ரஹானேவிடம் அமர்ந்து பேசி ரவி சாஸ்திரி அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. மேலும் இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரஹானே மொத்தம் 95 ரன்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 61 ரன்களை லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அடித்தார் ரஹானே. ஆனால் லீட்ஸ் டெஸ்ட்டில் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
இது குறித்து ESPNCricinfo தளத்துக்கு பேசிய மணீந்தர் சிங் "ரவி சாஸ்திரி அனைவரையும் ஊக்கப்படுத்தக் கூடியவர். ரஹானே 80 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கிறார். அதனால் ரஹானே நிறையப் போட்டிகளில் விளையாடிவிட்டார் அதனால் அவருக்கு அறிவுறை தேவையில்லை என்று ரவி சாஸ்திரி நினைக்க கூடாது. சில நேரங்களில் மிகப்பெரிய வீரர்களுக்கும் ஊக்கப்படுத்துதல் அவசியமாகும். அதனால் ரஹானேவுடன் அமர்ந்து ரவி சாஸ்திரி பேச வேண்டும். அவரை ஊக்கப்படுத்த வேண்டும். இதற்கு முன்பும் ரஹானே பின்னடைவை சந்தித்துள்ளார். அதனால் அவர் மீண்டு வருவார்" என்றார்.
மேலும் பேசிய அவர் "ரஹானே ஆடுகளத்தில் மிகவும் படபடப்பாக இருக்கிறார். ஏன் அவ்வாறு இருக்கிறார் என எனக்கு தெரியவில்லை. இந்திய ஆடுகளங்களை காட்டிலும் வெளிநாட்டு ஆடுகளங்களில் ரஹானேவின் ஆவரேஜ் அதிகமாக இருக்கிறது. அப்படி இருக்கையில் ரஹானே எங்கு தவறிழைத்து கொண்டிருக்கிறார் என தெரியவில்லை. அடுத்தப் போட்டியிலும் ரஹானே விளையாடுவார். அடுத்த டெஸ்ட்டில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை சேர்க்கலாம். ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் இடம்பெறலாம். ஆனால் ரஹேனாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்" என்றார் மணீந்தர் சிங்.