இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடுகிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் சிவம் மாவி இருவரும் புதுமுக வீரர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர். இந்தியாவின் டி20 அணியில் 100ஆவது வீரராக ஷிவம் மாவி மற்றும் 101ஆவது டி20 வீரராக சுப்மன் கில் அணிக்குள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் ஓபனர் இஷான் கிஷான் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலு, பின்னர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை அணி, அடுத்தடுத்து சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் என அனைவரையும் வெளியேற்ற 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. தொடர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் போராடினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தினர் இலங்கை பந்துவீச்சாளர்கள்.
இஷான் கிஷன் 37 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா 29 ரன்களில் வெளியேற இறுதியாக கைக்கோர்த்த அக்சர் பட்டேல் மற்றும் தீபக் ஹூடா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அக்சர் பட்டேல் 3 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாச, தீபக் ஹூடா 4 சிக்சர்களை பறக்கவிட இந்திய அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இலங்கை அணிக்கு தங்களுடைய சிறப்பான பந்துவீச்சால் பதிலடி கொடுத்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள். இன்பார்ம் வீரரான இலங்கை ஓபனர் பதும் நிஷாங்காவை போல்டாக்கி வெளியேற்றினார் சிவம் மாவி. பின்னர் களமிறங்கிய டி சில்வா விக்கெட்டையும் ஷிவம் மாவி கைப்பற்ற, உம்ரான் மாலிக் வீசிய பந்தில் ஒரு அற்புதமான கேட்சை எடுத்தார் இஷான் கிஷன். பின்னர் ஹர்சல் பட்டேல் அவருடைய பங்கிற்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்ற 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.
பின்னர் கைக்கோர்த்த கேப்டன் தசுன் ஷனகா மற்றும் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. கடைசி 6 ஓவர்களுக்கு 56 ரன்கள் தேவையான இடத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் ஹசரங்கா. 5 ஓவர்களுக்கு 53 ரன்கள் தேவை என்ற இடத்தில் சிக்சர், பவுண்டரி என மிரட்டிய கேப்டன் ஷனகா, 4 ஓவர்களில் 40 ரன்களுக்கு போட்டியை எடுத்து வந்தார்.
தொடர்ந்து 17ஆவது ஓவரை வீச வந்த உம்ரான் மாலிக்கின் பந்திலும் சிக்சர் அடித்து சனகா மிரட்ட, 4ஆவது பந்தில் பதிலடி கொடுத்து 155 கிமீ மின்னல் வேகத்தில் ஒருபந்தை வீசி ஷனகா விக்கெட்டை வீழ்த்தி வெளியேற்றினார் மாலிக். ஷனகா வெளியேறிய போது 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. கடைசி 3 ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவை என்ற இடத்தில் மீண்டும் பந்துவீச வந்த சிவம் மாவி, தன்னுடைய முதல் போட்டியிலேயே 4ஆவது விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
போட்டி இந்தியாவிற்கு தான் என நினைத்த நேரத்தில், கடைசி இரண்டு ஓவர்களுக்கு 29 ரன்கள் தேவை என்ற இடத்தில் பந்துவீச வந்த ஹர்சல் பட்டேல் நோ பால், ஒயிட், சிக்சர், 3 ரன்கள் என விட்டுக்கொடுக்க இலங்கை அணி 19ஆவது ஓவரில் 16 ரன்களை எடுத்தது. இதனால், கடைசி 6 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவை என்ற இடத்தில் கடைசி ஓவரை வீச வந்தார் அக்சர் பட்டேல். கடைசி ஓவரின் முதல் பந்தை ஒயிடாக வீச, போட்டியில் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. முதல் இரண்டு பந்துகளை டாட், 1 ரன்னாக மாற, மூன்றாவது பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார் கருணரத்னே. 4ஆவது பந்தை மீண்டும் அக்சர் டாட்டாக மாற்ற கடைசி 2 பந்துகளுக்கு 5 ரன்கள் தேவையென்ற இடத்தில் இரண்டு ரன்களுக்கான முயற்சியில் 9ஆவது விக்கெட்டை இழந்தது இலங்கை அணி.
கடைசி 1 பந்தை கருணரத்னே எதிர்கொள்ள கடைசி பந்தில் ஒரு ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது இலங்கை அணியால். விறுவிறுப்பான இறுதிகட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.
கடைசி ஓவரை அக்ஸர் பட்டேல் வீசியது ரிஸ்க் ஆன முடிவாகவே பார்க்கப்படுகிறது. ஸ்பின் ஓவர் என்பதால் சிக்ஸர்கள் பறக்கவிட வாய்ப்புண்டு. ஒரு சிக்ஸரும் பறந்தது. நுலிழையில் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியது. ரிஸ்க் ஆன முடிவை எடுத்து ஒரு வழியாக வெற்றியை பதிவு செய்தார் ஹர்திக் பாண்டியா.