விளையாட்டு

மும்பையை மூச்சுத்திணற வைத்த ராஜஸ்தான்..! சரவெடி வெடித்து சதம் கடந்த பென் ஸ்டோக்ஸ்...!

மும்பையை மூச்சுத்திணற வைத்த ராஜஸ்தான்..! சரவெடி வெடித்து சதம் கடந்த பென் ஸ்டோக்ஸ்...!

webteam

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும், டிகாக்கும் களமிறங்கினர். இதில் ஜோப்ரா ஆர்ச்சரின் அற்புதமான பந்துவீச்சில் டிகாக் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனையடுத்து இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த சூர்ய குமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் இஷான் கிஷான் 37 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் விளாசிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்திருந்தபோது ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மும்பை ரன்னை உயர்த்துவார் என நினைத்த பொல்லார்ட் 6 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். ரன் சேர்க்க முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்த மும்பையை திவாரியும், ஹர்திக் பாண்ட்யாவும் சரிவிலிருந்து மீட்க பாடுபட்டனர்.

இதில் திவாரி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக ரன்களை சேர்த்தார். இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 60 ரன்களை எடுத்தார். அதில் 7 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்தது. மும்பை அணி. ராஜஸ்தான் அணியை பொருத்தவரை ஆர்ச்சர், கோபால் தலா இரண்டு விக்கெட்டுகளையும் தியாகி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். ஆர்ச்சர், கோபால், திவாட்டியா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தது அணிக்கு பலம். ஆனால் ராஜ்புட்டும் கார்த்திக் தியாகியும் ரன்களை சரமாரியாக விட்டுக்கொடுத்தது அணிக்கு பலவீனம்.

இதைத்தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே சொதப்பியது. இரண்டாவது ஓவரை பேட்டின்சன் வீச பொல்லார்டு கையில் விக்கெட் கொடுத்து வெளியேறினார் ராபின் உத்தப்பா. ஆனால் பென் ஸ்டோக்ஸ் பவுண்டரி மழையாக பொழிந்தார். அதேபோல அதிரடியாக ஆடத்தொடங்கிய ஸ்மித், பேட்டின்சன் பந்திலேயே அவுட்டானர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸும் சஞ்சு சாம்சனும் அதிரடியாகவும் சரவெடியாகவும் ரன்களை குவித்தனர். பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். ராகுல் சாஹர், பொல்லார்டு, குர்னல் பாண்ட்யா, பும்ரா என யார் பந்து போட்டாலும் பொளந்து கட்டியது சாம்சன் - ஸ்டோக்ஸ் ஜோடி. 64 பந்துகளில் 100 ரன்களை சேர்த்தது இந்த ஜோடி. விக்கெட் எடுக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி பவுலர்கள் திணற ஆரம்பித்து விட்டனர் என்றே சொல்லலாம். ஒரு கட்டத்தில் பந்து எப்படி வந்தாலும் பவுண்டரி போகும் என்ற அளவிற்கு இருவரும் அடிக்க தொடங்கி விட்டனர். அதிவேகமாக சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்தார்.

இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் ருத்ரதாண்டவம் ஆடி 59 பந்துகளில் சதம் கடந்தார். 18.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை கைப்பற்றியது. பென் ஸ்டோக்ஸ் 60 பந்துகளில் 107 ரன்களுடனும் சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பென் ஸ்டோக்ஸ் 14 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசியிருந்தார். சஞ்சு சாம்சன் 4 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்திருந்தார்.

மும்பை இந்தியன்ஸை பொருத்தவரை பாட்டின்சன் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மற்ற பவுலர்கள் ஜொலிக்கவில்லை. பேட்டிங்கில் இருந்த வெறித்தனம் மும்பை இந்தியன்ஸுக்கு பவுலிங்கில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டது.