“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
புள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு முளைத்தாற்போல் திடீரென வெறியான டெல்லி, சரியான ஆட்டம் காட்டியது மற்ற அணிகளிடம். சன்ரைசர்ஸிடம் சண்டைக்கு வா என ஆர்மஸைத் தட்டியது. குஜராத் டைட்டன்ஸை குனியவைத்து கொட்டியது. பெங்களூருவை போகவிட்டு பொறமண்டையில் அடித்தது. இதே உத்வேகத்துடன் சேப்பாக்கம் பறந்துவந்த டெல்லி பூச்சி, புள்ளைப்பூச்சியாக அடி வாங்கி ஓடுமா? இல்லை விஷப்பூச்சியாக ஒரே போடு போடுமா? என பயந்து கிடந்தார்கள் சென்னை ரசிகர்கள். என்ன நடந்தது நேற்றிரவு.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தல, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். `டூபேவுக்கு பதில் ராயுடு உள்ளே வருகிறார்' என்றார். `பதறுனார் பார்த்தீங்களா. அதுதான் டெல்லியோட பவர்' என காலரைத் தூக்கினர் டெல்லி ரசிகர்கள். வழக்கம்போல் ருத்துவும் கான்வேயும் சென்னையின் இன்னிங்ஸைத் துவங்க, வழக்கம்போல் முதல் ஓவரை வீசினார் கலீல் அகமது. முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. இரண்டாவது ஓவரை வீசினார் இஷாந்த் சர்மா. ருத்து ஒரு பவுண்டரியைத் தட்டினார். அதே ஓவரில், இன்னும் இரண்டு லெக் கட்டர்களை இஷாந்த் வீச, இரண்டும் ருத்துவின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு பறந்தது.
கலீலின் 3வது ஓவர் முதல் பந்து, கான்வே ஒரு சுழற்று சுழற்றினார். பந்து கீப்பரின் கையில் அழகாய் சென்று அமர்ந்தது. `ஏதாச்சும் கேட்டுச்சா' என கலீல் அகமது கேட்க, கலீல் கேட்டது சால்ட்டுக்கு கேட்டதா என தெரியவில்லை, அவரும் பதிலுக்கு `ஏதாச்சும் கேட்டுச்சா' என்றார். இருவரும் `சின்னபாப்பா பெரியபாப்பா' பட்டாபியைப் போல் காதில் கைவைத்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். வார்னர் வந்து இருவரையும் துரத்திவிட்டார். ரிவ்யூ எடுத்திருந்தால் கான்வே காலி. வாய்ப்பை மிஸ் செய்தார்கள்.
லலித் யாதவின் 4வது ஓவரில், ரிவிய்வூக்கு சென்றார் வார்னர். பந்து மிக லேசாக பேட்டை உரசியிருந்தது. அதே ஓவரில், ஒரு பவுண்டரியும் அடித்து சகஜ நிலைக்கு வந்தார் கான்வே. அக்ஸரின் அடுத்த ஓவரில், கான்வே அவுட்! இம்முறையும் எல்.பி.டபிள்யு. மேல்முறையீட்டுக்கு செல்லாமல், டக்கவுட்டுக்குச் சென்றுவிட்டார் கான்வே. அடுத்து களமிறங்கிய ரஹானே, மடார் மடாரென இரண்டு பவுண்டரிகளை வெளுத்துவிட்டார். இஷாந்தின் 6வது ஓவரில், ருத்து ஒரு பவுண்டரி விளாசினார். பவர்ப்ளேயின் முடிவில் 49/1 என ஓரளவுக்கு நன்றாக தொடங்கியிருந்தது சென்னை அணி.
