விளையாட்டு

உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் 0 ரன், 4 விக்கெட்! பஞ்சாபை சுட்டெரித்தது சன்ரைசர்ஸ்

உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் 0 ரன், 4 விக்கெட்! பஞ்சாபை சுட்டெரித்தது சன்ரைசர்ஸ்

ச. முத்துகிருஷ்ணன்

உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் அபார பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. மும்பைக்கு எதிரான வெற்றியின் உத்வேகத்தை தொடரும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹாட்ரிக் வெற்றி பெற்று தன் வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் களமிறங்கின.

காயம் காரணமாக பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஷிகர் தவான் பஞ்சாப் அணியை வழிநடத்தினார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் ஓப்பனர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், பிரப்சிம்ரான் சிங் ஜோடிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் தவான் வெளியேற, நடராஜன் வேகத்தில் திணறிய பிரப்சிம்ரான் அவுட்டாகி வெளியேறினார். பேர்ஸ்டோவும் ஜித்தேஷ் ஷர்மாவும் வந்த வேகத்தில் நடையை கட்ட 61 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது பஞ்சாப். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாட, அவருக்கு பக்க பலமாக நிதானமாக விளையாடினார் ஷாரூக் கான். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் நிலையான வேகத்தில் உயரத் துவங்கியது. 33 பந்துகளில் அதிரடியாக விளையாடி 60 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் லிவிங்ஸ்டன்.

அவருக்கு பின்வந்தவர்களில் ஓடியன் ஸ்மித் மட்டும் 13 ரன் சேர்க்க, மற்ற அனைவரும் கடைசி ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் வரிசையாக ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். உம்ராம் மாலிக் வேகத்தில் பஞ்சாப் அணி இறுதி ஓவரில் தூள் தூளாக நொறுங்கியது. 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை குவித்தது பஞ்சாப். உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தினர்.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனர்களாக வில்லியன்சன், அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். வில்லியம்சன் ரபாடா பந்துவீச்சில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி, அபிஷேக் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடினார். ஏதுவான பந்துகளை மட்டும் இருவரும் எல்லைக் கோட்டுக்கு விரட்டி கவனமாக விளையாடினார்.

இருப்பினும் ராகுல் சஹார் பந்துவீச்சில் ராகுல் திரிபாதி 34 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகி வெளியெறினார். அவரை தொடர்ந்து அபிஷேக் ஷர்மாவும் 31 ரன்கள் குவித்த நிலையில் ராகுல் சஹார் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரான் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

7 பந்துகளை மீதம் வைத்து எளிதாக 152 ரன்களை எட்டியது சன்ரைசர்ஸ். 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அந்த அணிக்கு இது 4வது தொடர்வெற்றியாகும். ஐடன் மார்க்ரம் 41 ரன்களுடன், நிக்கோலஸ் பூரான் 35 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அபாரமாக பந்துவீசிய உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமாரால் அந்த அணி எளிதாக வெற்றியை ருசித்தது.