விளையாட்டு

ரிஷாப்பின் ’சின்னப்புள்ளத்தன’ தவறு: விளாசித் தள்ளிய ட்விட்டர்வாசிகள்!

ரிஷாப்பின் ’சின்னப்புள்ளத்தன’ தவறு: விளாசித் தள்ளிய ட்விட்டர்வாசிகள்!

webteam

பங்களாதேஷூக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் ரிஷாப் பன்ட் செய்த தவறு சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, 3 போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் பங்களாதேஷ், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணி, 15.4 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் சிறுபிள்ளைத்தனமான தவறு ஒன்றை செய்தார். அதாவது விக்கெட் கீப்பிங் செய்யும் போது, பந்து ஸ்டம்புக்கு பின்னால் வந்த பின் பிடித்துதான் ஸ்டம்பிங் செய்ய வேண்டும் என்பது விதி. விக்கெட் கீப்பிங்கின் அரிச்சுவடி இதுதான். ஆனால், இதை மீறிவிட்டார் ரிஷாப்.

பங்களாதேஷ் வீரர் லிட்டன் தாஸ், 17 ரன்னில் இருந்தபோது கிரீஷை விட்டு இறங்கி, சாஹல் வீசிய பந்தை அடித்தார். பந்து மிஸ்சாகி ரிஷாப் கைக்கு வந்தது. அவசரப்பட்ட அவர், பந்து ஸ்டம்புக்கு வருவதற்கு முன்பே பிடித்து, ஸ்டம்பிங் செய்தார். டிவி ரீப்ளேவில் அவரது கையுறை ஸ்டம்புக்கு வெளியே நீள்வது தெரிந்ததால், அது ’நோ’ பாலாக அறிவிக்கப்பட்டது. 

ரிஷாப்பின் இந்த செயல் சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.