விளையாட்டு

"ஐபிஎல் போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறோம்" ஐக்கிய அரபு அமீரகம் !

"ஐபிஎல் போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறோம்" ஐக்கிய அரபு அமீரகம் !

jagadeesh

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் முபாஷீர் உஸ்மானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ "நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறும்போது "ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது" என்றார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் முபாஷீர் உஸ்மானி "கல்ஃப் நியூஸ்"க்கு அளித்த பேட்டியில் "நாங்கள் ஏற்கெனவே பலமுறை சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடத்தி காட்டியிருக்கிறோம். ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு பொதுவான இடமாக இருக்கிறது. எனவே நாங்கள் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம்" என கூறியுள்ளார்.