விளையாட்டு

பட்லர், ஸ்மித் பார்ட்னர்ஷிப்பில் வீழ்ந்தது சென்னை : பறிபோனது ப்ளே ஆஃப் ?

பட்லர், ஸ்மித் பார்ட்னர்ஷிப்பில் வீழ்ந்தது சென்னை : பறிபோனது ப்ளே ஆஃப் ?

webteam

ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெற்றது. இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றதால் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் தகுதியை தக்க வைக்க முடியும் என்பதால் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்து 179 ரன்களை குவித்ததுடன், வெற்றியை நெருங்கி தோற்றதால் இந்த போட்டியில் அதேபோன்று ரன்களை குவித்து சரியான பவுலிங்கின் மூலம் வெற்றியை பெறலாம் என தோனி கணக்குப்போட்டார். அதற்கு ஏற்ப டாஸை வென்ற தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆனால் தோனி கணிப்புக்கு முற்றிலும் நேர்மறையாக சென்னையின் பேட்டிங் இருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாம் கர்ரன் மற்றும் டு பிளசிஸ் இருவருமே ஆர்ச்சரின் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். 10 (9) எடுத்திருந்தபோது ஆர்ச்சரின் பந்தில் கேட்ச்சாகி வெளியேறினார் டு பிளசிஸ். அவரைத் தொடர்ந்து வந்த வாட்ஸன் 2 பவுண்டரிகளை விளாசி தொடக்கத்திலேயே அதிரடியை காட்டினார். ஆனால் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்துவிட்டுச் சென்றார். பின்னர் வந்த ராயுடுவுடன் சேர்ந்து சாம் கர்ரனும் பந்துகளை மட்டை வைக்க ஆரம்பித்தார். இருவரும் பந்துகளை அறுத்ததுடன், 19 பந்துகளில் 13 ரன்கள் என ராயுடுவும், 25 பந்துகளுக்கு 22 ரன்கள் என சாம் கர்ரனும் அவுட் ஆகினர்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அணியின் ஸ்கோரை 100ஐ கடந்து கொண்டு சென்றனர். தோனி ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தப் போகிறார் என எதிர்பார்த்தபோது, எதிர்பாராத விதமாக 28 (28) ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அப்போதே சிஎஸ்கே ரசிகர்களின் மனம் உடைந்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால் ஆறுதலாக ஆடிய ஜடேஜா 30 பந்துகளில் 35 ரன்களை அடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 125 ரன்களை மட்டுமே எடுத்தது.

சென்னையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சொதப்பியிருந்தனர். சாம் கர்ரன் மற்றும் ராயுடு பந்துகளை அதிகம் எடுத்துக்கொண்டது பின்னடைவானது. தோனி ரன் அவுட் சென்னைக்கு பேட் லக் ஆனது. கடைசி நேரத்தில் ஜடேஜா அடிக்காவிட்டால் பெரும் பரிதாப நிலைக்கு சென்னை சென்றிருக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட்டார். 4 ஓவர்களுக்கு 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை அவர் சாய்த்திருந்தார். அத்துடன் ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ராகுல் திவாடியா தலா 4 ஓவர்களுக்கு 14 மற்றும் 18 ரன்களை மட்டுமே கொடுத்து, சென்னையின் ஸ்கோரை பெரிதும் கட்டுப்படுத்தினர்.

126 ரன்கள் என்ற எளிமையான இலக்கை எதிர்த்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை பவுலர்கள் செயல்பட்டனர். அதற்கே ஏற்ப பென் ஸ்டோக்ஸ் 19 (11) ரன்களில் விக்கெட்டை இழக்க, ராபின் உத்தப்பா 4 (9) ரன்கள், சஞ்சு சாம்சன் டக் அவுட் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சாய்ந்தன. சென்னைக்கு வெற்றி வாய்ப்பு வருமோ ? என நினைத்தபோது, ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் ஸ்மித் அந்த எண்ணத்தை உடைத்தனர். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பட்லர் அரை சதம் அடித்து அசத்தினார். சென்னை வெற்றி கைநழுவிப் போனது அப்போதே உறுதியானது. மறுபுறம் டெஸ்ட் பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்மித், 27 பந்துகளுக்கு 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். 16 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்களை எடுக்க, 24 பந்துகளுக்கு 14 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது.

அடுத்த ஓவரில் இருவரும் 12 ரன்களை விளாச, 18 பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. ஜடேஜா வீசிய 18 வது ஓவரில் 2 சிங்கிள்களை அடித்து எளிமையான ஒரு வெற்றி ராஜஸ்தான் அணி பதிவு செய்தது. கடைசி ஆட்டமிழக்காத பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களையும், ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்திருந்தனர். சென்னை பவுலிங்கில் விக்கெட்டுகளை வீழ்த்த பெரும் முயற்சி இருந்தாலும், பட்லர் - ஸ்மித்தின் தடுப்பு சுவர் பார்ட்னர்ஷிப் ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது.