இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் "விரேந்திர சேவாக்" என அதிரடி பெயரை வாங்கியிருக்கிறார் ஷபாலி வர்மா. இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 தொடரில் பயமின்றி எதிரணியின் பந்துகளை துவம்சம் செய்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்றவர். போட்டியில் முதல் பந்திலிருந்தே தனது அசத்தலான பேட்டிங் திறனை வெளிப்படுத்தக் கூடியவர். இதுவரை சேவாக் உலகின் எந்தப் பந்துவீச்சாளருக்கும் பயந்ததே இல்லை. இதனாலேயே அவருக்கு இன்றளவும் ரசிகர் பட்டாளம் எக்கச்சக்கமாக இருக்கிறது.
இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட் அளவுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரவேற்பில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. அதனை தனது அசத்தலான பேட்டிங் மூலம் மாற்றியவர் மித்தாலி ராஜ். ஆனால் இவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். டி20 போட்டிகளிலிருந்து பங்கேற்பதில் மித்தாலி ராஜ் விலகியுள்ளார். அவருக்கு பதிலாகத்தான் டி20 அணியில் கடந்தாண்டு சேர்க்கப்பட்டார் 15 வயதேயான ஷெபாலி வர்மா.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஷபாலி வர்மா கடந்த மே மாதம் நடந்த மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடினார். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் நாகலாந்து மாநிலத்துக்கு எதிரான போட்டியில், 56 பந்தில் 128 ரன்கள் விளாசி சாதனை படைத்திருந்தார் ஷபாலி. இந்த ஆட்டம் தான் இந்திய அணியில் ஷபாலி வர்மா இடம்பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கு பின்பு இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷபாலி வர்மா தன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பொதுவாக மகளிர் கிரிக்கெட் மெதுவாக செல்லும், விறுவிறுப்பாக ரன்கள் சேர்க்கமாட்டார்கள் என்பது ரசிகர்களின் பொதுவான கருத்து. ஆனால் அந்தக் கருத்தை ஷபாலி வர்மா தகர்த்தெரிந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி போல ஆடி புகழ்பெற விரும்புகிறேன் என தெரிவித்துள்ள ஷபாலி வர்மா, நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை பெற்றுள்ள வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக 46, வங்கதேசத்துக்கு எதிராக 39 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 29 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இவையெல்லாம் குறைந்த பந்துகளிலேயே ஷபாலி வர்மா எடுத்துள்ளார்.
உலகளவில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் அதிகளவு ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளவரும் ஷபாலி வர்மா தான். இதுவரை டி20 போட்டிகளில் 438 ரன்களை சேர்த்துள்ள அவரின் ஸ்ட்ரைக் ரேட் 147.7 ஆக இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பின்பு பேசிய ஷபாலி வர்மா "என் அதிரடி ஆட்டத்துக்கு ஆண் நண்பர்களுடன் பயிற்சி மேற்கொண்டதே காரணம், அதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பின்பு, என் தந்தைக்கும் நன்றிகள் அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்" என்றார்.