ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விக்கு வீரர்கள் தேர்வில் கேட்பன் ஸ்டீவன் ஸ்மித்தின் தேவையற்ற தலையீடே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் ஆஸி.அணி தோல்வியடைந்து தொடரையும் பறிகொடுத்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி அடிலெய்டில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெற்றதே அந்த அணியின் கடைசி வெற்றியாகும். வெளிநாடுகளில் ஆஸி அணி பங்கேற்ற 11 போட்டிகளிலும் தோல்வியையே தழுவி உள்ளது.
பொதுவாக ஒரு அணி தோல்வியடையும் போது முன்னாள் வீரர்கள் ஆதரவாக குரல் கொடுப்பர். ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் கேப்டன் மீது முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் குற்றச்சாட்டு வைக்கிறார். வீரர்கள் தேர்வில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தின் தேவையற்ற தலையீடே ஆஸ்திரேலிய அணியின் தோல்விகளுக்கு காரணம் என்றும், ஆஷ்டன் ஏகர், கார்ட்ரைட் ஆகியோர் ஸ்மித்தின் நண்பர்கள் என்பதால்தான் அணியில் இடம்பெற்றனர் என்றும் சிறப்பாக விளையாடி வரும் ட்ராவிஸ் ஹெட்டுக்கு முறையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் ஹாக் புகார் தெரிவிக்கிறார். வீரர்கள் தேர்வில் கேப்டன்களின் தலையீடு எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பது நெறிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ரோட்னி ஹாக் ஆலோசனை தெரிவித்துள்ளார்.