சோத்துலேயும் அடி வாங்கியாச்சு, சேத்துலேயும் அடி வாங்கியாச்சு என்பதைப் போல கடந்த இரண்டு மேட்சுகளிலும் மரண அடி வாங்கிய டெல்லி, காயம் ஆறுவதற்குள் அடுத்த அடியை வாங்க அசாம் வந்து இறங்கியது. கடந்த மேட்ச்சை பஞ்சாப்பிடம் பறிகொடுத்த கோவத்தை யாரிடம் இறக்கிவைப்பது என ராஜஸ்தான் அணி, வெறிக்கொண்டு காத்திருக்க குறுக்கே வந்து நின்றுவிட்டது டெல்லி அணி. டெல்லி அப்பளம் பொறிப்பது எப்படி என ராஜஸ்தான் சொன்ன செய்முறை இதோ...
தனக்கு திருமணம் என்பதால், ஆஸ்திரேலியா பறந்துவிட்டார் மிட்ஷெல் மார்ஸ். அடி வாங்க ஆள் குறைந்த சோகத்திற்கு போன வார்னரை, டாஸ் சந்தோஷப்படுத்தியது. ராயல்ஸ் அணியை பேட்டிங் ஆட அழைத்தார். `புஷ்பா 2' படத்தின் புதிய புரோமா வெளியாகியிருப்பதால், வார்னர் இன்று குஷியாக இருப்பார் என நம்பினர் டெல்லி ரசிகர்கள். ஜோஸ்-வால் ஜோடி ஓபனிங் இறங்க, கலீல் அகமது முதல் ஓவரை வீசினார்.
முதல் பந்தே மிட் விக்கெட் திசையில் பவுண்டரிக்கு பறந்தது. இரண்டாவது பந்து, டீம் தேர்டு மேனாக நின்றுகொண்டிருந்த முகேஷ் குமார் கோட்டை விட்டதில் எல்லைக் கோட்டைத் தாண்டியது. மூன்றாவது பந்து, எக்ஸ்ட்ரா கவர் திசையில் இன்னொரு பவுண்டரி. ஹாட்ரிக் பவுண்டரியுடன் தொடங்கியது ராஜஸ்தான். வார்னர் நெஞ்சைப் பிடித்தார். நான்காவது பந்து டாட். ஐந்தாவது பந்து லாங் ஆன் திசையில் மறுபடியும் ஒரு பவுண்டரி. கடைசிப் பந்து என கருணை காட்டாமல் அதையும் ஷார்ட் தேர்டு திசையில் பவுண்டரிக்கு தட்டிவிட்டார் ஜெய்ஸ்வால். முதல் ஓவரே 20 ரன்கள். டெல்லி ரசிகர்கள் பாதி பேர், மதியமே குட்நைட் சொல்லிவிட்டு உறங்கச் சென்றார்கள்.
2வது ஓவரை வீசவந்தார் நோர்க்யா. 3வது பந்தை பவுண்டரிக்கு தட்டினார் பட்லர். ஐந்தாவது பந்து ஷார்ட் தேர்டு மேன் திசையிலும், கடைசிப்பந்து, கவர் திசையிலும் பவுண்டரிக்கு பறந்தது. முதல் 12 பந்துகளில் 8 பவுண்டரிகள். 3வது ஓவரை வீசிய முகேஷ் குமார், ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே கிடைத்தது. 4வது ஓவரை வீசினார் கலீல். முதல் பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விரட்டினார் ஜெய்ஸ்வால். ஓவரின் கடைசிப்பந்தில், பட்லர் அடித்த பந்து கொடியேற, கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் நோர்க்யா. டெல்லி அணியின் இரும்பு மனிதர் அக்ஸர் படேலை அழைத்துவந்தார் வார்னர். ஓவரின் 3,4,5வது பந்துகளில் மீண்டும் ஒரு ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார் ஜெய்ஸ்வால். நோர்க்யா வந்தார். ஹாஃப் வாலியாக வீசபட்ட 4வது பந்தில், மிட் ஆஃப் திசையில் ஓங்கி அறைந்தார் பட்லர். பவர் ப்ளேயின் முடிவில், 68/0 என காலரைத் தூக்கிவிட்டது ராஜஸ்தான்.
