டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்புகள் நழுவிய நிலையில், பாகிஸ்தான் அணி பீனிக்ஸ் பறவைப் போன்று மீண்டும் இறுதிப் போட்டிக்கு 3-வது முறையாக தகுதிப் பெற்றுள்ளது. அந்த அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆரம்பம் முதல் தற்போது வரை வெற்றி மற்றும் தோல்வியடைந்தது குறித்துப் பார்க்கலாம்.
ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி பங்குபெற்றது. தலைசிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் முகமது ரிஸ்வான், பாபர் அசாம், சிறந்த பவுலர்கள் ஷாகீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஆல் ரவுண்டர் சதாப் கான் என பாகிஸ்தான் அணி ஒரு வலுவான அணியாகவே பார்க்கப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டு டி20 போட்டியில் 29 இன்னிங்சில் 1326 ரன்களை எடுத்து ஒரே ஆண்டில் டி20 போட்டியில் அதிக ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ரிஸ்வான் பெற்றிருந்தார்.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி!
இதனால் அந்த அணி எப்படியும் பல சாதனைகள் புரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்ற அந்த அணி, தனது முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தது. இந்தியாவுடனான முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்பே உடனான போட்டியில் ஒரு ரன் வித்தயாசத்திலும் தோல்வியடைந்தது.
எப்போதும் டீம் அமைத்து வலுவான துவக்கத்தை தரும் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் பாபர் அசாம் டக் அவுட் ஆனநிலையில், ரிஸ்வான் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
புள்ளி பட்டியலில் கடைசி இடம்!
இதேபோல் ஜிம்பாப்வேக்கு எதிரானப் போட்டியில் ரிஸ்வான் 14 ரன்களும், பாபர் அசாம் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்த இருப் போட்டிகளிலும் வலுவான துவக்கத்தை அளிக்காததும், அவர்களை மட்டுமே சார்ந்து இருந்ததும், மிடில் ஆர்டரில் நிதானமான ஆட்டத்தை அளிக்கும் பேட்ஸ்மேன்கள் இல்லாததுமே அந்த அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருந்த பாகிஸ்தான் கிட்டத்தட்ட அரையிறுதிக்கு தேர்வாகாது என்றே எதிர்பார்க்கப்பட்டது.
நம்பிக்கை கொடுத்த இஃப்திகார் அகமது, ஷான் அகமது!
இந்தத் தொடரில் இஃப்திகார் அகமது, ஷான் அகமது, சதாப் கான் ஆகியோர் சிறப்பாகவே ஆடினார். இதனால் நெதர்லாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், வலுவான தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது.
இந்தப் போட்டிகளில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிஸ்வான் (49 ரன்கள்) எடுத்ததும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் வீரர்களான அகமது, நவாஸ், சதாப் கான் நன்றாக ஆடியதுமே பாகிஸ்தான் ஜெயிக்க காரணமாக இருந்தது. மேலும் சதாப் கான் மற்றும ஷாகீன் அஃப்ரிடி அதிரடியாக விக்கெட்டுகளை கைப்பற்றியதும் வெற்றிக்கு மேலும் வலு சேர்ந்தது.
5-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு முன்னேற்றம்!
இந்த இரு வெற்றிகளின் மூலம் 4 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு முன்னேறியது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்து நல்ல ரன் ரேட்டும் பெற்றது. இதனால் குரூப் 2 பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளுடையே மும்முனை போட்டி தென்பட்டது.
நெதர்லாந்து தயவால் பாகிஸ்தானுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
இந்த சூழ்நிலையில் தான், யாரும் எதிர்பாராத வகையில் வங்கதேசத்துக்கு எதிரான தனது கடைசி சூப்பர் 12 சுற்றில் வெற்றிபெற்று பாகிஸ்தான் தனது அரையிறுதியை உறுதிசெய்தது. முன்னதாக தென்னாப்பிரிக்க அணிக்கு அரையிறுதி உறுதி செய்யும் வாய்ப்பு இருந்தும், நெதர்லாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் படுதோல்வியடைந்து டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் முதல் இரு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்கு தேர்வானது.
’எங்கள இனி யாரும் தடுக்க முடியாது’ - ஹைடன்
இந்நிலையில் தான் பாகிஸ்தான் அணி வீரர்களிடம் நீண்ட நேர உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார் அந்த அணியின் ஆலோசகரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன். “இந்த தொடரில் எங்கிருந்து நாம் உள்ளே வந்திருக்கிறோம், இது முற்றிலும் மிராக்கல் என்று தான் சொல்ல வேண்டும், நாம் நம்முடைய முயற்சியில் சிறப்பாக செயல்பட்டால் டி20 போட்டிகளில் எதுவும் சாத்தியம்” என்று வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியிருந்தார்.
மேலும் அவர், “பாகிஸ்தான் அணி உண்மையாகவே எதிரணிகளுக்கு பெரிய அபாயமாக திகழ்கிறது. அரையிறுதியில் உள்ள 3 அணிகளுக்கும் பாகிஸ்தான் அச்சுறுத்தலாகவே இருக்கும். இப்போதைய சூழலில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை. ஒரு அணி கூட இல்லை. பாகிஸ்தான் அணியை காலி செய்துவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் இப்போது பாகிஸ்தனை ஒன்றும் செய்ய முடியவில்லை. முதலிரண்டு போட்டிகளில் தோற்றவுடன் பாகிஸ்தானை வெளியேற்றி விடலாம் என நினைத்தவர்களால் தற்போது தோற்கடிக்க முடியாது என்று மேத்யூ ஹைடன் எச்சரிக்கும் தொணியில் பேசியிருந்தார்.
அரையிறுதியில் அசத்திய பாகிஸ்தான்!
இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. அந்த அணிக்கு ஏற்றவாறு, முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி, பாகிஸ்தானின் வேகப் பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடியின் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள் உள்பட 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் வந்த பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் (57) மற்றும் கேப்டன் பாபர் அசாம் (53) மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டணி அமைத்து தங்களது அதிரடியை காட்டினர்.
இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி பலமிக்கதாகக் காணப்பட்டாலும், பவுலிங், பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் அந்த அணி மீண்டும் கிளர்த்தெழுந்து இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக தேர்வாகி அசத்தியுள்ளது.
பீனிக்ஸ் பறவையாய கம்பேக் கொடுத்த பாகிஸ்தான்!
சொல்லப்போனால் இந்த டி20 உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளாக காணப்பட்ட நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளைக் காட்டிலும், சிறந்த கம்பேக் கொடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. அதேநேரத்தில், 2007-ம் ஆண்டு இந்தியாவும், 2009-ம் ஆண்டில் பாகிஸ்தானும், 2010-ம் ஆண்டில் இங்கிலாந்தும் கோப்பைகளை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் மோத வாய்ப்பு!
நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளும். டி20 உலகக்கோப்பை தொடங்கப்பட்ட 2007 ஆம் ஆண்டி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடியது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடினால் ரசிகர்கள் மத்தியில் கூடுதலான எதிர்ப்பு இருக்கும். இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளும் சம பலத்துடன் இருக்கின்றன. அதனால், நிச்சயம் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.