கேப்டன்சி மாற்றம், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா முதலிய மூன்று மூத்தவீரர்களுக்கு இடையே விரிசல், ரசிகர்கள் ட்ரோல் என மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரில் பல்வேறு பிரச்னைகளுடன் தங்களுடைய பயணத்தை தொடங்கியுள்ளது.
முதலிரண்டு போட்டிகளில் தோல்விபெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரு போட்டியில் கூட வெல்லாத ஒரே அணியாக இருந்துவருகிறது. இன்னும் தங்களுடைய வெற்றி பட்டியலை தொடங்காத மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில் வெற்றிபெற்ற ஆகவேண்டிய 3வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடிவருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
முக்கியமான போட்டியில் டாஸை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணி பவுலர்கள், கண் இமைப்பதற்குள் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கிப்போட்டனர்.
முதல் ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட், தன்னுடைய முன்னாள் அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டினார். சிறப்பான ஸ்விங் டெலிவரியை வீசிய போல்ட், ரோகித் சர்மா மற்றும் நமன் திர் இரண்டு வீரர்களையும் கோல்டன் டக்கில் வெளியேற்றி கலக்கிப்போட்டார். உடன் இம்பேக்ட் வீரராக களத்திற்கு வந்த டெவால்ட் பிரேவிஸையும் முதல் பந்திலேயே 0 ரன்னில் வெளியேற்றிய போல்ட் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாற, டிரெண்ட் போல்ட்டை தொடர்ந்து பந்துவீச வந்த பர்கர் இஷான் கிஷானை 16 ரன்னில் வெளியேற்றி அசத்தினார். 20 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர், திலக் வர்மா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் போராடி வருகின்றனர். ஹர்திக் பாண்டியா பவுண்டரிகளா பறக்கவிட்டார். திலக் வர்மாவும் தன்னுடைய பங்கிற்கு பவுண்டரிகளை அடித்தார். இதனால், மும்பை அணி சரிவில் இருந்து மீண்டு வந்தது. ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போட்டார் சாஹல். ஹர்திக் பாண்டியா சாஹல் பந்தை சிக்ஸர் விளாசா முயன்று தூக்கி அடித்தார். ஆனால், பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார். 76 ரன்னில் 5 ஆவது விக்கெட்டை இழந்தது மும்பை. ஹர்திக் 21 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து வந்த பியூஸ் சாவ்லா 3 ரன்னில் நடையைக்கட்ட மும்பை அணி 83 ரன்களுக்கு ஆறாவது விக்கெட்டை இழந்தது.