சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் அம்பதி ராயுடு, இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. 32 வயதான இவர், கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்திருந்த இவருக்கு பின்னர் அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார் ராயுடு. இந்த வருடம் அவரைக் கண்டுகொள்ளவில்லை மும்பை. இந்நிலையில் அவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடி வரும் ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியமானவராக இருக்கிறார். அவரது அதிரடியான பேட்டிங், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற பின் பேசிய விராத் கோலி, ராயுடுவை பாராட்டினார். அவர் மீது நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறும்போது, ‘ராயுடுவின் ஃபார்ம் உற்சாகத்தை அளித்திருக்கிறது. அவர் சிறப்பாக விளையாடுகிறார். இதன் மூலம் இன்னும் சில தேர்வு வாய்ப்புகளை எங்களுக்கு தந்திருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.சிவராமகிருஷ்ணன் கூறும்போது, ’ராயுடுவின் இப்போதைய ஃபார்மை பார்க்கும்போது அவர் கண்டிப்பாக அணியில் சேர்க்கப்பட வேண்டும். அவர், இந்த ஐபிஎல் போட்டியில் நம்ப முடியாத சில ஷாட்களை அடித்திருக்கிறார். பிட்ச் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் பிரச்னையே இல்லை. அவர் அழகாக பந்தை விளாசுகிறார். இன்னும் அதிரடியாக ஆடுவார்’ என்றார்.