"நீ தோனி மாதிரியே ஆக ஆசப்படலாம்...ஆனா தோனி ஒருத்தர் தான்". சென்னை மற்றும் குஜராத் அணிகள் ஆடிய போட்டியை ஒரே வரியில் கூற வேண்டும் என்றால் இதுதான். தோனியின் அனுபவம் முன்பு குஜராத்தின் திட்டமிடல், பேட்டிங், பவுலிங் என எதுவும் பலிக்காமல் போனது. இத்தனைக்கும் "தோனியை யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பேய் பிசாசாகத் தான் இருக்கும்" என்றெல்லாம் கூறி தோனிக்கு ஐஸ் வைத்திருந்தாலும் ஹர்திக் பாண்டியாவின் குஜராத்தால் வெல்ல முடியவில்லை.
சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி ஆரம்பித்தது. குஜராத் அணிக்கு டாஸ் ராசி அமைய பந்துவீச்சை தேர்வு செய்தார் பாண்டியா. சென்னை மைதானத்தை பொருத்தவரை, முதலில் ஆடும் அணி தான் பெரும்பாலும் வெல்லும். ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் மைதானம் பேட்டிங்கிற்கு கடினமாக மாறுவது வாடிக்கை. இதை நம்பி ஆறுதல் அடைந்த சென்னை ரசிகர்களுக்கு தோனி முதலில் நாங்களும் சேசிங் தான் செய்திருப்போம் என்று ஒரு ட்விஸ்ட் வைத்தார். அதில் இருந்து மீள்வதற்குள் அணியில் எந்த மாற்றமும் இல்லை...அதே 11 தான் என அடுத்த ட்விஸ்ட் வைத்தார். அணியில் இவரை நீக்க வேண்டும்... அவரை சேர்க்க வேண்டும் என்று ஓயாமல் ஒப்பாரி வைத்தவர்களை எல்லாம் புல் டாஸ் பந்துகளை டீல் செய்வது போல டீல் செய்து உள்ளே சென்று ஓப்பனர்களை அனுப்பி வைத்தார் தோனி.
சென்னை அணி கோப்பை வென்ற வருடங்களை எல்லாம் பார்த்தால் துவக்க வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடி இருப்பர். முதல் பத்து ஓவர்கள் துவக்க வீரர்களுக்கு - இது தான் சென்னையின் ஃபார்முலா. ஆனால் இந்த முறை இரண்டே ரன்களில் ருத்ராஜ் அவுட் ஆனார். மொத்த மைதானமும் அமைதியாக இருந்த போது நோ பால் சைரன் அலற, கூடவே ரசிகர்களும் கூச்சலிட்டனர். திரும்பி வந்த ருத்ராஜ் ஃப்ரீ ஹிட் பந்தில் சிக்சர் ஒன்று பறக்கவிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்தார். இதன் பின்பு சென்னை தனது ஃபார்முலாவை அப்ளை செய்தது. கஷ்டமான பந்துகளை எல்லாம் தட்டி விட்டு எளிமையான பந்துகளை பவுண்டரிகளாக மாற்றினர். ருத்ராஜ் - கான்வே ஜோடியை பிரிக்க குஜராத் எடுத்த அத்தனை முயற்சிகளும் பலன் தரவில்லை. பத்து ஓவர்களில் 85 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளம் போட்டது சென்னை.
ஆனால் இதன் பிறகு நிலமை தலைகீழானது. மோகித் வீசிய பந்து ஒன்றை சரியாக அடிக்காமல் ருத்ராஜ் விட அது கேட்ச்சானது. களத்திற்கு டூபே வந்தார். இந்த ஆட்டத்துக்கு முன்பு ரஷித் - நூர் ஸ்பின் கூட்டணி எல்லாம் டூபே முன்னால் செல்லாது என்றெல்லாம் மீம்ஸ்கள் பறந்தன. ஹீரோ போல களத்திற்கு வந்த டூபே நூர் அஹமத் வீசிய பந்தில் போல்டானர். ஒரே ரன் தான் அவரால் எடுக்க முடிந்தது. அப்போதும், சரி தோனி வேகமாக களத்திருக்கு வர இது உதவும் என்று சென்னை ரசிகர்கள் தங்களை தாங்களே ஆறுதல் படுத்திக் கொண்டனர். கான்வேயுடன் ரஹானே இணைந்தார். குஜராத்தின் இரண்டு ஸ்பின்னர்கள் மாறி மாறி வீச கான்வேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சரி வாங்குன காசுக்கு ஒரு நாள் உலகக்கோப்பை தொடருக்காவது பயிற்சி எடுப்போம் என ஒரு நாள் போட்டி போல ஆட ஆரம்பித்தார். கூடவே ரஹானே, "அது அப்படி இல்ல டா தம்பி..எப்படினா..." என அவர் அடுத்த மாதம் நடக்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்தார்.
