விளையாட்டு

"முகமது சமிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் நடராஜன்" - சஞ்ஜய் மஞ்சரேக்கர்

"முகமது சமிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் நடராஜன்" - சஞ்ஜய் மஞ்சரேக்கர்

jagadeesh

தன்னுடைய சிறப்பான பந்துவீச்சின் மூலம் முகமது சமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் நடராஜன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்ஜய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தன்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியில் நடராஜன் சிறப்பாக பந்துவீசியது பலரையும் கவர்ந்துள்ளது.

இது குறித்து சோனி சிக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சஞ்ஜய் மஞ்சரேக்கர் "தன்னுடைய திறமையான பந்துவீச்சு மூலம் சமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் நடராஜன். இப்போது பும்ரா மற்றும் நடராஜனை அணியில் சேர்க்கவே இந்தியா யோசிக்கும். காயத்திலிருந்து மீண்டாலும் சமி மீண்டும் டி20 போட்டியில் பங்கேற்பது சந்தேகமே" என்றார்.

மேலும் பேசிய அவர் "நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுகிறார், அதுதான் அவரின் பலம். ஆடும் லெவனில் பும்ரா, நடராஜன் இருந்தால் அது தீபக் சஹாருக்கும், சமிக்கும் நெருக்கடியாகவே இருக்கும். ஏனென்றால் அவர்கள் ஸ்விங் பவுலர்கள். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து முதல் சர்வதேச டி20 போட்டியில் கிளென் மேக்ஸ்வெல்லை லென்த் பால் மூலம் அவுட் செய்வதெல்லாம் அசாதாரணமான விஷயம்" என்றார் சஞ்ஜய்.

தொடர்ந்து பேசிய அவர் "யார்க்கர் மட்டும் போடுபவர் அல்ல நடராஜன். அவரால் பந்தை ஸ்விங் செய்ய முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தார் என்றே தெரியாத நபர், இப்போது உலகின் முக்கிய பேட்ஸ்மேன்களில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். மிகப்பெரிய இந்திய அணியின் இணைந்தது எல்லாம் வரலாற்று தருணங்கள்" என்றார் சஞ்ஜய் மஞ்சரேக்கர்.