GTvMI PTI
T20

GTvMI | எது சிறந்த அணி... சர்ச்சைக்கு இன்று விடை கிடைத்துவிடும்..!

இந்த நான்கு ஓவர்களை எந்த அணி சரியாக கணித்து விளையாடுகிறதோ அந்த அணிதான் ஞாயிற்றுக்கிழமை சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதும்.

Wilson Raj

சில நாட்களுக்கு முன்பு குஜராத் கேப்டன் பாண்டியா மும்பை பெருவாரியாக நட்சத்திர வீரர்களை தான் அணியில் எடுப்பார்கள் என்று பேசி இருந்தார். நேற்று வீடியோ ஒன்றில் பேசிய மும்பை கேப்டன் ரோகித் இன்னும் சில ஆண்டுகளில் வதீரா, திலக் போன்றவரையும் நட்சத்திர வீரர்கள் என்று தான் சிலர் குறிப்பிடுவார்கள் என்று தன் பங்குக்கு பேசியிருந்தார். "இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி...யார் பெருசுனு அடிச்சுக் காட்டு" என்று கோவில் படம் வடிவேலு பாணியில் காத்திருந்த ரசிகர்களுக்கு சுவையான விருந்து தர காத்திருக்கிறது இரண்டாம் குவாலிபயர் போட்டி.

Vijay Shankar

குஜராத் அணி நடக்கும் ஐபிஎல் தொடரில் முதல் ஆளாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி. அந்த அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் இருக்கும் ஃபார்முக்கு எந்த அணியையும் வீழ்த்தும் தகுதி உடையது குஜராத். மாறாக மும்பையோ கடைசி நேரத்தில் பெங்களூர் அணி தோற்றதும் அதனால் பிளேஆஃப் சுற்றுக்கு உள்ளே வந்தது.‌ குஜராத்துக்கு டாப் ஆர்டர் வீரர் கில் என்றால் மும்பைக்கு மிடில் ஆர்டரில் சூர்யா. தொடரின் நடுவே வெளியே செல்ல ஆர்வமாக இருந்த மும்பை அணியை தனியாளாக மீட்டு வந்தவர் சூரியகுமார் தான் என்றால் அது மிகை ஆகாது. இந்த இரண்டு அணிகளும் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.

மும்பையை பொருத்தவரை சர்வமும் பேட்டிங் தான். வரிசையாக பல 200 ரன்களுக்கும் அதிகமான டார்கெட்டை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி. கிஷன், கிரீன், சூரியகுமார், வதீரா, திலக், டேவிட் என்று ' போதும் போதும் லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கு' அளவுக்கு பெரிய பேட்டிங் பட்டாளமே உள்ளது. இவர்களுடன் சீனியர் வீரர் கேப்டன் ரோகித்தும் இணைந்து கொண்டால் மும்பை பெரிய ஸ்கோரை நிச்சயம் எட்டும். பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட கிரீன் இதுவரை 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். சூரியா மற்றும் இஷனும் 400 ரன்களைக் கடந்துள்ளனர். இதில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் சூரியகுமார். இவரின் அதிரடி பேட்டிங் எந்த நிலையில் மும்பை அணி இருந்தாலும் ஆட்டத்திற்குள்ளே அவர்களைக் கொண்டு வந்து விட்டு விடுகிறது. இதே குஜராத் அணிக்கு எதிராகத்தான் சூரியகுமார் நடப்பு ஐபிஎல் தொடரில் சதம் கடந்தார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Surya KUmar Yadav