`ஒரு விக்கெட்டையாவது தூக்கணும்' என மீண்டும் அக்ஸர் படேலை அழைத்தார் வார்னர். ஓவரின் 4வது பந்து, ஜெய்ஸ்வாலின் பேட்டில் இருந்து பவுண்டரிக்கு பறந்தது. அடுத்த பந்தில் இன்னொரு பவுண்டரி. 25 பந்துகளில் தனது ஐந்தாவது ஐ.பி.எல் அரை சதத்தை நிறைவு செய்தார். 8வது ஓவரை வீசவந்தார் சீனா மேன் குல்தீப். ஒவரின் 2வது பந்து ஷார்ட் தேர்டு மேன் திசையில் ஒரு பவுண்டரி. 4வது பந்தோ, லாங் ஆஃபில் சிக்ஸருக்கு பறந்தது. ஆட்டத்தின் முதல் சிக்ஸர். மீண்டும் கடைசி பந்தில் இன்னொரு பவுண்டரி.
9வது ஓவரை வீசிய முகேஷ் குமார், ஒரு அரைக்குழி பந்தை போட்டு ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை காலி செய்தார். பேக் ஆஃப் லென்த்தில் வீசபட்ட பந்தை அடிக்கப்போய், பவுலரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடி ஆட்டம் முடிவுக்கு வந்தது. குல்தீப் வீசிய 10வது ஓவரில், பந்தை இழுத்தடிக்கச் சென்று நோர்க்யாவிடம் கேட்ச் கொடுத்து கிளம்பினார் கேப்டன் சஞ்சு. ராஜஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். 10 ஓவர் முடிவில், 103/2 என நல்ல நிலையில் இருந்தது ராஜஸ்தான்.
அக்ஸர் வீசிய 11வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. குல்தீப்பும் 12வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி நான்கு ஓவர்களில், கையிலிருந்த நழுவிய காத்தாடியை மீண்டும் இழுத்துப் பிடித்தது டெல்லி. அக்ஸர் வீசிய 13வது ஓவரில், ஒரு சிக்ஸரை அடித்து தனது அரை சதத்தை நிறைவு செய்தார் பட்லர்! வார்னர் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, பாவெல்லை பவுலிங் போட அழைத்தார். அவரும் வந்து, பராக்கின் விக்கெட்டை படக்கென எடுத்து கொடுத்தார். ஸ்டெம்புகள் தெறித்தது. குல்தீப் வீசிய 15வது ஓவரிலும் பவுண்டரிகள் ஏதுமின்றி, 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 30 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து, இன்னிங்ஸின் முதல் 5 ஓவர்களை டி20 போலவும், அடுத்து 5 ஓவர்களை ஒருநாள் போட்டிகள் போலவும், கடைசி 5 ஓவர்களை டெஸ்ட் போலவும் ஆடியிருந்தது ராயல்ஸ்.
