 ரன்கள் தேவை.
ஹர்ஷித்தின் 11வது ஓவரில், ஹர்திக் தனது விக்கெட்டை இழந்தார். நரைன் வீசிய 12வது ஓவரில், கில்லும் காலி! ஒரு ரன்னில் அரைசதத்தை நழுவ விட்டு நடையைக் கட்டினார். விஜய் சங்கரும், கில்லர் மில்லரும் ஜோடி சேர்ந்தனர். சுயாஷின் 13வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. வருணின் 14வது ஓவரில், மில்லர் ஒரு பவுண்டரி விளாசினார். சுயாஷ் வீசிய 15வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை மில்லர் பறக்கவிட, சங்கர் ஒரு பவுண்டரி தட்டினார். 30 பந்துகளில் 51 ரன்கள் தேவை.
ரஸலின் 16வது ஓவரின் முதல் பந்திலேயே, மில்லர் கொடுத்து எளிய கேட்சை டிராப் செய்தார் சுயாஷ்! அதே ஓவரில், ஒரு சிக்ஸரை அடித்து மிளகாய் பொடி தூவினார் சங்கர். வருணின் 17வது ஓவரில், மூன்று சிக்ஸர்கள் விளாசினார் விஜய் சங்கர். கூடுதலாக லெக் பைஸில் ஒரு பவுண்டரியும். 18 பந்துகளில் 14 ரன்கள் தேவை என ஆட்டம் தலைகீழாக மாறியது. நிதீஷ் ராணா வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த சங்கர், அதே ஓவரில் ஒரு சிக்ஸரும் அடித்து தனது அரைசதத்தையும் கடந்தார், ஸ்கோரையும் சமன் செய்தார். அடுத்த பந்து அகலபந்தாகிப் போக, 7 விக்கெட் வித்தியாசத்தின் நைட் ரைடர்ஸை வீழ்த்தியது டைட்டன்ஸ். 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்திய ஜோஸ் லிட்டில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.