Endgame -அப்படி அழைப்பதுதான் பொருத்தமாய் இருக்கும் ஆர்.சி.பியும் குஜராத்தும் மோதும் போட்டியை. லீக் சுற்றின் கடைசி போட்டி மட்டுமல்ல, ஏதோவொரு அணியின் ப்ளே ஆப் கனவிற்கும் எண்ட் கார்டு போடும் கேம் இது. நேற்று மாலை நடந்த போட்டியில் மும்பை வென்றிருக்க, இரவு நடந்த இந்தப் போட்டியில் வென்றே ஆகவேண்டிய கட்டாயம் பெங்களூருக்கு. ஆனால் 'குறுக்க இந்த கெளசிக் வந்தா' எனும்படியாக மழை உள்ளே புகுந்து குட்டையைக் குழப்ப பயந்து கிடந்தார்கள் ஆர்.சி.பி ரசிகர்கள். நல்லவேளையாக வழக்கமான பெங்களூரு டிராஃபிக்கை கணித்து முக்கால்வாசிக் கூட்டம் முந்தின நாள் இரவே வந்து சேர்ந்துவிட்டதால் க்ரவுண்ட் நிரம்பி வழிந்தது.
7 மணிவரை மழையும் தூறலுமாய் இருந்ததால் டாஸ் போடவே தாமதமானது. ஒருவழியாய் 7.48க்கு டாஸ் போட வந்தார்கள் டுப்ளெஸ்ஸியும் ஹர்திக்கும். டாஸ் வென்ற பாண்ட்யா சேஸிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் எந்த மாற்றங்களுமில்லை. பெங்களூர் அணியில் ஒரே ஒரு மாற்றம். கரன் சர்மாவிற்கு பதில் ஹிமான்ஷு சர்மா. எட்டு மணி போல மீண்டும் தூறல் விழ, திரும்பவு ஏறக்கட்டினார்கள்.
ஒருவழியாய் மழை ஓய ஒரு மணிநேரம் தாமதமாய் தொடங்கியது போட்டி. ஆனால் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
ஷமி வீசிய முதல் ஓவரில் ஆறே ரன்கள். யஷ் தயால் வீசிய அடுத்த ஓவரிலோ நான்கே ரன்கள். டுப்ளெஸ்ஸி களத்திலிருக்கும்போது இப்படியான ஸ்லோவான தொடக்கம் அரிதாகவே நிகழும். அதனாலேயோ என்னவோ அடுத்த ஓவரிலிருந்து வெளுக்க ஆரம்பித்தார்.
ஷமியின் அந்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் உள்பட நான்கு பவுண்டரிகள். யஷ் தயாலின் அடுத்த ஓவரில் கோலியும் தன் பங்கிற்கு ஹாட்ரிக் பவுண்டரிகள் அடிக்க ஆர்ப்பரித்தது ஆர்.சி.பி ரசிகப்படை. ரஷித்தை பதறிப்போய் அழைத்துவந்தார் பாண்ட்யா. அந்த ஓவரில் கொஞ்சமாய் கோபம் தணிந்தார்கள் ஓபனர்கள். பத்தே ரன்கள். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை நூர் அகமது வீச அதில் ஒன்பது ரன்கள். ஸ்கோர் 62/0.
ரஷித் வீசிய ஏழாவது ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே. பொறுமை இழந்த டுப்ளெஸ்ஸி பேட்டை சுற்ற அது எட்ஜாகி ஸ்லிப்பில் நின்ற திவேதியா கையில் தஞ்சமடைந்தது. அவுட்டா இல்லையா என அம்பயரே யோசித்துக்கொண்டிருக்க பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கினார் டுப்ளெஸ்ஸி.
