விளையாட்டு

”தடுமாற்றங்கள் நடக்கலாம்; அடுத்த சீசனில் மீண்டு வருவார்” - பண்ட் குறித்து ரோகித் கருத்து

”தடுமாற்றங்கள் நடக்கலாம்; அடுத்த சீசனில் மீண்டு வருவார்” - பண்ட் குறித்து ரோகித் கருத்து

ச. முத்துகிருஷ்ணன்

சிறிய தடுமாற்றங்கள் நடக்கலாம். ஆனால் அவர் வலுவாக மீண்டு வருவார் என்று டெல்லி கேப்பிடஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. டெல்லி தோல்வியடைந்ததால் 16 புள்ளிகள் பெற்றிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

டெல்லி கேப்டன் பண்ட் செய்த டிஆர்எஸ் தவறுக்காக அவர் மீது கடும் விமர்சனங்கள் எழும்பின. பண்டால் கைவிடப்பட்ட மும்பை வீரர் ப்ரெவிஸின் கேட்ச் டெல்லிக்கு அதிக விலை கொடுக்கவில்லை. அவர் 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் டிம் டேவிட்க்கு எதிராக ஒரு கேட்சை மறுபரிசீலனை செய்ய வேண்டாம் என்ற முடிவு அவர்களை பெரிய அளவில் பாதித்து விட்டது. டிம் டேவிட் 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து மும்பையை வெற்றியை நோக்கி நகர்த்தி விட்டார்.

இந்நிலையில் பண்ட் குறித்து பேசிய மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா, “அவர் ஒரு தரமான கேப்டன், அதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த சீசன்களில் அவர் தனது அணியை எப்படி வழிநடத்தினார் என்பதை நாங்கள் பார்த்தோம். சில நேரங்களில் விஷயங்கள் நீங்கள் நினைத்தபடி நடக்காது. நான் இதுபோன்றவற்றைச் சந்தித்திருக்கிறேன். நானும் அவரிடம் இதைப் பற்றி தான் கூறினேன். இதில் இருந்து நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம் மற்றும் விஷயங்களை எளிமையாக வைக்க முயற்சி செய்யலாம்.

அவர் சிறந்த மனம் கொண்டவர், அவர் விளையாட்டை பின்னால் இருந்து நன்றாகப் படிப்பார். இது ஒரு உயர் அழுத்த போட்டி மற்றும் அந்த சிறிய தடுமாறல்கள் நடக்கலாம். ஆனால் அது முக்கியம் அல்ல. தன்னம்பிக்கையை இழக்கவும், உங்களை சந்தேகிக்கத் தொடங்கவும் இல்லை. அது பற்றி நான் அவரிடம் பேசினேன். அவர் நம்பிக்கையுள்ளவர், அடுத்த சீசனில் அவர் வலுவாக வருவார்," என்று கூறினார்.