Sunrisers Hyderabad Kamal Kishore
T20

DCvSRH | மார்ஷின் ஆட்டத்தை வீணடித்த டெல்லி..!

39 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து, 27 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி தனி மனிதனாக போராடிய மார்ஷுக்கு, ஆறுதல் பரிசாக ஆட்டநாயகன் விருது வழங்கினார்கள்.

ப.சூரியராஜ்

`எங்கள் அண்ணா' படத்தில் மாறி மாறி அடித்துக்கொள்ளும் வடிவேலு, பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கரைப் போல் கடைசி மூன்று இடத்தில் இருந்தபடி கண்ணீர் வரவழைக்கும் காமெடிகளை செய்துகொண்டிருக்கிறது மும்பை, ஐதராபாத் மற்றும் டெல்லி. எட்டாவது இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் இந்த மூன்று அணிகளில், டெல்லியும் ஐதராபாத்தும் நேற்றிரவு டெல்லி மைதானத்தில் மோதின. ஐந்து நாட்களுக்கு முன்புதான் இதே அணிகள் ஐதராபாத் மைதானத்தில் மோதி, டெல்லி அணி வெற்றியும் பெற்றது.

Aiden Markram | david warner

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்த சீசனில் கோடிகளை சுருட்டிவிட்டு சதுரங்க வேட்டை ஆடிவரும் ப்ரூக்கை, ஓபனிங் இறக்கவேண்டாம் என முடிவு செய்த மார்க்ரம், அபிஷேக் சர்மாவையும் மயங்க் அகர்வாலையும் அனுப்பிவைத்தார். இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளைப் பறக்கவிட்டார் அபிஷேக் சர்மா. நோர்க்யா வீசிய 2வது ஓவரில், அகர்வால் ஒரு பவுண்டரியும், அபிஷேக் ஒரு பவுண்டரியும் தட்டினர். 3வது ஓவரை வீசிய இஷாந்த், அகர்வாலின் விக்கெட்டைக் கழட்டினார். பவுன்ஸருக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து மீண்டும் சொதப்பினார் மயங்க். ஆனால், அபிஷேக் வேறொரு உலகத்தில் இருந்தார்.. கடைசிப்பந்து பவுண்டரிக்கு பறந்தது.

முகேஷ் குமார் வீசிய 4வது ஓவரில், அபிஷேக் ஒரு பவுண்டரி அடிக்க, திரிப்பாதி ஒரு சிக்ஸர் அடித்தார். என்ன த்ரிப்பாதி சிக்ஸ்லாம் அடிக்குறார் என ஐதராபாத் ரசிகர்கள் குழப்பமாக, அடுத்த ஓவரிலேயே மார்ஷிடம் விக்கெட்டை கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். `அதானே பார்த்தேன்' என ஐதராபாத் ரசிகர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். 6வது ஓவரை வீசவந்த இஷாந்த் சர்மாவை பெரிய மனிதர் என்று கூட பாராமல், 4 பவுண்டரிகளை அடித்து ஓடவிட்டார் அபிஷேக். பவர்ப்ளேயின் முடிவில் 62/2 என சிறப்பாக தொடங்கியிருந்தது சன்ரைசர்ஸ்.

Abhishek Sharma

7வது ஓவரை தொடங்கினார் குல்தீப். 5வது பந்தில், மார்க்ரமின் கேட்சை லாங் ஆஃபில் கோட்டைவிட்டார் நோர்க்யா. அடுத்த பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டு தனது அரைசதத்தை நிறைவு செய்தார் அபிஷேக். அக்ஸர் படேல் வீசிய 8வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. மீண்டும் வந்தார் குல்தீப். மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார் அபிஷேக். மார்ஷ் வீசிய அடுத்த ஓவரில், மார்க்ரமின் விக்கெட் சாய்ந்தது. `காந்தி பாபு' ஹாரி ப்ரூக் அடுத்து களமிறங்கினார். 2வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல், அக்ஸர் படேலிடம் கேட்ச் கொடுத்துவிட்டு தலைமறைவானார்.

