சென்னை அணி இன்று குஜராத் அணியை எதிர்த்து, பிளே ஆஃப் குவாலிஃபையர் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன் சென்னை அணியில் பேட்டிங், பவுலிங்கில் வலிமையாக திகழும் வீரர்கள் குறித்து புள்ளிவிவர ரீதியான ஒரு அலசலை இங்கு அறிவோம்...
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வலிமையானதாகவே உள்ளது. குறிப்பாக,
* தொடக்க வீரர் கான்வே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் 13 இன்னிங்சில் 585 ரன்களை எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 138.
* கான்வேவுடன் இணைந்து ருதுராஜும் சென்னை அணிக்கு பெரும்பாலான போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை தந்துள்ளார். இவர் 13 இன்னிங்சில் 504 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 148 ஆக உள்ளது.
* ஆரம்பத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படாத ஷிவம் துபே, லேட்டாக அடிக்க ஆரம்பித்தாலும் லேட்டஸ்டாக கலக்கினார்.
இவரது சிக்சர்கள் எதிரணிகளை அலற வைத்தன. இந்த இளம் வீரர் 12 இன்னிங்ஸ்களில் 385 ரன் எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 160.
* மொயின் அலியின் உடல் நலக்குறைவால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்ற ரகானே அணியில் இடத்தை வலுப்படுத்திக்கொண்டுள்ளார். இவர் 12 இன்னிங்ஸ்களில் 282 ரன் எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 169!
* ஆல்ரவுண்டர் ஜடேஜாவை பொறுத்தவரை இந்த சீசனில் அவரது பேட்டிங் சுமார் ரகம்தான். இவர் 10 இன்னிங்சில் 153 ரன் மட்டுமே எடுத்துள்ளார். அதிரடியில் இவரது அளவு கோல் 137 ஆக உள்ளது.
* தோனி கடைசி ஓரிரு ஓவர்கள் மட்டுமே பேட் செய்ய வந்தாலும் ஸ்ட்ரைக் ரேட் 190 வைத்துள்ளார். இவர் 10 இன்னிங்ஸ்களில் 103 ரன் எடுத்துள்ளார்.
* மத்திய வரிசையில் மொயின் அலி, அம்பத்தி ராயுடு பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை.
பந்துவீச்சை பொறுத்தவரை சிஎஸ்கே சற்று பலவீனமான அணியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் தோனியின் அனுபவ வழிநடத்தல் அந்த குறையை போக்கி பிளே ஆஃப் வரை அணியை அழைத்து வந்துள்ளது. இத்தொடரில்,
* சிஎஸ்கே சார்பில் துஷார் தேஷ்பாண்டே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 14 இன்னிங்ஸ்களில் இவர் 20 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். ஆனால் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கிறார் என்பது தேஷ்பாண்டேவின் மிகப்பெரிய பலவீனம். இவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 9.52 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
* தேஷ்பாண்டேவுக்கு அடுத்தபடியாக ஜடேஜா 14 இன்னிங்சில் 17 விக்கெட் எடுத்துள்ளார். ஓவருக்கு சராசரியாக 7.65 ரன் விட்டுத்தந்துள்ளார்.
* இளம் புயல் பதிரனா 10 இன்னிங்ஸ்களில் 15 விக்கெட் எடுத்துள்ளதுடன் ஓவருக்கு 7.56 ரன்களை மட்டுமே சராசரியாக அளித்துள்ளார். தீபக் சகர் 8 இன்னிங்சில் 10 விக்கெட் எடுத்துள்ளார். ஓவருக்கு 8.84 ரன்களை விட்டுத்தந்துள்ளார்.
* தீக்ஷணா 11 இன்னிங்ஸ்களில் 9 விக்கெட் எடுத்துள்ளார். இவர் ஓவருக்கு சராசரியாக 8 ரன்களை எதிரணிக்கு அளித்துள்ளார்.
* மொயின் அலி 11 இன்னிங்ஸ்களில் 9 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தாலும் ஓவருக்கு சராசரியாக 7.5 ரன்களையே விட்டுத்தந்துள்ளார்
அணியில் சில குறைபாடுகள் இருப்பினும் தோனி என்ற அனுபவமிக்க கேப்டனின் பலத்தால் குஜராத்தை குவாலிஃபயர் போட்டியில் வீழ்த்தி தங்கள் அணி இறுதிப்போட்டியில் கால்பதிக்கும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் நம்பிக்கை...