SA20 தொடரில் ஜோஹன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 243 ரன்கள் குவித்து அசத்தியது MI கேப் டவுன் அணி. ரஸி வேன் டெர் டுசன், ரயன் ரிக்கில்டன் ஆகியோர் அசத்தலாக விளையாடி அந்த அணி மாபெரும் ஸ்கோர் எடுக்க உதவினார்கள். அதன் விளைவாக சூப்பர் கிங்ஸ் அணியை MICT 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
தென்னாப்பிரிக்காவின் டி20 தொடரான SA20யின் இரண்டாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இத்தொடரின் நான்காவது போட்டியில் MI கேப் டவுன் அணி ஜோஹன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸை ஜோஹன்னஸ்பெர்க்கில் சந்தித்தது. MI, சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி என்பதால், இந்த மிகப் பெரிய ரைவல்ரி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். MI தொடக்க வீரர்களாக ரஸீ வென் டெர் டுசன், ரயான் ரிக்கிள்டன் ஆகியோர் களமிறங்கினார்கள்.
முதல் இரு ஓவர்களில் இருவரும் பொறுமையாகவே ஆடினார்கள். அவ்விரு ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 ரன்கள் தான் எடுத்திருந்தது. லிசாத் வில்லியம்ஸ் வீசிய மூன்றாவது ஓவரில் இரு பௌண்டரிகள் அடித்து அதிரடியைத் தொடங்கிவைத்தார் வேன் டெர் டுசன். நாண்ட்ரே பர்கர் வீசிய அடுத்த ஓவரிலோ ரன் மழை பொழிந்தது. ரிக்கில்டன் 2 சிக்ஸர்கள், வேன் டெர் டுசன் 2 ஃபோர், 1 சிக்ஸ் என விளாச, அந்த ஓவரில் மட்டுமே 27 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன்பிறகு அவர்களின் அதிரடி நிற்கவே இல்லை. ஒவ்வொரு ஓவரில் ஃபோரும், சிக்ஸும் அடித்துக்கொண்டே இருந்தார்கள். பவர்பிளே முடிவில் விக்கெட்டே இழக்காமல் 73 ரன்கள் விளாசியது MI கேப் டவுன்.
விக்கெட் வீழ்த்த முடியாத சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஃபாஃப் பல்வேறு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால் அது எந்த வகையிலும் அவருக்கு உதவிடவில்லை. அனுபவ வீரர் இம்ரான் தாஹிர் ஓவரையும் அந்த இரு பேட்ஸ்மேன்களும் பறக்கவிட்டார்கள். 26 பந்துகளில் முதல் ஆளாக தன் அரைசதத்தை நிறைவு செய்தார் வேன் டெர் டுசன். ரிக்கில்டனோ 27 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். 10வது ஓவருக்கு மேல் ஃபோர் கூட அடிக்கக்கூடாது என்று முடிவு செய்தார்களோ என்னவோ சிக்ஸர்களாக விளாசினார்கள். ரொமேரியோ ஷெபர்ட் பந்தில் சிக்ஸர் அடித்து 46 பந்துகளில் தன் சதத்தை நிறைவு செய்தார் வேன் டெர் டுசன். 15.2 ஓவர்களில் வெற்றிகரமாக 200 ரன்களைக் கடந்தது அந்த பார்ட்னர்ஷிப்! ஆனால், அடுத்த பந்திலேயே அந்த கூட்டணியைப் பிரித்தார் இம்ரான் தாஹிர். 104 ரன்கள் அடித்திருந்த நிலையில் வெளியேறினார் வேன் டெர் டுசன்.
வேன் டெர் டுசன் வெளியேறியவுடன் MICT வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். 5 பந்துகளில் 5 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் டிவால்ட் பிரெவிஸ். அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 5 பந்துகளில் வேகமாக 12 ரன்கள் எடுத்து உடனடியாக வெளியேறினார். இதற்கு மத்தியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த ரயான் ரிக்கில்க்டனும் 98 ரன்களில் பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் சாம் கரணும் 3 ரன்களில் வெளியேற, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது MI கேப் டவுன்.
மாபெரும் இலக்கை சேஸ் செய்த சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் ரோனன் ஹெர்மன் அவுட். நான்காவது ஓவரின் முதல் பந்தில் கேப்டன் டுப்ளெஸிஸும் காலி. பவர்பிளேவின் கடைசிப் பந்தில் மொயின் அலியும் வெளியேற, 6 ஓவர்கள் முடிவில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ். லியஸ் டுப்லாய், ரொமேரியோ ஷெபர்ட் இருவரும் மட்டும் ஓரளவு போராடினார்கள். டுப்லாய் 47 ரன்களுக்கும், ஷெபர்ட் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 17.5 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது சூப்பர் கிங்ஸ். அதனால் அந்த அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ரஸி வேன் டெர் டுசன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.