Harry Brook

இன்னொரு பக்கம், முகேஷ் வீசிய 11வது ஓவரில், அபிஷேக் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். க்ளாஸென் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் வெளுத்தார். ஒரே ஓவரில் 24 ரன்களை அள்ளியது ஐதராபாத் அணி. அக்ஸர் வீசிய 12வது ஓவரில், அபிஷேக் சர்மா விக்கெட் காலியானது. 36 பந்துகளில் 67 ரன்கள் எனும் அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. குல்தீப் வீசிய 13வது ஒவரில், அப்துல் சமாத் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். அக்ஸரின் 14வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஓவரை வீசிய நோர்க்யா, அப்துல் சமாத்துக்கு ஒரு பவுண்டரி வழங்க, 15 ஓவர் முடிவில் 135/5 என விக்கெட்கள் வீழ்ந்தாலும் சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்தது சன்ரைசர்ஸ்.

16வது ஓவரை வீசவந்தார் அக்ஸர் படேல். ஒவரின் கடைசி இரண்டு பந்துகள், சிக்ஸருக்கு பறக்கவிட்டார் க்ளாஸன். மார்ஷ் வீசிய 17வது ஓவரில், ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு, தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார் அப்துல் சமாத். நோர்க்யாவின் 18வது ஓவரை சிக்ஸருடன் தொடங்கினார் க்ளாஸன். மீண்டும் வந்தார் மார்ஷ். முதல் பந்து அகீல் ஹொசைனின் பேட்டிலிருந்து பவுண்டரிக்கு விரைந்தது. கடைசிப் பந்து அதே அகீல் ஹொசைனின் பேட்டிலிருந்து சிக்ஸருக்கு பறந்தது. இஷாந்த் சர்மாவுக்கு பதில் சர்ஃப்ராஸ் கானை இம்பாக்ட் வீரராக இறக்கிவிட்டார் டேவிட் வார்னர். நோர்க்யா வீசிய கடைசி ஓவரில், ஒரு பவுண்டரியை தட்டிவிட்டு, 25 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார் க்ளாஸன். 20 ஓவர் முடிவில் 197/6 என நல்ல ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது ஐதராபாத் அணி.

mitchell marsh

ராகுல் த்ரிப்பாதிக்கு பதில் நடராஜனை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் கேப்டன் மார்க்ரம். ஷா வேண்டாம், சால்ட் போதும் என பிலிப் ஷால்டுடன் ஓபனிங் இறங்கினார் கேப்டன் வார்னர். `இரண்டாம் முதல் ஓவர் முத்துப்பாண்டி' புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார் `முதல் ஓவர் முத்துப்பாண்டி கோட்டைடி' என 2வது பந்திலேயே டேவிட் வார்னரின் விக்கெட்டை கழட்டினார். பாட்டம் எட்ஜாகி, ஸ்டெம்ப் தெறித்தது! அந்த ஓவரில் சால்ட் ஒரு பவுண்டரி அடித்து, ஆசுவாசப்படுத்தினார்.

சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன், 2வது ஓவரை வீசினார். சால்ட் ஒரு பவுண்டரி தட்டினார். புவி வீசிய 3வது ஓவரில் இன்னொரு பவுண்டரியும் அடித்தார் சால்ட். ஹொசைனின் 4வது ஓவரில் மார்ஷ் ஒரு சிக்ஸரும், சால்ட் ஒரு பவுண்டரியும் பறக்கவிட்டனர். நடராஜனின் 5வது ஓவரில், மார்ஷ் ஒரு சிக்ஸர் அடித்தார். அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் சால்ட். பாவம் ஹொசைன்! உம்ரான் மாலிக்கின் 7வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கி வைத்தார் சால்ட். அடுத்து தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை வெளுத்தார் மார்ஷ். மீண்டும் ஒரு பவுண்டரியுடன் முடித்துவைத்தார் சால்ட்! ஒரே ஓவரில் 22 ரன்கள்.

