விளையாட்டு

'கிரிக்கெட்டில் இப்படியெல்லாமும் நடக்கும்'-பெரிய அணிகளுக்கு அப்செட் கொடுத்த போட்டிகள்!

'கிரிக்கெட்டில் இப்படியெல்லாமும் நடக்கும்'-பெரிய அணிகளுக்கு அப்செட் கொடுத்த போட்டிகள்!

Rishan Vengai

எப்போதும் எந்த உலகக்கோப்பையிலும் இல்லாத வகையில் நேரடியாக உலகக்கோப்பையில் விளையாடிய பெரிய அணிகளையும், தகுதிசுற்று போட்டி மூலம் உள்ளே வந்த சிறிய அணிகள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய அப்செட்டுகளை இந்த உலகக்கோப்பையில் நிகழ்த்தி காட்டியுள்ளன. அப்படி இந்த 2022 டி20 உலக்கோப்பையில் சிறிய அணிகள் ஏற்படுத்திய அப்செட்டுகளை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கலாம்

இலங்கையை கலங்கடித்த நமீபியா & கார்த்திக் மெய்யப்பன்

என்ன தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இலங்கை அணி ஆசியகோப்பையை வென்றிருந்தாலும், ஐசிசி தரவரிசை மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் குறைவான வெற்றிகளே பதிவு செய்திருந்ததால் இலங்கை அணி தகுதிசுற்று போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இந்நிலையில் 2022 டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டி இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே தொடங்கப்பட்டது. அந்த போட்டியில் இலங்கை அணியே வெல்லும் என்றிருந்த நிலையில், பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய நமீபியா அணி இலங்கை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதியாக வந்த பவுலர்கள் சிறிது ரன்கள் சேர்த்ததால் 100 ரன்களை கடந்து ஆல் அவுட் ஆனது இலங்கை அணி.

அடுத்து நடந்த யுஏஇ போட்டியிலும் இலங்கை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார் யுஏஇ ஸ்பின்னர் கார்த்திக் மெய்யப்பன்.

வெஸ்ட் இண்டிஸை வீழ்த்திய ஸ்காட்லாந்து

முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்து அதிர்ச்சியளித்தது போலவே, அடுத்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரிய அணிகளுக்கு சவால் கொடுக்க நாங்களும் களத்தில் இருக்கோம்னு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸின் 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஒரு பெரிய அணியை அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்ட அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 147 ரன்களை விரட்டிய அயர்லாந்து அணி 17ஒவர் முடிவில் வெறும் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 150 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.

இங்கிலாந்து அணியை பதம்பார்த்த அயர்லாந்து

சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொண்ட அயர்லாந்து முதலில் பேட்டிங் ஆடியது. டாப் ஆரடர் பேட்டர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை சிக்சர்கள், பவுண்டரிகளாக விரட்டினர். விக்கெட்டுகள் இழந்தாலும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த 157 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களை அபாரமான பந்துவீச்சால் அடுத்தடுத்து வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தது அயர்லாந்து. இடையில் மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்ட போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து அணி. தொடக்கத்துலயே அதிக விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு காரணமாய் அமைந்தது.

பாகிஸ்தானின் நிம்மதியை கெடுத்த ஜிம்பாப்வே

முதல் போட்டியில் இந்தியாவிடம் பெரிய அடியை வாங்கிவிட்டு இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வேவை சந்தித்தது பாகிஸ்தான் அணி. இந்தியாவுடனான தோல்வியிலிருந்து வெளியே வராத பாகிஸ்தான் அணி எளிதாக வெல்லகூடிய போட்டியை கோட்டை விட்டது. சரியான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே இறுதி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் முதல் முறையாக வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் அடுத்து வரக்கூடிய அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது பாகிஸ்தான் அணி.

இந்த உலக்கோப்பையில் பெரிய அப்செட்டாக அமைந்த போட்டி

இந்தியா போன்ற பெரிய அணியை வெற்றிபெற்றதையடுத்து குரூப் 2 பிரிவில் முதலிடத்தை தக்கவைத்திருந்தது தென்னாப்பிரிக்கா அணி. இந்நிலையில் கடைசி குரூப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியை வென்று எளிதாகவே அரையிறுதிக்குள் நுழையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக அழுத்தமான போட்டி என்றாலே எப்போதும் தோல்வியை தழுவும் என்ற சாபத்திலிருந்து மீளாத தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியிலும் கேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெதர்லாந்திடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பையை விட்டே வெளியேறியுள்ளது தென்னாப்பிரிக்கா.