இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அங்கீகாரமில்லாத டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
இந்திய ஏ கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்றது. வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுடனான தொடரை வென்று கோப்பையை கைப்பற்றிய இந்திய ஏ அணி, அங்கீகாரமில்லாத டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் நடந்த இரண்டு டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து, அடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் மோதும் நான்கு நாள் போட்டி வொர்சஸ்டரில் நடந்தது. இதில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, தமிழக வீரர் முரளி விஜய் ஆகியோர் இதில் பங்கேற்றனர். கருண் நாயர் தலைமையிலான இந்தப் போட்டியில் இவர்கள் தவிர, பிருத்வி ஷா, மயங்க் அகர்வால், ரிஷப் பண்ட், ஜெயந்த் யாதவ், நதீம், ராஜ்புத், சைனி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இங்கிலாந்து லயன்ஸ் அணியில் சர்வதேச போட்டியில் விளையாடும் அலைஸ்டர் குக், டேவிட் மலன், கிறிஸ் வோக்ஸ், டாம் பெஸ், ஜேக் லீக், சாம் குர்ரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இங்கிலாந்து லயன்ஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 423 ரன்கள் எடுத்தது. குக் அபாரமாக ஆடி 180 ரன்கள் குவித்தார். குப்பின்ஸ் 73 ரன்களும் மலன் 74 ரன்களும் எடுத்தனர். இந்திய ஏ அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நதீம் மூன்று விக்கெட்டுகளையும் அங்கித் ராஜ்புத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் பிருத்வி ஷா (62), ரிஷப் பன்ட் (58) ஆகியோர் மட்டுமே அரைசதத்தை எட்டினர். ரஹானே 49 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் குர்ரன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
பின்னர் இந்திய ஏ அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் இந்திய வீரர்கள் தடுமாறினர். முதல் இன்னிங்ஸில் 8 ரன்கள் எடுத்த முரளி விஜய், இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். பிருத்வி ஷாவும் டக் அவுட் ஆனார். மயங்க் அகர்வால் ஒரு ரன்னிலும் அவுட் ஆக, மூன்றாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 11 ரன்களை எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. கருண் நாயர் 13 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். ரஹானேவும் ரிஷப் பன்டும் மோசமான தோல்வியில் இருந்து அணியை மீட்க போராடினார்கள். இருவரும் முறையே, 48, 61 ரன்களில் அவுட் ஆனதும் நம்பிக்கைத் தகர்ந்தது. அடுத்து வந்தவர்கள் யாரும் நின்று ஆடாததால் 167 ரன்களுக்கு இந்திய ஏ அணி ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 253 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வெற்றி பெற்றது.