முகேஷ் வீசிய 16வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரி அடித்து, குளுக்கோஸ் ஊட்டினார் பட்லர். பாவெல் வீசிய 17வது ஓவரில், மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸரும், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியும் அடித்தார் ஹெட்மயர். நோர்க்யா வீசிய 18வது ஓவரில் மீண்டும் ஒரு கேட்ச் மிஸ். இம்முறையும் அதே நோர்க்யா. ஹெட்மயர் தப்பித்தார். அடுத்து அதே ஓவரில் இரண்டு பவுண்டரிகளை பவுண்டரிக்கு விளாசினார் பட்லர். ஆட்டத்தின் முக்கியமான 19வது ஓவரை வீசவந்தார் முகேஷ். முதல் பந்தே, பேக்வார்டு ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஹெட்மயர். யார்க்கராக உள்ளே இறங்கிய, ஓவரின் 3வது பந்தை மீண்டும் பவுலரிடம் அடித்தார் பட்லர். அதைப் பிடித்து மீண்டும் பேட்ஸ்மேனை நோக்கி எரிந்தார் முகேஷ் குமார். பந்து ஸ்டெம்பில் படவில்லை. ராயல்ஸ் ரசிகர்கள் கெக்கலித்தார்கள். ஆனால், வார்னரோ கேட்ச் பிடித்ததற்கு அவுட் கேட்டு அப்பீல் செய்தார். ரீப்ளேயில், கேட்ச் என தெரியவர, துள்ளி குதித்தார்கள் டெல்லி வாலாக்கள். அடுத்து களமிறங்கிய ஜுரெல், சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டார். நோர்க்யா வீசிய 20வது ஓவரில், முதல் பந்தை மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார் ஹெட்டி. 4வது பந்து லாங் ஆஃப் திசையில் மீண்டும் சிக்ஸருக்கு பறந்தது. 20 ஓவர் முடிவில் 199/4 என மீண்டுமொரு டி20 இன்னிங்ஸோடு நிறைவு செய்தது ராஜஸ்தான்.
கலீல் அகமதுக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் ப்ருத்வி ஷா. அவரும் வார்னரும் ஓபன் செய்ய, பந்து வீச வந்தார் `முதல் ஓவர் முத்துப்பாண்டி' போல்ட். அடைமொழிக்கு ஏற்றவாறு முதல் ஒவரிலேயே ஷாவின் விக்கெட்டைத் தூக்கினார் போல்ட். பாய்ந்து ஒற்றைக் கையில் பிடித்தார் சாம்சன். அடுத்து களமிறங்கினார் மனீஷ் பாண்டே. அடுத்து பந்திலேயே எல்.பி.டபிள்யூ. அம்பயர் கையைத் தூக்குவதற்கு முன்பே `எங்கே செல்லும் இந்தப் பாதை' என நடக்கத் துவங்கிவிட்டார் மனீஷ். அவரை அழைத்து சமாதனம் செய்து ரிவியூ எடுக்கச்சொல்லி, அதுவும் ப்ளூசட்டை ரிவியூவைப் போல கையை விரிக்க, மனீஷ் பாண்டே இன்னும் கடுப்பானார். முதல் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் 2 விக்கெட்களை மட்டும் இழந்திருந்தது டெல்லி.
2வது ஓவரை வீசவந்தார் சந்தீப் சர்மா. ஓவரின் 5வது பந்தில் வார்னர் கையிலிருந்து ஒரு பவுண்டரி கிடைத்தது. ஆனாலும், ஓவரில் மொத்தமே 5 ரன்கள்தான் போனி. `முதல் ஓவர் முத்துப்பாண்டி' வீசிய 3வது ஓவரில், வார்னர் ஒரு பவுண்டரியும், ரூஸோ ஒரு பவுண்டரியும் விரட்டினார்கள். 4வது ஓவரை வீசினார் அஸ்வின். வார்னர் ஒரு பவுண்டரி அடித்தார். ஓவரில் 7 ரன்கள் மட்டுமே. ஹோல்டர் வீசிய 5வது ஓவரில் வார்னரும், ரூஸோவும் ஆளுக்கொரு பவுண்டரிகளை விரட்டினர். தேவைப்படும் ரன்ரேட் 11-க்கு மேல் இருந்தது. பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்த அஸ்வின், பவர் ஹிட்டரான ரூஸோவின் விக்கெட்டை கழற்றினார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி, கவர் திசையிலிருந்த ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். டெல்லி ரசிகர்கல் கடையை மூடினார்கள். பவர் ப்ளேயின் முடிவில் 38/3 என மூலையில் அமர்ந்திருந்தது டெல்லி.
