MS Dhoni @ChennaiIPL
T20

‘அந்த தலைவலி இப்ப எதுக்கு? அப்பறம் பாத்துக்கலாம்’ - ஓய்வு குறித்து தோனியின் பதில் என்ன?

அடுத்த ஐபிஎல் போட்டிக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் ஓய்வு குறித்து இப்போது ஏதும் முடிவு செய்யவில்லை என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

Jagadeesh Rg

சேப்பாக்கத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக நேற்று இரவு நடந்த பிளே-ஆஃப் போட்டியில் 15 ரன்களில் வெற்றிப்பெற்று, சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்பு களமிறங்கிய குஜராத் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

CSK

தோனி சென்னையில் ஆடுவது இதுவே கடைசியாக இருக்கும் என்ற காரணத்தினால், சேப்பாக்கத்தில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். மிக முக்கியமாக போட்டிக்கு பின்பு தோனி என்ன பேசப்போகிறார் என்ற ஆவலும் மேலோங்கி இருந்தது. தோனி தன் ஓய்வு குறித்து ஏதேனும் சொல்வாரா என்றும் ரசிகர்கள் காத்திருந்தனர்.

போட்டிக்கு பின் ஓய்வு குறித்த கேள்வியும் தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து நான் நவம்பர் அல்லது டிசம்பரில் தான் முடிவெடுப்பேன். அதற்கு இன்னும் 8 முதல் 9 மாதங்கள் இருக்கின்றன. அதனால் இப்போது அது குறித்து சொல்ல முடியாது. டிசம்பர் மாதம் மினி ஏலம் நடக்கும். அதற்கு முன்பாக முடிவெடுப்பேன். அந்தச் சமயத்தில் இருக்கும் உடல் தகுதியை வைத்து அடுத்த சீசனில் விளையாடலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பேன். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்" என்றார்.

CSK

மேலும் பேசிய தோனி "இந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து நான் அணியோடு பயிற்சி எடுத்து வருகிறேன். இதையெல்லாம் வைத்து தான் அடுத்த சீசன் குறித்து முடிவெடுக்க வேண்டும். இப்போது எதற்கு அந்த தலைவலியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நான் சென்னை அணியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். சிஎஸ்கேவுக்காக நான் எப்போதும் இருப்பேன். அது பிளேயிங் லெவனில் இருந்தாலும், அதற்கு வெளியே இருந்தாலும் சரி
- எம்.எஸ்.தோனி

இன்றைய ஆட்டத்தை இன்னொரு இறுதிப் போட்டியாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நாளுக்காக கடந்த இரு மாதங்களாக கடுமையாக உழைத்துள்ளோம். இந்த வெற்றியில் அனைவரின் பங்கும் இருக்கிறது. வாய்ப்புகளை அனைவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டனர்" என்றுள்ளார்.