இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா செய்த தவறை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் 14-வது லீக் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நேற்று நடைபெற்றது. லண்டன் கென்னிங்டான் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 (70) ரன்களில் ரோகித் ஷர்மா விக்கெட்டை இழந்தார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் ஷிகர் தவான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடித்து அசத்திய தவான்117 (109) ரன்களில் அவுட் ஆகினார். அதையடுத்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். அப்போது ஹர்திக் பாண்ட்யா சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் கேரி, அந்தக் கேட்சை பிடிக்காமல் விட்டுவிட்டார். அதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், “ஹர்த்திக் கொடுத்த கேட்சை அலெக்ஸ் கேரி விட்டது ஆட்டத்தின் மிகப் பெரிய தவறு. ஏனென்றால் ஹர்திக் பாண்ட்யா மாதிரியான ஒரு வீரருக்கு ஆட்டத்தில் மற்றொரு வாய்ப்பு வழங்கியது தவறு. அவர் எளிதில் ஆட்டத்தின் போக்கை மாற்றுக் கூடியவர்.
அத்துடன் ஷிகர் தவான் ஆட்டமிழந்த பின்பு தோனி அல்லது ஹர்த்திக் பாண்ட்யா களமிறங்கவேண்டும் என்று நான் நினைத்தேன். அதேபோல ஹர்திக் களமிறங்கியது சரியான முடிவுதான்” எனத் தெரிவித்துள்ளார்.