இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக ஸ்டுவர்ட் பின்னி 6 டெஸ்ட் போட்டிகளிலும், 14 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 459 ரன்களையும் 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஸ்டுவர்ட் பின்னியின் தந்தை ரோஜர் பின்னி 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் அங்கம் வகித்து முக்கியப் பங்காற்றியவர். ஸ்டுவர்ட் பின்னியின் மனைவி மயாந்தி லாங்கர் பிரபலான விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். கடந்தாண்டுதான் இந்தத் தம்பதியனருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
ஸ்டுவர்ட் பின்னி இந்திய அணிக்காக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதே ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார் ஸ்டுவர்ட் பின்னி. 2015 ஆம் ஆண்டுக்கு பின்பு இந்திய அணியில் ஸ்டுவர்ட் பின்னியால் இடம் பிடிக்க முடியவில்லை. 2015 இல் வங்கதேசம் அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது அவரின் சிறந்த ஆட்டமாக கருதப்படுகிறது.
அதேபோல ஒருநாள் போட்டிகளில் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஸ்டுவர்ட் பின்னி என்பதுதான் இன்றளவும் சாதனையாக இருக்கிறது. இந்நிலையில் ஸ்டுவர்ட் பின்னி வெளியிட்ட அறிவிப்பில் "நான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப்பெறுகிறேன். இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடியது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.