இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும், ரஞ்சி சீசனில் தொடர்ந்து பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிவருகிறார், சர்ஃபராஸ் கான்.
மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், கடந்த 2019-20ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் 154.66 சராசரியுடன் 998 ரன்களையும், 2021-22 ரஞ்சி சீசனில் 122.75 சராசரியுடன், 982 ரன்களையும், நடப்பு சீசனில் 89 சராசரியுடன், இதுவரை 801 ரன்களையும் எடுத்துள்ளார். அதாவது, இவருடைய சராசரி கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
சர்ஃபராஸ் கான், இதுவரை 37 முதல்தர போட்டிகளில் 53 இன்னிங்ஸ்களில் 3400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதில், மொத்தம் 13 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். இதில், ஒரு முச்சதமும் அடங்கும். இதையடுத்து, அவர் டெஸ்ட் தொடரில் இடம்பிடிப்பார் என கடந்த ஆண்டே பேசப்பட்டது.
குறிப்பாக, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற வங்கதேச டெஸ்ட் தொடரில் அவர் கட்டாயம் இடம்பிடிப்பார் என செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதற்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கும் 4 டெஸ்ட் பார்டர்-கவாஸ்கர் டிராபியிலாவது அவர் இடம்பிடிப்பார் என நம்பப்பட்டது. ஆனால் அதிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை.
இதுகுறித்து சர்ஃபராஸ் கானே, தாம் தேர்வுக் குழுவினரைச் சந்தித்ததாகவும் அவர்கள் விரைவில் தம்மைத் தேர்வு செய்ய இருப்பதாகவும் ஆனால், எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார். அவரைத் தேர்வு செய்யாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் தேர்வுக்குழுவைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், `இந்திய அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் தன்னை புறக்கணிக்கவே கூடாது’ என்பதில் உறுதியாக இருக்கும் சர்ஃபராஸ் கான் மீண்டும் ஒரு சதம் அடித்து, தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 66 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது.
அந்த நேரத்தில் களமிறங்கிய சர்ஃபராஸ் கான், 135 பந்துகளில் 125 ரன்கள் எடுத்ததுடன், மும்பை அணி 293 ரன்கள் எடுக்கவும் வித்திட்டார். இது, அவருக்கு ரஞ்சிப் போட்டியில் 13வது சதமாகப் பதிவானது. ரஞ்சி தொடரில் அவர் கடைசி 25 இன்னிங்ஸ்களில் 10 சதங்களையும் 5 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அவரை டெஸ்ட் தொடரில் சேர்க்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- ஜெ.பிரகாஷ்