விளையாட்டு

‘எதிர்காலத்தில் சுப்மன் கில் சிம்ம சொப்பனாக விளங்குவார்’ -இந்திய அணி முன்னாள் வீரர் ஆரூடம்

‘எதிர்காலத்தில் சுப்மன் கில் சிம்ம சொப்பனாக விளங்குவார்’ -இந்திய அணி முன்னாள் வீரர் ஆரூடம்

webteam

”விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வழியில் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பயணிக்க முடியும்” என இந்திய அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பருமான சபா கரீம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “சுப்மன் கில்லின் ஆட்டம் தற்போது நன்றாக உள்ளது. அவரால் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதேநேரத்தில் டெஸ்ட்டில் அவருடைய ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால், அவர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறுவார் என்று நம்புகிறேன். இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டிங் திறமையைக் கண்டு வியக்கிறேன். எதிர்காலத்தில், எதிரணி வீரர்களுக்கு சுப்மன் கில், சிம்ம சொப்பனமாகத் திகழ்வார்.

அதற்கான பயிற்சியை அளித்து அவரை தயார்படுத்த வேண்டும். குறிப்பாக, அவருடைய பேட்டிங்கில் நிறைய மாற்றம் தெரிகிறது. அவர் பேட்டிங்கில் நன்றாகத் தேறியிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி மொத்தம் 360 ரன்கள் குவித்திருந்தார். அதில் தொடக்க ஆட்டத்தில் 149 பந்துகளில் 208 ரன்கள் எடுத்ததன் மூலம் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். அதுபோல், இறுதிப் போட்டியிலும், அவர் வெறும் 78 பந்துகளில் 112 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.