நடப்பு ஐபிஎல் சீசனில் கடைசிக்கட்ட லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மற்றும் நாளை நடைபெறும் அணிகளின் வெற்றியே, தோல்வியே பிளே ஆஃப் சுற்றைத் தீர்மானிக்கும் என்பதால் ஐபிஎல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. அந்த வகையில் இன்று, 67வது லீக் போட்டி டெல்லியில் சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் ஜெயித்த சென்னை அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக டெவோன் கான்வே 87 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 79 ரன்களையும் எடுத்தனர். பின்னர், கடுமையான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை மட்டுமே எடுத்து, 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டெல்லி அணியை, சென்னை வீழ்த்தியதன் மூலம், நடப்பு சீசனில் 2வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. (ஏற்கெனவே முதல் ஆளாக குஜராத் டைட்டன்ஸ் நுழைந்துள்ளது). இதன்மூலம் சென்னை அணி, 12வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது நடைபெறும் 16வது சீசனையும் பொறுத்து, இதுவரை 12 முறை பிளே ஆஃப்க்குள் நுழைந்த ஒரே அணியாக சென்னை அணி புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது சென்னை அணி, பங்கேற்ற 14 சீசன்களில் (2 சீசன்களில் சென்னை அணி பங்கேற்கவில்லை) 12 முறை பிளே ஆஃப்க்குள் நுழைந்திருப்பதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கேப்டன் தோனியைப் புகழ்ந்து வருகின்றனர். இந்த வெற்றியை சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன், அதை வைரலாக்கியும் வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி, இதுவரை 14 போட்டிகளில் விளையாடி, அதில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 17 புள்ளிகளைப் பெற்று 2வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.