ஐபிஎல்லின் நடப்பு சீசன் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வகையில் அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் டெல்லியில் இன்று நடைபெற்ற 67வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. பின்னர், ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் சென்னை அணி, 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு சீசனில் 2வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் தனது அணியை ஜெயிக்க வைக்க தனி ஒருவனாய்ப் போராடினார், டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர். ஆனால், மற்ற வீரர்கள் அவருக்குத் துணையாக நின்று விளையாடததால் அந்த அணி தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வி அந்த அணியைப் பெரிதாகப் பாதிக்காது.
காரணம், அந்த அணி ஏற்கெனவே பிளே ஆஃப் தகுதியை இழந்துவிட்டது. அதேநேரத்தில், இன்றைய போட்டியில் டேவிட் வார்னர், 86 ரன்கள் எடுத்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றுக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார். அவர், இன்று 58 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் மூலம் இந்த ரன்களை எடுத்துள்ளார்.
இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 500 ரன்களை அதிக சீசன்களில் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். அவர் 2014, 2015, 2016, 2017, 2019, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி உள்ளார். அவர், 6 முறை (2011, 2013, 2015, 2016, 2018, 2023) எடுத்துள்ளார். 3வது இடத்தில் ஷிகார் தவான் (2012, 2016, 2019, 2020, 2021) மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் (2018, 2019, 2020, 2021, 2022) உள்ளனர். அவர்கள் இருவரும் தலா 5 முறை அடித்துள்ளனர்.
மேலும், டெல்லி மைதானத்தில் மட்டும் 1,000 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். தவிர, இன்றைய போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், டி20 போட்டிகளில் 99 அரைசதங்களை அடித்தும் சாதனை படைத்துள்ளார் வார்னர். இதில் ஐபிஎல்லில் மட்டும் 61 (இன்றைய அரைசதத்தையும் சேர்த்து) அரைசதங்களை அடித்துள்ளார் வார்னர் என்பது கூடுதல் தகவல்!