ஆனால் இந்த பேட்டிங் படையை அவ்வளவு சீக்கிரம் ரன் எடுக்க விடாமல் தடுக்கக்கூடிய ஒரே பந்துவீச்சு படை யார் என்று பார்த்தால் அது குஜராத் அணி தான். மைதானத்தில் சிறிதளவு ஸ்விங் இருந்தால் கூட குஜராத்தின் ஷமியை கையில் பிடிக்க முடியாது. அதுவும் ஸ்விங் என்று வந்துவிட்டால், கிஷன் எல்லாம் பரதநாட்டியம், குச்சிப்புடி என்று இருக்கும் எல்லா நடனத்தையும் ஆடிவிடுவார் . ஆரம்பத்தில் வீசப்படும் நான்கு ஓவர்களை மும்பையின் ஓப்பனர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதில் அடங்கி இருக்கிறது மும்பையின் வெற்றி. துவக்கத்தில் ஷமி என்றால் முடிவுக்கு மோகித்.‌ டெத் ஓவர்களில் இவர் வீசும் ஸ்லோயர் பந்துகளை கணித்து விளையாடுவது பல அணிகளுக்கு தலைவலியாக இருந்து வந்துள்ளது. அதுவும் பெரும்பாலும் புல் டாஸ் பந்துகளை மட்டுமே அடிப்பேன் என அடம்பிடிக்கும் சிங்கப்பூர் சித்தப்பா டிம் டேவிட் தான் கடைசி நேரத்தில் களத்தில் இருப்பார் என்பதால் மும்பைக்கு இதிலும் சிக்கல் தான்.

சரி மிடில் ஓவர்களையாவது மும்பை சமாளிக்குமா என்று பார்த்தால் மிடில் ஓவர்களில் ரஷித்‌ கான் மற்றும் நூர் அஹமத்‌ என இரண்டு பெரும் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் உள்ளனர். எப்பேர்ப்பட்ட வீரர்களையும் வீழ்த்தி விடும் இவர்களுக்கு வதீரா, திலக் போன்ற அனுபவமற்ற வீரர்களை சமாளிப்பது பெரிய கடினமாக இருக்கப் போவதில்லை. சொல்லப்போனால் மும்பைக்கு மிகப்பெரிய சவால் பேட்டிங்கில் காத்திருக்கிறது. இதே மைதானத்தில் இந்த இரண்டு அணிகளுக்கும் நடந்த லீக் போட்டியில் மும்பையின் பேட்டர்கள் அத்தனை பேர்களும் குஜராத்திடம் சரணடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Rashid Khan

சரி குஜராத்திடம் எந்த பலவீனமும் இல்லையா என்று பார்த்தால் குஜராத்தின் மிடில் ஆர்டர் கண் முன்னே வருகிறது. மில்லர், டெவேட்டியா, பாண்டியா, ஷனாக்கா என அனைவருமே தனி ஆளாக இதுவரை மிகப்பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடித் தரவில்லை. ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி பவர்பிளேயில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து விட்டால் இந்த குஜராத் மிடில் ஆர்டர் மாட்டிக்கொள்ள வாய்ப்பு அதிகம். ஆனால் பெரும் அனுபவம் இல்லாத மும்பையின் பவுலிங் அணியின் மூத்த அங்கத்தினர் பியூஸ் சாவ்லாவை நம்பியே உள்ளது. இளம் வீரர் மாத்வாலிடம் இவ்வளவு பெரிய‌ பொறுப்பை ஒப்படைப்பதற்கு பதிலாக, ஜோர்டன், பெஹரண்டாஃப் போன்ற அனுபவ வீரர்களும்‌ மும்பை அணியின் பந்துவீச்சுக்கு கைகொடுத்தால் அந்த அணியின் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும்.

அகமதாபாத் மைதானத்தை பொறுத்தவரை சேசிங் மற்றும் டிபென்டிங் என இரண்டுக்குமே சாதகமாக தான் இருந்து வந்துள்ளது. 180 ரன்கள் மிக எளிதாக எடுக்கக்கூடிய மைதானம். முதல் நான்கு ஓவர்கள் நன்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக் கூடிய மைதானம். இந்த நான்கு ஓவர்களை எந்த அணி சரியாக கணித்து விளையாடுகிறதோ அந்த அணிதான் ஞாயிற்றுக்கிழமை சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதும்.