விளையாட்டு

"ஒன்றா இரண்டா ? மொத்தம் 7 தவறான முடிவுகள்" அம்பயர் பக்னரை சாடிய இர்பான் பதான் !

"ஒன்றா இரண்டா ? மொத்தம் 7 தவறான முடிவுகள்" அம்பயர் பக்னரை சாடிய இர்பான் பதான் !

jagadeesh

ஆஸ்திரேலியாவில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அம்பயர் ஸ்டீவ் பக்னர் செய்த தவறுகளால்தான் இந்தியா அந்தப் போட்டியில் தோற்றதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி அனில் கும்பளே தலைமயில் 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடினாலும் அம்பயர் ஸ்டீவ் பக்னர் பல தவறான முடிவுகளை கொடுத்தார். அது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக முடிந்து வெற்றிப்பெற்றது. ஆனால் அந்த டெஸ்ட் போட்டியில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அண்மையில் இது குறித்து பேட்டியளித்த பக்னர் "இது போன்ற தவறுகள் நடப்பது சகஜம்தான்" என ஒத்துக்கொண்டார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய இர்பான் பதான் " முன்பு செய்த தவறை இப்போது ஒத்துக்கொள்வதால் பிரயோஜனம் இல்லை. அப்போது நாங்கள் டெஸ்ட் போட்டியில் தோற்றுவிட்டோம். அப்போது செய்த தவறை இப்போது மாற்ற முடியாது. 2003 இல் முதல்முறையாக ஆஸ்திரேலியா சென்று என்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை அடிலெய்ட்டில் விளையாடினேன். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றது. அப்போது இந்தியா 21 ஆண்டுகளுக்கு பின்பு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வெற்றிக் கண்டது. அம்பயர்களின் தவறால் ஒரு போட்டியில் தோற்பது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்றார்.

தொடர்ந்து பேசிய இர்பான் "சில நேரங்களில் வானிலை, மோசமான பேட்டிங், பவுலிங் ஆகியவற்றால் போட்டியை இழப்பது வழக்கம். இது வீரர்களால் ஏற்றுக்கொள்ள முடியும், அந்தத் தோல்வியை நாங்கள் மறந்துவிடுவோம். ஆனால் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஒரு முறையா தவறு நடந்தது. மொத்தம் 7 முறை தவறான தீர்ப்பு அம்பயரால் கொடுக்கப்பட்டது. அம்பயரின் 7 தவறுகளால் நாங்கள் போட்டியில் தோற்றோம். அதில் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ்க்கு மட்டும் மூன்று முறை அவுட்டுக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது" என்றார் அவர்.