7வது ஓவரின் முதல் பந்து, ருத்துவைத் தூக்கினார் அக்ஸர். எக்ஸ்ட்ரா கவரில் அடிக்க நினைத்த பந்து, லாங் ஆஃபில் கேட்சாக அமைதியாக கிளம்பினார் ருத்து. 8வது ஓவர் வீசவந்தார் குல்தீப். வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அக்ஸரின் 9வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. குல்தீப்பின் அடுத்த ஓவரில், மொயின் அலி அவுட். இறங்கி வந்து பெரிய ஷாட்டுக்குச் சென்றவர், கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்குச் சென்றார். 10 ஓவர் முடிவில் 66/3 என சென்னை சிங்கங்களுக்கு தொண்டை கவ்வியது.
அக்ஸரின் 11வது ஓவரில், முதல் சிக்ஸரை பொளந்தார் டூபே. அடுத்த ஓவரில், அற்புதமான லோ கேட்ச் ஒன்றைப் பிடித்து ரஹானேவை வெளியேற்றினார் பவுலர் லலித் யாதவ். கேட்சைப் பார்த்து அம்பயரே அதிர்ந்துவிட்டார். தனது 200வது ஐ.பி.எல் மேட்சில் களமிறங்கினார் அம்பத்தி ராயுடு. மார்ஷ் வீசிய 13வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சென்னை ரசிகர்களின் கண்கள் கலங்கியிருந்தது, கொட்டாவி விட்டதில். அதனை உணர்ந்த டூபே, லலித் யாதவின் 14வது ஓவரில் அமுக்கு டுமுக்கு என அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இன்னொரு பக்கம் ராயுடுவும், அமால் டுமால் என ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் விளாசினார். ஒரே ஓவரில் 23 ரன்கள்! மார்ஷின் 15வது ஓவரில் 118 கி.மீ வேகத்தில் வீசபட்ட பந்தை, வார்னரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார் டூபே. 15 ஓவர் முடிவில் 117/5 என மீண்டிருந்தது சென்னை.
குல்தீப்பின் 16வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே. கலீலின் 17வது ஓவரில், ராயுடு அவுட். அடுத்த நொடி சேப்பாக்கம் மின்னியது, டெசிபல்கள் எகிறியது, தல தோனி களத்துக்குள் வந்தார். குல்தீப்பின் 18வது ஓவரில், ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் ஜடேஜா. அதே ஓவரில், 116 கி.மீ வேகத்தில் ஒரு பந்தை வீசினார் குல்தீப்! கலீல் அகமதின் 19வது ஓவரில், இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என விருந்து வைத்தார் தோனி. மார்ஷ் வீசிய கடைசி ஓவரை பவுண்டரியுடன் தொடங்கிய ஜட்டு, அடுத்த பந்திலேயே அவுட்டு. 5வது பந்தில் தோனியும் காலியாக வெறும் 167/8 ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச் என்பதால் சான்ட்னரா, அல்லது டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பதீரனவா? யாரை இம்பாக்ட் வீரராக அழைத்து வருவார் தோனி என யோசித்து கொண்டிருந்தார்கள் சென்னை ரசிகர்கள். வார்னரும் சால்ட்டும் டெல்லியின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் தீபக் சஹார். ஓவரின் 2வது பந்திலேயே, வார்னர் அவுட். ஸ்கொயரில் நின்றுக்கொண்டிருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு அமைதியாக கிளம்பிவிட்டார். தேஷ்பாண்டேவின் 2வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பறக்கவிட்டார் சால்ட். 3வது ஓவரில், மீண்டுமொரு சிக்ஸர் அடித்தார் சால்ட். அடுத்த பந்திலேயே, அவரின் விக்கெட்டை கழட்டினார் சஹார். இம்முறை கேட்ச் பிடித்தது ராயுடு. கலீல் அகமதுக்கு பதில், மனீஷ் பாண்டேவை இம்பாக்ட் வீரராக களமிறக்கியது டெல்லி கேபிடல்ஸ். ஒரு பவுண்டரி அடித்து அந்த ஓவரை முடித்தார் மார்ஷ்.
