விளையாட்டு

15 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத், டெல்லியிடம் சரண்டர்!

15 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத், டெல்லியிடம் சரண்டர்!

webteam

ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபில் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேட்பிடலஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா 4 ரன்னிலும் ஷிகர் தவான் 7 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து ஜோடி சேர்ந்த முன்றோ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தனர். முன்றோ 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.


பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பன்ட் சற்று நிதானமாக ஆடினர். இதனால் டெல்லி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. ஐயர் 5 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து புவனேஸ்வர்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ரிஷாப் பன்ட்டும் 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் கடைசி 4 ஒவர்களில் டெல்லி அணி வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இறுதியில் அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது மூன்று விக்கெட்டுகளையும் புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியில் டேவிட் வார்னரும் பேர்ஸ்டோவும் அருமையானத் தொடக்கம் தந்தனர். இவர்கள் ஆடியதைப் பார்த்தபோது ஐதராபாத் அணி வெற்றி பெற்றுவிடும் என்றே தோன்றியது. ஆனால், பேர்ஸ்டோவ் 41 ரன்னிலும் டேவிட் வார்னர் 51 ரன் எடுத்தும் ஆட்டமிழக்க, போட்டி தலைகீழானது. அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் உட்பட யாருமே ஒற்றை இலக்க எண்ணைத் தாண்டவில்லை. வெறும் 15 ரன் சேர்ப்பதற்குள் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

(டெல்லி வீரர் தவானின் மனைவி, செல்ஃபி எடுக்கிறார்)

இதனால் அந்த அணி 18.5 ஓவர்களில் 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 39 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

டெல்லி தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும் கீமோ பால், கிறிஸ் மோரிஸ் தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 4 ஓவர்களில் 17 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கீமோ பால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.