“உலகக் கோப்பையை வெல்வது என்பது என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய லட்சிய கனவு. ஆனால், வருத்தம் கொள்ளும் வகையில் என்னுடைய கனவு முடிவுக்கு வந்துள்ளது” என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில், மொராக்கோ அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த போர்ச்சுகல் அணியும் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து மைதானத்தில் கண்கலங்கிய அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “போர்ச்சுகல் நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்வது என்பது என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய லட்சிய கனவு. சர்வதேச அளவில் போர்ச்சுகல் அணிக்காக நிறைய கோப்பைகளை வென்றிருக்கிறேன். ஆனால், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் பெயரை பொறிப்பது என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு. அதற்காக நான் போராடினேன். என்னுடைய கனவிற்காக மிகக் கடுமையாக போராடினேன்.
கடந்த 16 ஆண்டுகளில் 5 முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ள நான், என்னால் ஆன அனைத்தையும் கொடுத்தேன். என்னுடைய கனவையும், போராட்டத்தையும் ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆனால், வருத்தம் கொள்ளும் வகையில் என்னுடைய கனவு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நேரத்தில் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியவில்லை. எவ்வளவோ எழுதப்பட்ட பிறகும், எவ்வளவோ பேசப்பட்ட பிறகும் என்னுடைய எண்ணத்தில் உறுதியாக இருந்து போர்ச்சுகலுக்காக நின்றேன். இந்த நேரத்தில் நிறைய பேசமுடியவில்லை. நன்றி போர்ச்சுகல். கத்தாருக்கு நன்றி. இந்த கனவு நீடித்திருந்த வரை அழகாக இருந்தது. காலம் ஒவ்வொருவருக்கும் இறுதியான முடிவுகளை எடுக்க உதவும்” என பதிவிட்டுள்ளார். அவர் என்ன இறுதியான முடிவுகளை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.