தேஷ்பாண்டே வீசிய 3வது ஓவரின், முதல் பந்து ரன் அவுட்டானார் மார்ஷ். நான் ஸ்டிரைக்கர் என்டில் தேமேவென நின்றுகொண்டிருந்த மார்ஷை, `மார்கே மாணிக்கம் மார்கே' என உசுப்பிவிட்டு, டக்கவுட்டுக்கு திருப்பிவிட்டார் பாண்டே. ஃபீல்டர் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓடிவந்து ஸ்டெம்ப்பை தட்டும் அளவிற்கு, பல தூரம் ஓடிவிட்டார் மார்ஷ். சஹாரின் 5வது ஒவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என வெளுத்தார் ரைலி ரூஸோ. பாண்டேவும் ஒரு பவுண்டரி விளாசினார். தீக்ஷானாவின் அடுத்த ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கிடைக்க, பவர்ப்ளேயின் முடிவில் 47/3 என ஆடிக்கொண்டிருந்தது டெல்லி.
`இனி சுழற்பந்து வீச்சாளர்கள் சிலந்தி வலை கட்டத் துவங்கிவிடுவார்கள்' என டெல்லி ரசிகர்கள் வருத்தம் கொண்டனர். ஜடேஜாவின் 7வது ஓவரில் 1 ரன் மட்டுமே கிடைத்தது. மொயின் அலியின் 8வது ஓவரில், பாண்டே ஒரு சிக்ஸர் அடித்தும் 7 ரன்கள் மட்டுமே. ஜடேஜாவின் 9வது ஓவரில், ரைலி ரூஸோ ஒரு பவுண்டரி அடித்தார். அப்படியும் 8 ரன்களே கிடைத்தது. மொயின் அலியின் 10வது ஓவரில் வெறும் 2 ரன்கள். 10 ஓவர் முடிவில், 65/3 என பரிதாபமான நிலையிலிருந்து டெல்லி. இன்னும் 60 பந்துகளில் 103 ரன்கள் தேவை.
ஜடேஜாவின் 11வது ஓவரில், 7 ரன்கள். மொயின் அலியின் 12வது ஓவரில், 4 ரன்கள். வசமாக சிக்கியது டெல்லி. ரூஸோவும் பாண்டேவும் முக்கி முக்கி அடித்தும், பந்து முக்கால் கிரவுண்டை தாண்டவில்லை. 13வது ஓவரை வீசவந்தார் பதீரனா. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து பெருமூச்சுவிட்டார் மனீஷ் பாண்டே. அதே ஓவரின், கடைசிப்பந்தில் பாண்டேவை அவுட்டாக்கி தியான நிலைக்குச் சென்றார் பதீரனா. மொயின் அலியின் 14வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. ஜடேஜாவின் 15வது ஓவரில், ரைலி ரூஸோவும் அவுட். ஜடேஜாவும் மொயின் அலியும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி, வெறும் 35 ரன்கள்தான் கொடுத்திருந்தார்கள்.
பதீரனாவின் 16வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் அக்ஸர். தீக்ஷானாவின் 17வது ஓவரில் அக்ஸருக்கு கிடைத்தது ஒரு சிக்ஸர். பதீரனாவின் 18வது ஓவரில் இன்னொரு பவுண்டரியும் அடித்தவர், அதே ஓவரில் அவுட்டும் ஆனார். 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார் அக்ஸர் படேல். தேஷ்பாண்டேவின் 19வது ஓவரில், ரிபல் படேலை ரன் அவுட் செய்தார் மொயின் அலி. பதீரனாவின் கடைசி ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து கெத்து காட்டினார் லலித் யாதவ். அடுத்த பந்தில் பதீரனா இறக்கிய மெதுவான யார்க்கரில், அவரும் அவுட். 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது சென்னை. எந்த பேட்ஸ்மேனும் 36 ரன்களை தாண்டாத இந்த ஆட்டத்தில், 21 ரன்கள் அடித்து, 1/19 என சிறப்பாக பந்து வீசிய ஜட்டுவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.