Philip Salt

8வது ஓவரை வீச, மார்கண்டேவை அழைத்துவந்தார் மார்க்ரம். அவர் ஒரு மார்கமாக வீச, 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. உம்ரான் மாலிக்கின் ஓவரை கடத்திவிடுவதென முடிவு செய்து 9வது ஒவரை அபிஷேக்கிடம் கொடுத்தார் மார்க்ரம். மார்ஷுக்கு ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் கொடுத்தார் அபிஷேக். மார்கண்டே வீசிய 10வது ஓவரில், அற்புதமாக ஃபீல்டிங் செய்து ஒரு சிக்ஸரை தடுத்தார் ப்ரூக்! அடுத்த பந்தில் ஒரு பவுண்டரியைத் தட்டி தனது முதல் ஐ.பி.எல் அரைசதத்தை நிறைவு செய்தார் சால்ட். நடராஜனின் 11வது ஓவரில், மார்ஷும் தனது அரைசதத்தை கடந்தார். ஐதராபாத் அணி என்ன செய்வதென புரியாமல் விழித்தது. இன்னும் 54 பந்துகளில் 87 ரன்கள் தேவை.

12வது ஓவரை வீசிய மார்கண்டே, பிலிப்ட் சால்ட்டின் விக்கெட்டைக் கழட்டினார். சால்ட் அடித்ததில் நேராக கீழ் நோக்கி வந்த பந்தை பாய்ந்து பிடித்தார் மார்கண்டே! அபிஷேக் வீசிய அடுத்த ஓவரில் மனீஷ் பாண்டேவை ஸ்டெம்பிங் செய்தார் க்ளாஸன். மீண்டும் வந்த ஹொசைன், முதல் பந்திலேயே மார்ஷுக்கு ஒரு சிக்ஸரை அன்பளிப்பாக கொடுத்து ஆசைகாட்டி, அடுத்த பந்தில் விக்கெட்டை கழட்டினார். 39 பந்துகளில் 63 ரன்கள் விளாசிய மார்ஷ், ஏமாற்றத்துடன் டக்கவுட்டுக்கு திரும்பினார். சர்ஃப்ராஸ் கானும் ப்ரியம் கார்கும் களத்தில் இருந்தனர்.

`யோவ், அக்ஸர் படேலை இறக்கி விடுங்கய்யா' என டெல்லி ரசிகர்கள் அழுது புலம்பினார்கள். அபிஷேக் வீசிய 15வது ஓவரில், ப்ரியம் கார்க் ஒரு பவுண்டரி அடித்தார். இன்னும் 30 பந்துகளில் 60 ரன்கள் தேவை.

மார்கண்டேவின் 16வது ஓவரில், ப்ரியம் கார்க் அவுட் ஆனார். டெல்லி ரசிகர்கள் உற்சாகத்தில் எகிறி குதித்தனர். 24 பந்துகளில் 57 ரன்கள் தேவை. நடராஜனின் 17வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்த சர்ஃப்ராஸ் அடுத்த பந்திலேயே போல்டானார். யார்க்கரை இறக்கினார் நடராஜன்! புவியின் 18வது ஓவரில், அக்ஸர் ஒரு சிக்ஸர் அடித்தார். அதே ஓவரின் கடைசிப்பந்தில் அக்ஸரின் கேட்சையும் கோட்டை விட்டது ஐதராபாத் அணி. 12 பந்துகளில் 35 ரன்கள் தேவை. 19வது ஓவரை சிறப்பாக வீசிய நடராஜன், 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரை வீசிய `இரண்டாம் முதல் ஓவர் முத்துப்பாண்டி', அக்ஸர் படேலுக்கு ஒரு சிக்ஸர், ரிபல் படேலுக்கு ஒரு பவுண்டரி வாரி வழங்கியும் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத். 39 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து, 27 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி தனி மனிதனாக போராடிய மார்ஷுக்கு, ஆறுதல் பரிசாக ஆட்டநாயகன் விருது வழங்கினார்கள். ஐதராபாத் அணி, 8வது இடத்திற்கு முன்னேறியது!