விளையாட்டு

முழங்காலில் காயம்: மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவீந்திர ஜடேஜா

முழங்காலில் காயம்: மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவீந்திர ஜடேஜா

jagadeesh

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழுங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 76 ரன்கள் மற்றும் 1 இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் பீல்டிங் செய்துக்கொண்டிருந்தபோது ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தீவிரத்தன்மையை அறிய அணி நிர்வாகம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது.

மருத்துவமனையில் ஜடேஜாவுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்கேன் பரிசோதனையில் பெரியளவில் பாதிப்பு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் அடுத்தப் போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெற இருப்பதால் இந்திய அணி நாளை ஹெட்டிங்ளேயில் இருந்து கிளம்புகிறது. இந்திய அணியுடன் ஜடேஜாவும் லண்டன் புறப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஜடேஜா தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஜடேஜாவால் விளையாட முடியாமல் போனால் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்படுவார் என கூறப்படுகிறது.