விளையாட்டு

'ஏன் ஓய்வு? எதுக்கு ஓய்வு? 2023 உலகக் கோப்பை வரை விளையாட வைங்க' - சுனில் கவாஸ்கர்

'ஏன் ஓய்வு? எதுக்கு ஓய்வு? 2023 உலகக் கோப்பை வரை விளையாட வைங்க' - சுனில் கவாஸ்கர்

JustinDurai

'2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரைக்கும் இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேனுக்கும் ஓய்வு வழங்கக் கூடாது' என்று தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறிய இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி, மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களுடன் விளையாடி வருகிறது.

டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய நிலையில், அரையிறுதி சுற்றோடு வெளியேறிய இந்திய அணியோ, நியூசிலாந்து அணிக்கு தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களை அனுப்பி இருக்கிறது. இதன்மூலம், வாய்ப்பு கிடைக்காத இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயமாக இருந்தாலும்கூட, இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுத்து வருவது ஏன் என்று முன்னாள் வீரர்கள் பலரே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரைக்கும் இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேனுக்கும் ஓய்வு வழங்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சுனில் கவாஸ்கர் மேலும் கூறுகையில், ''ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு நமக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே நேரம் இருக்கிறது. இத்தகைய சமயங்களில் வீரர்களுக்கு ஓய்வு என்பது தேவையில்லை என்பது எனது கருத்து. பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடும் போதுதான் வீரர்களிடையே புரிதல் ஏற்பட்டு நல்ல பேட்டிங் பார்ட்னர்ஷிப் உருவாகும்'' என்றார்.