ஒன் டவுன் இறங்கிய மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸும் பவுண்டரியும் பறக்கவிட்டார். அவர் அசந்த நேரம் பார்த்து ஸ்டம்ப்பைத் தகர்த்தார் ரஷித். கே.ஜி.எப்பில் மிச்சமிருப்பது கே எனும் கிங் கோலி மட்டுமே. சீக்கிரமே நூர் போட்ட வைட் லென்த் பந்தை தொட ஆசைப்பட்டு இறங்கி லோம்ரோரும் ஸ்டம்பிங் ஆனார். ஸ்கோர் பத்து ஓவர்கள் முடிவில் 93/3.
ஒண்டிப்புலியாய் நின்று சுழன்றுகொண்டிருந்த கோலியோடு கொஞ்ச நேரம் பார்ட்னர்ஷிப் போட்டார் ப்ரேஸ்வெல். மொகித் சர்மாவின் அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு இரண்டு பவுண்டரிகள் அடித்து ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார்.
மறுபுறம் அரைசதம் கடந்தார் கோலி. 14வது ஓவரில் ஷமி ஃபுல் டாஸ் போட்டு ஆசைகாட்ட அதற்கு பலியானார் ப்ரேஸ்வெல், அவரிடமே கேட்ச் கொடுத்து. ஃபினிஷராய் கடந்த சீசனில் வலம் வந்த தினேஷ் கார்த்திக்கும் முதல் பந்திலேயே டக் அவுட். ஐ.பி.எல்லில் இப்போது அதிக டக் அவுட் ஆன வீரர் என்கிற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் தினேஷ் கார்த்திக். ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 136/5.
டெத் ஓவரில் ரஷித் ஓவரை மட்டும் கடத்திவிட்டு மற்ற ஓவர்களில் பவுண்டரிகளை விளாசிக்கொண்டே இருந்தார் கோலி. யஷ் தயாலின் 18வது ஓவரில் ஒரு பவுண்டரியும் சிக்ஸும் அடித்து 80களில் நுழைந்தார். ஷமியின் அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள். சடுதியில் 99 ரன்னுக்கு வந்து நின்றார்.
மொத்த மைதானமும் எழுந்து நிற்க, மொகித் ஷர்மா பந்தில் சிங்கிள் தட்டி சதத்தை தொட்டார். தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள். ஐ.பி.எல்லில் இப்படி தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களில் சதம் அடிக்கும் மூன்றாவது வீரர் இவர்.
ஐ.பி.எல்லில் அதிக சதங்கள் அடித்த சாதனைக்கு சொந்தக்காரரும் இப்போது கோலியே. மொத்தமாய் ஏழு சதங்கள்.
மீதி சம்பிரதாயத்தை அனுஜ் ராவத் முடித்துவைக்க 20 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 197/5.
பவர்ப்ளேயில் ஆர்.சி.பியின் ஆஸ்தான பவுலர் சிராஜ் முதல் ஓவரை வீச, அதில் 2 ரன்கள். இரண்டாவது ஓவர் பார்னெல். அதில் மாறி மாறி பவுண்டரிகள் அடித்தார்கள் கில்லும் சஹாவும். 13 ரன்கள். மூன்றாவது ஓவரில் சிராஜ் வீசிய லென்த் பாலை எக்ஸ்ட்ரா கவர் பக்கம் சஹா தட்டிவிட அதை எம்பி ஒற்றைக்கையில் அசரடிக்கும் வகையில் பிடித்தார் பார்னெல். இப்போது களத்தில் இம்பேக்ட் பிளேயராய் விஜய் சங்கர். முதல் ஐந்து ஓவர்களுக்கு காற்று பெங்களூர் பக்கமே வீசியது. 35/1 தான் ஸ்கோர். ஆறாவது ஓவரிலிருந்து வேகம் கூட்டினார்கள் குஜராத் பேட்ஸ்மேன்கள். பார்னெலின் அந்த ஓவரில் 16 ரன்கள். ஸ்கோரும் ஐம்பதைத் தாண்டியது.
கடந்த பல சீசன்களாக முரட்டு ஃபார்மில் இருக்கும் கில் அடிப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இந்த சீசனின் சர்ப்ரைஸான விஜய் சங்கர் இந்த ஆட்டத்திலும் அதிரடி காட்டியதுதான் ஆர்.சி.பி ரசிகர்களை பதட்டமாக்கியது. இருவருமாய் அடுத்த நான்கு ஓவர்களில் 39 ரன்கள் எடுத்தார்கள். பத்து ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 90/1.
