கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் இந்திய அணியினருடன் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து பயணம் செய்தது. நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. பின்பு அங்கேயே தங்கியிருந்து ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியிருக்கின்றனர்.
இப்போது தர்ஹாமில் இங்கிலாந்தின் கவுண்ட்டி அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இந்திய வீரர் ரிஷப் பன்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து அவருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதன் காரணமாக தர்ஹாம் சென்ற இந்திய அணியினருடன் பயிற்சி ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாமல் போனது. ஆனால் தர்ஹாமில் இருக்கும் ஹோட்டலில் ரிஷப் பன்ட் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்திய அணியினருடன் ரிஷப் பன்ட் இணைந்துள்ளார். இனி அவர் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்வார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.