சாஹல் வீசிய 7வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிட்டியது. சிறிய காயத்தோடு ஆடிக்கொண்டிருக்கும் பட்லருக்கு ஓய்வு கொடுத்து, முருகன் அஸ்வினை இம்பாக்ட் வீரராக உள்ளே கொண்டுவந்தார் சஞ்சு. சந்தீப் சர்மா வீசிய 8வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. தேவைப்படும் ரன் ரேட், 12-யை தாண்டியது. மீண்டும் வந்தார் போல்ட். வார்னர் ஒரு பவுண்டரியும், லலித் யாதவ் ஒரு பவுண்டரியும் விளாசினர். அந்த பவுண்டரியின் மூலம் ஐ.பி.எல்லில் 6,000 ரன்களை கடந்தார் வார்னர். அஸ்வின் வீசிய 10வது ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே. இன்னும் 60 பந்துகளில் 132 ரன்கள் தேவை. 68/3 என பரிதாபகரமான நிலையில் இருந்தது டெல்லி.
சாஹல் வீசிய 11வது ஓவரில், ஷார்ட் தேர்டு மேன் திசையில் ஒன்று, ரிவர்ஸ் ஸ்வீல் ஷாட்டில் மற்றொன்று. 2 பவுண்டரிகளை அள்ளினார் லலித் யாதவ். ஒரே ஒவரில் 15 ரன்கள் கிடைத்தது. ஹோல்டர் வீசிய 12வது ஓவரின் முதல் பந்தை, பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் லலித். மீண்டும் வந்த போல்ட், ஓவரின் 5வது பந்தில் ஒரு பவுண்டரியை கொடுத்துவிட்டு, 6வது பந்தில் விக்கெட்டை விலையாக பெற்றுக்கொண்டார். லலித் யாதவ், போல்ட் பந்தில் க்ளீன் போல்டு. `இருந்தாலும் சுடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா' என்பதுபோல, சந்தீப் சர்மா இப்போதும் ஒரு ஓவரை வீசி 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 15வது ஓவரில், அக்ஸார் படேலும் அவுட் ஆனார். சாஹல் வீசிய பந்தை அடிக்க முயன்று, ஸ்டெம்பிங் ஆனார். 15 ஓவர் முடிவில் 113/5 என எந்த கவலையுமின்றி ஆடிக்கொண்டிருந்தது டெல்லி அணி. ஜெயிக்க வேண்டுமென்றோ, தோத்து விடுவோம் என்றோ எந்த பதட்டமும் இல்லை அதனிடம்.
அஸ்வின் வீசிய 16வது ஓவரில், ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டு தனது 61வது ஐ.பி.எல் அரை சதத்தையும் அடித்தார் வார்னர். ஓவரின் 3வது பந்தில் பாவெல் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வினார். 17வது ஓவரை வீசிய முருகன் அஸ்வின் பவுண்டரி ஏதும் கொடுக்காமலே 11 ரன்கள் கொடுத்தார். அடுத்த ஓவரில், ஒரு பவுண்டரி கொடுத்தும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஹோல்டர். இன்னும் 12 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலை. சாஹல் வீசிய 19வது ஓவரில், அபிஷேக் போரெல் அவுட். கடைசிப் பந்தில் வார்னரும் அவுட். அம்புட்டுதேன்! 6 பந்துகளில் 61 ரன்கள் தேவை எனும் நிலை. நோர்க்யாவின் விக்கெட்டையும் கழட்டி 3 ரன்கள் மட்டுமெ கொடுத்தார் ஸ்ட்ரிக்டான சந்தீப் சர்மா. 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது ராயல்ஸ். டெல்லி பவுலர்களை கதறவிட்ட ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கினார்கள். `ரோலக்ஸ், அவன் பெயர் டெல்லி. ரொம்ப கேவலமா ஆடினான்' என சொல்லவைத்த டெல்லி அணி, பழைய டெல்லி அணியைப் போல் மீண்டுவர வாழ்த்துவோம் நண்பர்கள். என்ன? `பழைய டெல்லி அணி நன்றாக விளையாடுமா'வா? ஹவ் டு ஐ டெல் யு...