12வது ஓவரில் கில் அரைசதம் தொட, அவரை விரட்டி வந்தார் சங்கர். ப்ரேஸ்வெல்லின் 13வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து பார்ட்னருக்கு பை பை சொல்லி முன்னால் பறந்தார் கில்.
'உனக்கு ஒரு ஓவர்ன்னா எனக்கு ஒரு ஓவர்' என காத்திருந்து வைசாக்கின் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் அடித்து அரைசதம் அடித்தார் சங்கர். அடித்த கையோடு கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறவும் செய்தார். ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 148/2. குஜராத் பக்கம் இருந்த வெற்றி முள்ளை நகர்த்தி பெங்களூரு பக்கம் கொண்டுவந்தார் ஹர்ஷல்.
உபயம் : ஷனாகா டக் அவுட்.
அதன்பின் வந்த கில்லர் மில்லரை சிராஜ் பெவிலியனுக்கு திருப்பியனுப்ப. நம்பிக்கை துளிர்த்தது ஆர்.சி.பி முகாமில். 'அதெல்லாம் இருக்கவே கூடாது' என அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடித்து அதற்கு ஆப்படித்தார் கில். கடைசி ஓவரில் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவை. கில்லின் ஸ்கோர் 98. முதல் இரண்டு பந்துகள் எக்ஸ்ட்ராவாக, இப்போது தேவை ஆறு பந்துகளில் ஆறு ரன்கள். சிக்ஸர் அடித்து முடித்து வைத்தார் கில். தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடிக்கும் நான்காவது வீரர் கில். கிங் கோலியை அப்படியே பின்பற்றிய ப்ரின்ஸ் கில் என சொல்லும்படியான இன்னிங்ஸ் அது. ஆட்டநாயகனும் கில் தான்.
இப்படியாக ஆர்.சி.பியின் கோப்பைக் கனவு இம்முறையும் கலைந்துபோனது. டெத் ஓவர் பவுலிங், மிடில் ஆர்டரின் பேட்டிங் போதாமை, ஹேசல்வுட், ஹஸரங்கா என இரு முக்கிய பவுலர்களின் காயம் என இதற்கு ஏகப்பட்ட காரணங்கள். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி ஓங்கி உயர்ந்து நிற்கிறது கிரிக்கெட் மீதான கோலியின் பிரமாண்ட ஆளுமை.
மறுபுறம் ஐ.பி.எல்லில் இதுவரை சேஸ் செய்திருக்கும் 17 போட்டிகளில் 14-ல் வெற்றி பெற்றிருக்கிறது குஜராத். தொடர்ந்து இரண்டாவது முறையாக டேபிள் டாப்பர்.
முதல் ப்ளே ஆஃப் போட்டி சென்னைக்கும் குஜராத்திற்கும். குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே! சென்னை இதுவரை குஜராத்தை வென்றதே இல்லை. சொந்த மண்ணில் அந்தக் களங்கத்தை தோனி தலைமையிலான சி.எஸ்.கே துடைக்குமா என்பது இரண்டு நாள்களில் தெரிந்துவிடும்.
மறுபக்கம் மும்பையும் லக்னோவை வென்றதே இல்லை. அரவணைத்த சீனியர் ரோஹித்துக்கும் அவரைப் பார்த்து வளர்ந்த ஜுனியர் க்ருணாலுக்கும் இடையே நடக்கிறது எலிமினேட்டர்.
இந்த சீசனில் சென்னையில் விளையாடிய போட்டிகளில் இரு அணிகளுக்கும் தோல்வியே பரிசாகக் கிடைத்தது.
இந்தமுறை வெல்லப்போவது யார் எனத் தெரிந்துகொள்ள எக்ஸ்ட்ரா ஒருநாள் காத்திருக்க வேண்டும்.