விளையாட்டு

மைதான ஊழியர்கள் துகிலுரிப்பு: மன்னிப்பு கேட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம்

மைதான ஊழியர்கள் துகிலுரிப்பு: மன்னிப்பு கேட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம்

webteam

இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 5ஆவது ஒருநாள் போட்டிக்குப் பின்னர் மைதான ஊழியர்களை ஆடைகளைக் களைய சொன்ன சம்பவத்துக்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் மன்னிப்புக் கோரியுள்ளது. 

ஹம்மந்தொட்டா மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியின்போது  மைதானத்தைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளில் 12க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். போட்டியின்போது அவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் சீருடை அளிக்கப்பட்டது. போட்டிக்குப் பின்னர் ஊதியத்தைக் கேட்ட அவர்களை, சீருடைகளை உடனடியாகத் திரும்ப அளித்தால் மட்டுமே ஊதியம் அளிக்க முடியும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதனால், கிரிக்கெட் வாரியம் கொடுத்த சீருடைகளைக் களைந்த பின்னரே அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டதாகவும் இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியானது. மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் உள்ளாடைகளுடன் மைதானத்தை விட்டு வெளியேறுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நடந்த சம்பவத்துக்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் கண்காணிக்கப்படும் என்றும், உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கை அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஜிம்பாப்வே அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. தரவரிசையில் பின்தங்கியுள்ள ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் அடைந்த தோல்வி எதிரொலியாக இலங்கை அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.