விளையாட்டு

தோல்வியில் இருந்து தப்புமா இந்தியா ? மூன்றாம் நாளில் மீண்டும் திணறல் !

தோல்வியில் இருந்து தப்புமா இந்தியா ? மூன்றாம் நாளில் மீண்டும் திணறல் !

jagadeesh

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. இதில் நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் இருந்து 39 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்று 348 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் இசாந்த் ஷர்மா 3 விக்கெட்களும், அஷ்வின் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்தி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆனால் பிருத்தி ஷா வெறும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மயங்க் அகர்வால் நிதானமாக விளையாடி 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தியாவை தோல்வியில் இருந்து மீட்பார்கள் என நினைத்த புஜாராவும், கோலியும் விரைவாகவே ஆட்டமிழந்தது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து திணறிக் கொண்டிருந்த நிலையில் விஹாரியும், ரஹானேவும் தோல்வியை தவிர்க்க போராடி வருகின்றனர்.

மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் விஹாரி 15 ரன்களுடனும், ரஹானே 25 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர். இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 39 ரன்கள் பின் தங்கியிருக்கிறது. தோல்வியை தவிர்க்க இந்தியா நாளை கடுமையாக போராடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டையும், டிம் சவுத்தி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.