பவுண்டரி வந்தே பல மணி நேரமானது போலானதும், ஒரு சிக்சர் பவுண்டரி என 15வது ஓவரில் அடித்து அதே ஓவரில் அவுட் ஆனார் ரஹானே. அதற்கடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கான்வே அவுட் ஆனார். தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் இருந்த கான்வே அவுட் ஆனதே பலருக்கு அப்பாடா என இருந்தது. ராயுடு வந்தார். ரஷித் கானை ஒரு சிக்ஸ் அடித்தார். சென்றார். இந்த ஐபிஎல் முழுவதும் என்ன செய்தாரோ அதை மீண்டும் வெற்றிகரமாக செய்தார் ராயுடு. ஆனால் ராயுடு போனதும் மொத்த மைதானமும் அதிர களத்திற்குள் வந்தார் தோனி. வந்தவர் ஒரே ரன்னில் மோகித் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேற அத்தனை ரசிகர்களும் தவம் இருப்பது போன்ற அமைதிக்கு சென்றனர்.
எப்படா அவுட் ஆவான் என்று பலர் நினைக்கும் ஜடேஜாவை நேற்று யாருமே அவுட் ஆக சொல்லவில்லை. ' இப்ப சொல்லுங்கடா அவுட் ஆகணும்னு' என ஜடேஜா கூட மனதில் நினைத்திருப்பார். காரணம் ஜடேஜாவும் போனால் 160 கூட வராது . கடைசி நேரத்தில் ஜடேஜா அடித்த இரண்டு பவுண்டரி, மொயின் அலி அடித்த சிக்ஸ், ஷமி வீசிய நோ பால் என எல்லாம் கைகொடுக்க சென்னை 172 ரன்கள் எடுத்தது. மோகித் மற்றும் ஷமி ஆகியோர் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். இதை வச்சுக்கிட்டு கீழ் திருப்பதி வரைக்கும் தான போக முடியும். சரி சென்னையோட அடுத்த மேட்ச்க்கு குஜராத்துக்கு கிளம்ப வேண்டியதுதான் என ஒரு குரூப் மஞ்ச பெயின்டுடன் ரெடியாக, ' KEEP CALM AND BELIEVE IN DHONI' என தோனியின் ரசிகர்கள் அமைதி காத்தனர்.
கில் மற்றும் சஹா இணைந்து சிக்கலான இலக்கை சேஸ் செய்ய வந்தனர். சென்னையின் பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் தீபக் சஹார் தொடர்ந்து மூன்று ஓவர்கள் வீசி சஹாவின் விக்கெட்டையும் எடுத்தார். தோனியின் சிஷ்யன் பாண்டியா சென்னையின் வெற்றியை இன்னமும் எளிதாக்க முன் வரிசையில் களமிறங்கி 6 ரன்களில் வெளியேறி சென்னைக்கு உதவினார். அதோடு நில்லாமல் பேட்டிங் ஆர்டரை குழப்பியெடுத்து தன்னால் எப்படி எல்லாம் சென்னைக்கு உதவ முடியுமோ அப்படி எல்லாம் உதவினார்.
இலங்கை கேப்டன் ஷனாகாவை அனுப்பி வைத்தார். ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என அடித்தாலும் அவரை சரியான நேரத்தில் வெளியே அனுப்பி வைத்தார் ஜடேஜா. ஒவ்வொரு டாட் பந்துக்கும் ஒரு மரம் நடப்படும் என்று பிசிசிஐ அறிவித்ததை பெரும் வெற்றியாக்க தன்னால் முயன்ற வரை உழைத்தார் கில். 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். போன போட்டியில் மும்பைக்காக ஆடிய கில், இந்த முறை சென்னைக்காகவே ஆடினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்ளேன். கடந்த ஆட்டத்தில் பெங்களூரு ரசிகர்களை அழ வைத்ததற்காக கோலி சார்பில் ரிவெஞ்ச் எடுத்தது சென்னை. சரியான நேரத்தில் ஸ்பின்னர்களுக்கு நடுவில் தீபக் சஹாரை கொண்டு வந்து கில்லை தூக்கியது சென்னை அணி. சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பெரிதாக ரன் அடிக்காமல் இருக்கும் மில்லர் இந்த முறையும் அடிக்காமல் 4 ரன்களில் கிளம்பினார்.
குஜராத்துக்கு விக்கெட்டுகள் சாய்ந்து கொண்டே இருந்தாலும் பலரை பீதியிலே வைத்திருந்த பெயர் ரஷித் கான். காரணம் சமீபத்தில் நடந்த மும்பை மேட்ச் ஒன்றில் அவரது பேட்டிங். அவர் வந்து இரண்டு மூன்று பவுண்டரிகளை பறக்க விட பலர் முகத்தில் மைதானத்தில் ஈயாடவில்லை. தேஷ்பாண்டே ஓவரில் ஆட்டத்தை முடித்து விடுவாரோ என்று ரசிகர்கள் நினைத்த போது அதே தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார் ரஷித். அந்த விக்கெட்டில் தான் சென்னையின் வெற்றி உறுதி ஆனது. 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை.
தோற்கடிக்கவே முடியாத அணி என்று இருந்த குஜராத்தை தனது அனுபவத்தின் மூலம் ஊதித் தள்ளினார் தோனி. சரியான பீல்ட் செட்டப், கச்சிதமான பவுலிங் ரொட்டேஷன் என அத்தனையிலும் தோனியின் கேப்டன்சி அனுபவம் மிளிர்ந்தது. அடுத்து சில நாட்களில் ஃபைனலுக்கு தகுதி பெறப்போகும் அணியையும் வீழ்த்தி ஐந்தாவது கோப்பையை வெல்ல காத்திருக்கிறது சென்னை. அதிரடியாக விளையாடி 60 ரன்கள் குவித்த ருத்துவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.