ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் அபார சதம் அடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 302 ரன்களில் ஆட்டமிழந்தது. பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களுடன் இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தது. மேற்கொண்டு 106 ரன்கள் சேர்த்த நிலையில் இங்கிலாந்து அணி எஞ்சிய விக்கெட்களை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 76 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதனைத் தொடர்ந்து கேப்டன் ஸ்மித், ஷான் மார்ஷ் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 64 ரன்களுடனும், மார்ஷ் 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. மார்ஷ் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்களுடன் வெளியேறினார். ஏழு வருடத்துக்குப் பிறகு அணிக்கு திரும்பி இருக்கும் பெய்ன், 13 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த ஸ்டார்க் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால், கம்மின்ஸ் நிதானமாக ஆடி, கேப்டன் ஸ்மித்துக்கு ஒத்துழைத்தார். அவர் 42 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். நிதானமாக ஆடிய கேப்டன் ஸ்மித் சதமடித்தார். பத்து மணி நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 108 ரன்களுடனும் ஹஸல்வுட் 2 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர்.